vik1
தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான நடிப்பாற்றல் மூலம் முன்னுக்கு வந்தவர் நடிகர் விக்ரம். இன்று அவர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் வேலையில் அவரை பற்றிய சிறிய தொகுப்பு உங்களுக்காக. ஏப்ரல் மாதம் 17ம் நாள் 1966ம் ஆண்டு பரம்க்குடியில் பிறந்தவர் நடிகர் விக்ரம். ‘சீயான் விக்ரம்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 6 முறை ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, அம்ரிதா பட விருது, சர்வதேச தமிழ்ப் பட விருது எனப் பல்வேறு விருதுகளை வென்று, பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்-ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ பெற்றுள்ளார். நடிகர் விக்ரம், ‘அமராவதி’ படத்தில் அஜித்குமாருக்கும், ‘காதலன்’ படத்தில் பிரவுதேவாவிற்கும், ‘குருதிப்புனல்’ படத்தில் ஜானுக்கும், ‘மின்சாரக் கனவு’ படத்தில் பிரவுதேவாவிற்கும் மற்றும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அப்பாஸிற்கும் பின்னணிக் குரல் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மக்களின் நலனுக்காகப் பல சமூக நலத் தொண்டுகளைத் தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வரும் அவர், ‘சஞ்சீவனி டிரஸ்ட்’ மற்றும் ‘வித்யா சுதா’ ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகிறார்.
இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, விக்ரம் அடுத்த நடித்து வெளிவர இருக்கும் ‘இருமுகன்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ‘இருமுகன்’ படத்தில் ‘ரா’ உளவுப் பிரிவு ஏஜெண்ட் மற்றும் திருநங்கை என இரண்டு கதாபாத்திரங்களில் விக்ரம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.