maniyan
காந்திய மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தேர்தல் களத்தில் நம் அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதே இல்லை. அவற்றைப் பற்றி வாக்காளர்களும் பெரிதாகக் கவலைப்படுவதும் இல்லை. ஆனால், சென்ற ஆண்டு நடந்த தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின்படி மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதன் மூலம் மக்கள் நலனில் நாட்டமுள்ள மனிதர் என்பதை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நிரூபித்திருக்கிறார். கள்ளச் சாராயம் பெருகிவரும் என்றோ, பக்கத்து மாநிலங்களில் இருந்து மதுவகைகள் கடத்தப்படும் என்றோ, அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடும் என்றோ காரணங்களைக் கற்பித்து அளித்த வாக்குறுதியை அவர் காற்றில் பறக்க விடவில்லை.
“அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன்” என்று திரைப்பட வில்லனைப் போல் வசனம் பேசிக்கொண்டிருக்கும் தமிழக அரசு இனியாவது மதுவிலக்கு குறித்து சிந்திப்பது நல்லது. தமிழகத்தில் இன்று இரண்டு கோடிக்கு மேற்பட்டவர்கள் கொடுமையான குடிநோய்க்கு ஆளாகியிருப்பதை நினைவில் நிறுத்தி, முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும். மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரும் வாய்ப்பு கனிந்தால் நிச்சயம் மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று அவர் வாக்காளர்களுக்கு உறுதிமொழி வழங்க வேண்டும்.
ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவிலக்குக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஜெயலலிதாவும் வாக்குறுதி வழங்கினால், அடுத்து அமையும் அரசு எதுவாக இருப்பினும் மதுவற்ற மாநிலமாகத் தமிழகம் திகழும் என்று மக்கள் மகிழ்ச்சியடையக் கூடும். சுயநலத்தின் சுவடுகள் படியாத பொதுநலன் என்றே இல்லாத இன்றைய அரசியல் சூழலில் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய சொந்த நலனை நெஞ்சில் நிறுத்தியாவது தன் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு பற்றி தவறாமல் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.