supreme-court
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதங்களை அவரது சார்பில் மூத்த வழக்குரைஞர் எல். நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நாகேஸ்வர ராவ் நேற்று முன்வைத்த வாதம் :
’’சொத்து குவித்ததாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரிக்கும் நடைமுறைகளை பெங்களூரு தனி நீதிமன்றம் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிரான ஆதாரங்களை ஆராய்வதைவிட, ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே வீட்டில் வசித்தது தொடர்பாகவும் தனியார் நிறுவனங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றியும் ஆராய்வதில் விசாரணை நீதிமன்றம் கூடுதல் கவனம் செலுத்தியது. வளர்ப்பு மகன் (சுதாகரன்) திருமணச் செலவுக்கான முழுத் தொகையையும் ஜெயலலிதாவே அளித்தது போன்ற தோற்றத்தை அளிக்க விசாரணை நீதிமன்றம் முயன்றது.
அதேபோல பல்வேறு காலகட்டங்களில் ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருள்களை “சட்டவிரோதமாக பெற்ற பொருள்கள்’ என்பது போலவும் சித்திரிக்க வழக்கு தொடுத்த சிலர் முயன்றதை விசாரணை நீதிமன்றம் அங்கீகரித்தது. “நமது எம்ஜிஆர்’ பத்திரிகைக்கான சந்தா கட்டணத் தொகை “உண்மையில்லை’ என்று குற்றம் சாட்டப்பட்டது. 1988-இல் அந்த பத்திரிகை தொடங்கப்பட்ட பின் 1990-ஆம் ஆண்டு முதல் சந்தா கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டது. இது தொடர்பான கணக்கை வருமான வரித் துறை தீர்ப்பாயம்கூட ஏற்றுக் கொண்டு விட்டது.
பரிசளிப்பது சட்டவிரோதம் அல்ல: ஓர் அரசியல் கட்சித் தலைவருக்கு அவரது கட்சித் தொண்டர்கள், ஆர்வலர்கள் பரிசு அளிப்பது “சட்டவிரோதமானது’ என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டத் தவறியதற்கு ஒப்பாகும். இந்த அம்சங்களை கர்நாடக உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வழங்கியபோது மேற்கோள்காட்டப்பட்ட சில அம்சங்களில் பிழை இருக்கலாம். ஆனால், அதை அடிப்படையாக வைத்து மட்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிடவில்லை. எனவே, இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்துவதே சரியாக இருக்கும்’’ என்று நாகேஸ்வர ராவ் வாதிட்டார். இதைத் தொடர்ந்து, தனது வாதத்தை நிறைவு செய்வதாக நாகேஸ்வர ராவ் குறிப்பிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள், “மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசும் ஜெயலலிதா தரப்பும் இதுவரை முன்வைத்த வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டனர்.