டில்லி

தார் மற்றும் பாஸ்போர்ட் போன்றவை வைத்திருப்போர் அதன் விவரங்களை மக்கள் தொகை பதிவேட்டில் அவசியம் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பல சர்ச்சைகள் எழுத வண்ணம் உள்ளன.   தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு இது ஒரு முன்னோடி எனக் கருதப்படுவதால் பல இடங்களில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.   இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளுக்கு ரூ.8300 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக அறிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அந்த கணக்கெடுப்பின் போது ஆதார, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்ற அடையாள விவரங்களை விருப்பப் பட்டால் அளிக்கலாம் எனவும் அது கட்டாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.   அத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவரங்கள் அளிக்கப்படவில்லை எனினும் பரவாயில்லை எனத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு இதனால் தேசிய மக்கள் பதிவேடு பணியின் போது ஆதார் போன்ற தகவல்களை அளிக்க வேண்டுமா என்னும் சந்தேகம் எழுந்தது.  இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.  அந்த அறிக்கையில் காணப்படும் விவரம் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

அமைச்சக அறிக்கையில், ”பொது மக்களிடம் ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களில் எது இருந்தாலும் அவை குறித்த விவரங்களை மக்கள் தொகை பதிவேடு பணியின் போது அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.   ஆனால் இந்த அடையாள அட்டைகள் இல்லாதோர் அது குறித்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சகம், முன்பு விருப்பப்பட்டால் இந்த அடையாள விவரங்களைத் தெரிவிக்கலாம் என்பதன் பொருள் இந்த அடையாள அட்டைகள் இல்லை என்றால் காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்பதாகும் என விளக்கம் அளித்துள்ளது.   அத்துடன் இந்த அடையாள ஆவணங்கள் வைத்திருப்போர் அவசியம் அந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.