டில்லி

இந்திய விமானப்படை ஜெய்ஷ் ஈ முகமது மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்லாமியக் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். பல நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

இந்தியாவில் மேலும் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த தாக்குதலை முன்னின்று நடத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டு பயிற்சி பெறுவதாக தகவல்கள் வந்துள்ளன. அதை பாகிஸ்தானுக்கு தெரிவித்தும் அந்த நாடு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அடியோடு அழித்துள்ளது.

இந்த விவரங்களை இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் விஜய் கோகலே அறிவித்தார். அதை ஒட்டி இந்திய விமானப்படைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இஸ்லாமிய கட்சியன அகில இந்திய மஜிலிஸ் ஈ இத்தெதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஓவைசி, “புல்வாமா தாக்குதல் முடிந்து 2 அல்லது 3 தினங்களுக்குள்ளாகவே இந்த தாக்குதல் நடக்க வேண்டும் என நன் எதிர்பார்த்தேன். இந்த தாக்குதலை நான் வரவேற்கிறேன். நாங்கள் இந்த விவகாரத்தில் அரசை ஆதரிக்கிறோம். இதை ராணுவ நடவைக்கை இல்லை என வெளியுறவுத் துறை செயலர் தெரிவித்துள்ளார். ஆயினும் இத்தகைய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அரசு விரவில் மசூத் அசார் மற்றும் ஹஃபீஸ் சையத் ஆகியோரை பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.