a
 
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண் ட  தலித் இளைஞர் சங்கர்  உடுமலையையில் கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது மனைவி  கௌசல்யாவும் தாக்கப்பட்டு கோவை மருத்துவமனையல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் உடுமலையில் விசாரணை செய்தனர்.  உடுமலை காவல் நிலையத்துக்கு வந்த ஆணையத்தின் ஆராய்ச்சி அலுவலரான சந்திரபிரபா, கள ஆய்வாளர் கிளிஸ்டர் உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினார்கள்.  மேலும், சம்பவம் குறித்து முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, எந்தெந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களையும் கேட்டறிந்தார்கள்.

பிறகு,  கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.   உடுமலையை அடுத்த குமரலிங்கத்தில் உள்ள சங்கரின் வீட்டுக்கும் ஆணைய அதிகாரிகள் சென்றார்கள்.  அங்கு சங்கரின் தந்தைவேலுச்சாமியிடம் அரசு வழங்கிய நிவாரணம் பற்றியும்,  குடும்பத்துக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்கள்.
அடுத்ததாக, பல்லடத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினார்கள்.  மேலும்,  கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் சங்கரின் மனைவி கௌசல்யாவிடம் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.
அதிகாரிகளைப் பார்த்ததும் கதறியழுத கௌசல்யா, “என் அம்மா அன்னலட்சுமி, என் மாமா பாண்டித் துரை ஆகியோரும் இந்தகொலைக்கு காரணமானவர்கள்.  அவர்களைக் கைது செய்து விட்டீர்களா?” என்று அழுதபடியே கேட்டார். பிறகு, “அவர்களுக்கு கட்டாயம் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.
மேலும் அவர்,  தனது கணவர் சங்கரின் குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  கௌசல்யாவை சமாதானப் படுத்திய ஆணைய அதிகாரிகள்  தேவையான அனைத்து உதவிகளையும்  தாங்கள் செய்வதாக உறுதி அளித்தார். அதிகாரி சந்திரபிரபா கௌசல்யாவிடம் உனக்கு என்ன வேண்டும்? வேலைக்கு செல்ல விருப்பமா ? என்று கேட்டார். அப்போது கௌசல்யா நான் எனது படிப்பை தொடர நினைக்கிறேன் என்றார். ஆணைய அதிகாரி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுமார் 45 நிமிடம் இந்த விசாரணை நடைபெற்றது