1
உலகின் முதல் செயற்கைக்கோள்  விண்ணில் பறந்தது 
1959ம் ஆண்டு இதே நாளில்தான் உலகின் முதல் செயற்கைக்கோளான லூனா 1 – ஐ, சோவியத் ஒன்றியம் விண்ணில் ஏவியது. இது சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. லூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். லூனா 1 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 5995 கிமீ தூரத்துக்குள் ஜனவரி 4 ல் எட்டியது.
 
2
கொல்கத்தாவை பிடித்தார் ராபர்ட் கிளைவ்
1757ம் ஆண்டு இதே நாள்தான், கொல்கத்தா நகரம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படைகள் முகலாய நவாப் சிராஜ் உத் தவுலாவின் வசமிருந்து கொல்கத்தா நகரைக் கைப்பற்றின. ஆங்கிலேயர் வசமான இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா நகர் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் உறுதியான நாள் இன்று.
 
3
மீனாட்சி சுந்தரம்பிள்ளை நினைவு நாள்
தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1876ம் இதே நாள்தான் மண்ணுலகைவிட்டு மறைந்தார். இவர் தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். மீனாட்சி சுந்தரம்பிள்ளை, திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார்.
சிற்றிலக்கியக் காலம் என்று கூறப்பட்ட இவரது காலத்தில் திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் எழுதினார். 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவரே. புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றினார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார்.
பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியதாகக் அறியவருகின்றது.  இதுவரை அச்சில் வெளிவந்த இவரது நூல்கள் 75 ஆகும்.