புதுடெல்லி: தனது அரசியல் எதிரிகளை கிண்டலடிக்கும் நோக்கில், டிஸ்லெக்சியா எனப்படும் மூளைக் குறைபாட்டு நோய் தொடர்பாக பிரதமர் மோடி பயன்படுத்திய உதாரணம், தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

‘ஸ்மார்ட் இந்தியா ஹேகதான்’ என்பதன் ஒரு பகுதியாக, மாணவர்களுடன் நடைபெற்ற ஒரு வீடியோ உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி. அப்போது பேசிய உத்ரகாண்ட் மாநில கல்லூரி மாணவி ஒருவர், ‘டாரே ஸமீன் பார்’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரத்தின் அடிப்படையில் சில விஷயங்களைப் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட மோடி, ‘இந்த யோசனை 40 அல்லது 50 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் சரிப்பட்டு வருமா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, “ஆமாம்” என்றார்.

உடனே மோடி, “அப்படியானால், அத்தகைய குழந்தைகளின் அம்மாக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்றார் சிரித்துக்கொண்டே.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் அவர் மகன் ராகுல் காந்தியை மனதில் வைத்துதான் பிரதமர் இப்படியாகக் கேட்டு கிண்டல் செய்தார் என்று விமர்சிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இந்தக் கிண்டலின் மூலம், பிரதமர் மோடி, மாற்றுத்திறனாளிகளை அவமதித்துவிட்டார் என்றும், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தேசிய அமைப்பு (NPRD) வலியுறுத்தியுள்ளது. மேலும், 2016ம் ஆண்டின் சட்டப்படி, பிரதமரின் செயலானது குற்றம் என்றும் அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, இதற்கு முந்தைய ஆண்டுகளிலும், தனது அரசியல் எதிரிகளை நையாண்டி செய்ய, இதுபோன்று, மாற்றுத்திறனாளிகளைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி