சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பணிக்கு வராத நாட்களுக்கான சம்பளம் பிடிக்கப்பட்டு,  4ந்தேதிக்கு பின்னரே  சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டம், நிலுவை தொகை உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ந்தேதி முதல் ஒருவாரம் போராட்டம் நடத்தினர்.

அரசு மற்றும் நீதிமன்றம் எச்சரிக்கையை மீறி போராட்டம் நடத்தியதால், வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என்றும், பணிக்கு வராதவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போராட்டத்தை வாபஸ்பெற்ற ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கும் திரும்பினர்.

ஆனால், அவர்கள் ஜனவரி மாதத்திற்கான சம்பள பட்டியலை போராட்டத்திற்கு முன்பே கருவூலங்களுக்கு அனுப்பிவிட்டதால், அவர்களுக்கு முழு சம்பளம் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

ஆனால், தமிழக அரசு, ஜாக்டோ, ஜியோ போராட்டம் காரணமாக சம்பளம் வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து பணிக்கு வராத நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்து புதிய சம்பள பட்டியல் வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட சம்பள பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கி உள்ளது. அதன் காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு 4ந்தேதிக்கு பின்புதான் சம்பளம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.