1
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சென்னையில் வெளியிட்டார். அக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே. மணி உட்பட பலர் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அன்புமணி கூறியதாவது:
“எங்களது தேர்தல் அறிக்கையை தி.மு.க. கழகம் அப்படியே காப்பி அடித்திருக்கிறது. ஏற்கெனவே நாங்கள் வெளியிட்ட வரைவுத்திட்ட அறிக்கைகளில் இருந்து மொத்தம் 42 திட்டங்களை தி.மு.க.. தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறது. அவர்களுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது அத்திட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
ஜெயலலிதா, தி.முகவைப் பற்றி மட்டுமே விமர்சிப்பதற்குக் காரணம், பாமக மீதான பயம்தான். இந்தத் தேர்தல் எனக்கும் ஜெயலலிதாவுக்குமான போட்டிதான். தி.மு.க. இந்த களத்திலேயே இல்லை” என்றார்.
“கலப்புத்திருமணம் செய்பவர்களுக்கு அளிக்கப்படும் அரசு நிதி அதிகிரிக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பா.ம.க. அறிக்கையில் அது குறித்து ஏதும் சொல்லப்படவில்லையே” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.  அப்போது குறுக்கிட்ட ராமதாஸ், “தமிழகத்தில் அங்கங்கே கலப்புத்திருமணங்கள் நடக்கத்தான் செய்கிறது. அது சாதாரண விசயம். அதனால்தான் அது பற்றி குறிப்பிடவில்லை” என்றார்.
அன்புமணியிடம், “தேர்தலில் நிச்சயமாக வெற்றி அடைவேன் என்கிறீர்கள். பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்கிறீர்கள். அப்படியானால் தற்போது வகித்துவரும் எம்.பி. பதவியை எப்போது ராஜினாமா செய்வீர்கள்” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “அதை தேர்தலுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று பதில் அளித்தார்.
“வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று பலமுறை குற்றம்சாட்டியிருக்கிறீர்கள். ஆட்சிக்கு வந்தால், அச் சட்டம் தொடர்பாக எந்தமாதிரி நடவடிக்கை எடுப்பீர்கள்” என்று கேட்கப்பட்டபோது, கவனிக்காதது போல அக்கேள்வியைத் தவிர்தது, வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்துவிட்டார் அன்புமணி.