இன்டர்நெட் முடக்கம் காரணமாக இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ரூ.660 கோடி வருவாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

internet

ப்ரூக்கிங்ஸ் என்ற நிறுவனம் செய்த ஆய்வில் மேற்க்கண்ட தகவல் தெரியவந்துள்ளது. இவர்கள் இன்டர்நெட் வேண்டுமென்றே முடக்கப்படும் 19 நாடுகளை ஆய்வு செய்ததில் ஜூலை 2015-இலிருந்து ஜூன் 2016 வரை இந்தியாவில் மட்டும் 70 நாட்கள் இன்டர்நெட் முடக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதைவிட அதிகமாக மொராக்கோ மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சிரியா ஆகிய நாடுகளில் இன்டர்நெட் முடக்கப்பட்டாலும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு இந்தியாவில்தான் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
இன்னொரு பக்கம் பிரதமர் மோடியின் “டிஜிட்டல் இந்தியா” திட்டம் காரணமாக இணையத்தின் பயன்பாடு இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. வாட்ஸ்சாப் மற்றும் வைபர் இவற்றின் பயன்பாட்டால் சட்டவிரோதமான, அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் செய்திகளை பரப்புவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற இணையதள ஆப்ஸ் வழியாக தகவல்கள் பறிபாறப்படும்போது கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம். ஆகவே சில சிக்கலான நேரங்களில் இணையத்தை துண்டிப்பதே தீர்வாக அமைகிறது. என்கிறார் சைபர் பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அமர் பிரசாத் ரெட்டி.
சில சிக்கலான சமயங்களில் அரசு இணைய தொடர்பை துண்டிக்க விரும்பினால் அது தொலைத்தொடர்பு துறையை தொடர்பு கொள்ளும். தொலைத்தொடர்பு துறை பின்னர் ஏர்டெல், பி.எஸ்.என்.எல் மற்றும் டாடா போன்ற நிறுவனங்களை தொடர்புகொண்டு இணைய தொடர்பை தற்காலிகமாக துண்டிக்கும்படி உத்தரவிடும்.
இப்படி இணையம் துண்டிக்கப்படுவது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்தான் அதிகம். அதேபோல குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கலவரங்கள் ஏற்பபட்ட சமயத்தில் இணைய தொடர்பு துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியிருந்தாலும் இணையத்தை துண்டிப்பது சரியான தீர்வு அல்ல என்பதை ஒத்துக்கொள்ளும் டாக்டர் ரெட்டி. சைபர் கிரைம் துறை தவறுகளைக் கண்டறியும் பணியில் மேம்படுவதே இதற்கு சரியான தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டார்.