பொன்.ராதாகிருஷ்ணன் - இல.கணேசன்
பொன்.ராதாகிருஷ்ணன் – இல.கணேசன்

“ஏழு மாவட்டங்களின் வழியாக கெயில் எரிவாயுக்குழாய் பதிக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. ஆனால் பாஜக, ஆதரிப்பது போல பேசி, எதிராக செயல்படுகிறது. அக்கட்சி தனது உண்மையான நிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்று மேற்கு மாவட்ட விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
தமிழகத்தின் மேற்கு பகுதியில்  ஏழு மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கு விவசாயிகள் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
கெயில் குழாய் பதிப்பு
கெயில் குழாய் பதிப்பு

இந்த எரிவாயு குழாய்களை பதித்தால் 7 மாவட்டங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  அவர்களது வாழ்வாதாரமான விளைநிலங்கள் கைவிட்டுப் போகும்.
மொத்தம் 884 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளதில், 504 கி.மீ. தமிழகத்தில் வருகிறது.  ஆகவே, இதற்கு பதிலாக, சாலையோரத்தில் குழாய் பதிக்க வேண்டும் என்று விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் கூறுகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் பேசுகின்றன. ஆனால், பா.ஜ.கட்சிக்குள் இருவேறுவித கருத்துக்கள் எழுப்பப்படுகின்றன.
“சாலையோரம் பதிப்பதையே, பாரதிய ஜனதா வலியுறுத்துகிறது” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன், தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்தார்.
ஆனால் அக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை சாலையோரம் பதிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை” என்று பேசினார்.
இது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விவசாய அமைப்புகள் பல பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
 
பொங்கலூர் இரா. மணிகண்டன்
பொங்கலூர் இரா. மணிகண்டன்

நம்மிடம் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன், “மக்களின் குரலாக ஒலிப்பது போல் காட்டிக்கொள்ள, இல.கணேசன் ஆதரவாக பேசுகிறார். ஆனால் அமைச்சரோ, எதிராக பேசுகிறார். இந்த விவகாரத்தில் தங்கள் கட்சியின் உண்மையான நிலைபாடு என்ன என்பதை பா.ஜ.க. அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கெயில் விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.