அறிமுகமில்லாதவர்களுக்கு லிப்ட் கொடுத்ததால்  ரூ.2000 அபராதம்

மும்பை:   அறிமுகமில்லாத மூவருக்கு தனது காரில் லிப்ட் கொடுத்ததற்காக நவி மும்பையை சேர்ந்த ஒருவருக்கு ₹2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நவி மும்பையில் உள்ள ஐரோலியை சேர்ந்தவர் நிதின் நாயர். கடந்த 18ம் தேதி  இவர் தனது காரில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். ஐரோலி சர்கிள் அருகே வந்தபோது, அங்கு மழையில் நனைந்தவாறு ஒரு முதியவர் உட்பட மூவர் பேர் நின்றிருந்தனர். அவர்கள் ஏதாவது வாகனத்தில் லிப்ட் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவர்களை பார்த்த நிதின், எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு தாங்கள் காந்தி நகருக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறினர். தான்  அந்த வழியாகத்தான் செல்வதாக கூறி, அவர்களை காரில் ஏறிக்கொள்ளுமாறு நிதின் கூறியிருக்கிறார்.

மூன்று பேரும் காரில் ஏற முயன்றபோது அங்கு நின்றிருந்த போக்குவரத்து காவலர், காரை வழிமறித்து நிதினிடம் லைசென்சை கேட்டு வாங்கினார்.

மேலும், முன்பின் அறிமுகமில்லாதவர்களை காரில் ஏற்றுவது போக்குவரத்து விதிப்படி குற்றம் என்று கூறிய காவலர், மறுநாள் வந்து லைசென்சை காவல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதுபற்றி நிதின் கூறியதாவது:

“அடுத்த நாள் நான் காவல் நிலையத்துக்கு சென்றபோது எனக்கு எதிராக போக்குவரத்து சட்டத்தின் 66/192 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்துக்கு சென்று அபராதம் செலுத்தி லைசென்சை பெற்றுக் கொள்ளுமாறும் காவலர் கூறினார். எனது வழக்கறிஞர் நண்பரிடம் இது குறித்து கேட்டபோது இதுபோன்ற விதி சட்டத்தில் இருப்பதாக கூறினார். ஆகவே  நான் நீதிமன்ற்த்துக்குச்  சென்றேன். நீதிபதி ₹2,000 அபராதம் விதித்தார். என்னுடன் வந்த காவல் அதிகாரி கேட்டுக் கொண்டதற்கிணங்க அபராத தொகை ₹1,500 ஆக குறைக்கப்பட்டது. அதை செலுத்தி லைசென்சை திரும்ப பெற்றேன்” என்று தெரிவித்தார்.