விக்ரமன்
விக்ரமன்

தென்னிந்திய  திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தனது அணியை எதிர்த்து போட்டியிடும் டைரக்டர்  விக்கிரமன் அணி குறித்து இயக்குநர் விசு, எழுதிய காட்டமான கடிதத்தை வெளியிட்டிருந்தோம்.
(அந்த செய்தியின் லிங்க்:  எழுத்தாளர் சங்க தேர்தல் மோதல்: விக்கிரமனுக்கு விசு காட்டமான கடிதம்!   )
அந்த கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து டைரக்டர் விக்ரமனிடம் கேட்டோம். பொங்கிவிட்டார் மனிதர்..
“இயக்குநர்கள் சங்கத்துக்கு தலைவராக இருப்பதால், எழுத்தாளர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சட்டமா இருக்கிறது?
எழுத்தாளர் சங்க தேர்தலில் போட்டியிட, ஐந்து படங்களுக்கு வசனமோ, திரைக்கதையோ, கதையோ எழுதியிருக்க வேண்டும் என்பதுதான் விதி. நான் இருபது படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். அதில் பதினோரு படங்கள் சூப்பர் ஹிட். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் என் படங்கள் ரீ மேக் ஆகியிருக்கின்றன.
ஆனால் என்னை எதிர்த்து விசு அணி சார்பில், தலைவர் பதவிக்கு நிற்கிறாரே.. மோகன் காந்திராமன்.. அவர் ஐந்து படங்களுக்கு பணியாற்றவில்லை.
ஆக அவர்கள் அணி தலைவருக்குத்தான் போட்டியிட தகுதி இல்லை”  என்றவரிடம், “ஏற்கெனவே நீங்கள் இயக்குநர் சங்கத்துக்கு தலைவராக இருக்கிறீர்கள். இதிலும் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால், பிரச்சினைகளில்  இயக்குநர் சங்க தலைவராக செயல்படுவீர்களா, எழுத்தாளர் சங்க தலைவராக செயல்படுவீர்களா என்று விசு கேட்கிறாரே” என்றோம்.
அதற்கு விக்கிரமன், “நியாயத்தின் பக்கம் செயல்படுவேன்” என்றார் சுருக்கமாக.
அடுத்ததாக, “உங்கள் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வி.சி. குகநாதன், பெப்சியில் பொறுப்பில் இருந்தபோது கோடிக்கணக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்று விசு குற்றம் சாட்டியிருக்கிறாரே..” என்றோம்.
 
மோகன் காந்திராமன்
மோகன் காந்திராமன்

“மோகன் காந்திராமன்தான் பெப்சியில் ஊழல் செய்து சிக்கிக்கொண்டார். 16 லட்ச ரூபாய் கையாடல் செய்துவிட்டார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. “நான் வயதானவன்.. கருணை காட்டுங்க” என்று அவர் கெஞ்சியதால், ஆறு லட்ச ரூபாய் திருப்பித் தர வேண்டும் என்று எழுதி வாங்கப்பட்டது. அதிலும் மூன்று லட்ச ரூபாய் தந்துவிட்டு, மீதம் மூன்று லட்ச ரூபாயை இன்னமும் அவர் தரவில்லை. இப்போதும் பெப்சி பேலன்ஸ்ஷீட்டில், வருடா வருடம் மோகன் காந்திராமன் மூன்று லட்சம் பாக்கி என்று எழுதப்படுகிறது.
அதுமட்டுமல்ல…  திரைத்துறையினருக்கு என்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள், வேளச்சேரியில் 100 ஏக்கர் நிலத்தை 1992ம் ஆண்டு ஒதுக்கினார். திரைத்துறையினர் தங்களது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் கட்டினார்கள். அதை அப்படியே ஏமாற்றி, அரசு ஒதுக்கிய இடத்தை தாரை வார்த்தவர்தான் மோகன்காந்திராமன். நான்கூட 15 ஆயிரம் கட்டி ஏமாந்துவிட்டேன்.
அன்று அரசு ஒதுக்கிய நிலத்தின் மதிப்பு இன்று 2000 கோடிக்கு மேல் இருக்கும். அப்படிப்பட்ட மோசடிக்காரர் மோகன்காந்திராமன். இவர்கள்தான் அடுத்தவரை குறை சொல்கிறார்கள்” என்று காட்டமாகச் சொன்னார் விக்ரமன்.
ராதாரவி
ராதாரவி

 
“நடிகர் ராதாரவி உங்கள் அணியில்  செயற்குழு உறுப்பினராக போட்டியிருகிறார். அவர் எந்த படத்துக்கு கதை வசனம் எழுதினார். தவிர, அவர் நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகித்த போதே முறைகேட்டில் ஈடுபட்டார் என்று புகார் இருக்கிறது. அந்த புகார் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக  நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் அறிவித்துள்ளார்கள். இந்த நிலையில் அவரை உங்கள் அணியில் நிறுத்துவது ஏன்” என்றோம்.
“ராதாரவி ஒரு போராளி. நாடக நடிகர்களுக்காக குரல் கொடுப்பவர். அதே போல, எழுத்தாளர்களின் நியாயத்துக்காகவும் குரல் கொடுப்பார். அதற்காகத்தான் அவரை நிறுத்துகிறோம். அவர் எங்கள் அணிக்கு பலம் சேர்ப்பவர்!” என்று சொல்லி முடித்தார் விக்ரமன்.

  • டி.வி.எஸ். சோமு