வாஷிங்டன்: 

இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த அமெரிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என இனவெறி்க்குப் பலியானவரின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமெரிக்க அரசு பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியர் உள்பட வெளிநாட்டினர் வாழ்வதற்கு நெருக்கடி உருவாகியிருப்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே அங்கு இனவெறி தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்ற புதன்கிழமையன்று, கான்சாஸ் நகரத்தின் ஒலாதே பகுதியில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்ற பொறியாளர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆடம் பூரிண்டன் எனும் அமெரிக்கர் ”என் நாட்டை விட்டு வெளியேறு” என்று கூறிக்கொண்டே அவரை சுட்டுக் கொன்றார். இச்சம்பவம் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வு தொடர்பாக ஸ்ரீனிவாஸ் பணிபுரிந்த நிறுவனம் செய்தியாளர் சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. அப்போது பேட்டியளித்த ஸ்ரீனிவாசின் மனைவி சுனயானா, அமெரிக்க அரசு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் நடத்துவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?..என்று கேள்வி எழுப்பினார்.

அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடந்துவரும்  அமெரிக்காவில் வாழவேண்டுமா என தனது கணவர் ஸ்ரீனிவாஸிடம் தான்  கேட்டதாகவும் அதற்கு அவர் கணவர்,  நல்ல காலம் பிறக்கும் அதுவரை காத்திருப்போம் என்று தனக்கு ஆறுதல் அளித்தார் என்று கண்ணீர்மல்க செய்தியாளர்களிடம் சுனயானா கூறினார்.

இதனிடையே  பலியான சீனிவாஸ் குடும்ப நலநிதியாக வழங்க ரூ. 2 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. சீனிவாஸ் உயிரிழந்தாலும், அவரது குடும்பத்தினருக்கு, இந்த நிதி உதவி பயன்படும் என்று தன்னார்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.