ண்டிகர்

பீகார் மற்றும் உ.பி மாநில பாராளுமன்ற இடைதேர்தலில் பாஜக தோல்விஅடைந்ததால் மக்களவை தேர்தலை முன்கூட்டி நடத்த அக்கட்சி நடவடிக்கை எடுக்கும் என மாயாவதி கூறி உள்ளார்.

நடந்து முடிந்த பீகார் மற்றும் உபி மாநில பாராளுமன்ற இடைத் தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் பாஜக தோல்வியை தழுவியது.   உத்திரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது.    இந்நிலையில் சண்டிகரில் நேற்று ஒரு பேரணி நடைபெற்றது.    அந்தப் பேரணியில் கலந்துக் கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி உரையாற்றினார்.

மாயாவதி, “தற்போது மத்திய மோடி அரசு சர்வாதிகாரமாக செயல் படுகிறது.   கடந்த 1975ஆம் வருடம் காங்கிரஸ் அரசு அமுல்படுத்திய நெருக்கடி நிலை சர்வாதிகாரத்தையும் தாண்டி உள்ளது.    இதற்கு பாடம் கற்பிக்க உத்திர பிரதேச மாநில கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகள் இடைத் தேர்தல் எங்கள் பகுஜன் சமாஜ் கட்சி தனது ஆதரவை சமாஜ்வாதி கட்சிக்கு அளித்து அவர்களுக்கு வெற்றியை அளித்தது.   இந்த முடிவுகளால் பாஜகவினர் தூங்கக் கூட முடியாத தவிப்பில் உள்ளனர்.

தோல்வி முடிவுகளால் துவண்டுள்ள பாஜக பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டிய நடத்த வாய்பு உள்ளது.   நடைபெற உள்ள 7-8 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுடன் பாராளுமன்ற தேர்தலையும் நடத்தலாம் என்னும் எண்ணத்தில் பாஜக உள்ளதாக தெரிகிறது.    தேர்தலை தாமதப்படுத்துவதால் தங்களின் வெற்றி வாய்ப்பு குறையும் என்பது பாஜகவினருக்கு தெரியும்.

வரும் தேர்தல்களில் பாஜக போன்ற அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வராமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.    தங்களின் தோல்வி பயத்தினால் பாஜக நிச்சயம் வாக்கு இயந்திரங்களில் மோசடிகளை நடத்தும்.  அதனால் இனி வாக்குச் சீட்டுக்கள் மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும்.

ஊழலை ஒழிப்பதாக வாக்களித்த மோடியின் ஆட்சியில் லலித், மல்லையா நிரவ் என மோசடிகள் தொடர்கின்றன.    மோடியின் வாக்குறுதிகள் பொய்யானவை என்பது இதனால் உறுதி ஆகி விட்டது “  என உரையாற்றினார்.