ஸ்லாமாபாத்

புதாபியில் நடைபெற உள்ள இஸ்லாமிய நாடுகள் அமைப்பு மாநாட்டுக்கு இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என அமீரக அரசுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமீரகம் சார்பில் அபுதாபியில் வரும் மார்ச் மாதம் 1-2 தேதிகளில் இஸ்லாமிய நாடுகள் அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினர் அந்தஸ்து அளிக்கப்பட்டு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டது. இந்தியா மதசார்பற்ற நாடு என்றாலும் இங்கு அதிக அளவில் இஸ்லாமியர்கள் வசிப்பதால் இந்த அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக அமீரகம் தெரிவித்தது. இந்த அழைப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பயங்கர வாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது புல்வாமாவில் இந்த மாதம் 14 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் மேலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு காஷ்மீர் எல்லைப்பகுதியில் அந்த இயக்கத்தினர் முகாம் இட்டிருந்தனர்.  நேற்று இந்திய விமானப்படை அந்த முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி முகாம்களை அடியோடு அழித்தது.

இதற்கு இஸ்லாமிய நாடுகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கையில்,”இந்திய விமானப்படை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று எல்லை தாண்டி சென்று நான்கு குண்டுகளை வீசி உள்ளது கண்டனத்துக்குரியது.  இது இந்த அமைப்பை உருவாக்கிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து இரு நாடுகளும் பொறுமையை கடைபிடித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே அந்த பகுதியில் அமைதியை கடைபிடிக்க முடியும். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுமே பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் ” என தெரிவித்தது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுரவு அமைச்சர் எஸ் எம் குரேஷி, “இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் மாநாட்டுக்கு இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை திரும்பப் பெற வேண்டும். இது குறித்து நான் அமீரக அரசுடன் பேசி உள்ளேன். ஏற்கனவே இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளதையும் தற்போது இந்திய விமானப்படை தாக்குதலால் அந்த அதிருப்தி அதிகரித்துள்ளதையும் விளக்கி இருக்கிறேன்.

இந்த அமைப்பு உருவாக்கவும் இதன் வளர்ச்சிக்கும் பாகிஸ்தான் செய்துள்ள தொண்டுகள் குறித்து அமீரக வெளியுறவு அமைச்சருக்கு நான் விளக்கம் தெரிவித்துள்ளேன். அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் இது குறித்து விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்லாமிய நாடுகள் அமைப்பு இந்த தாக்குதல் குறித்து இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதால் இந்த அழைப்பு ரத்து செய்யப்படும் என நம்புகிறேன்” என கூறி உள்ளார்.