சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா

எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதிய எழுத்துக்களை அவர் மீதான சர்ச்சைகள் புகழ் பெற்றவை.  அதில் ஒன்று அவரது “பாரீஸ் விஜயம்: பற்றியது.

அவரை பாரீஸுக்கு அழைத்த நண்பர்கள் பட்டபாட்டை, “பக்கத்தின் பக்கம்: என்ற இணைய பக்கத்தில் “கற்சுறா” என்பவர் எழுதியிருக்கிறார்.

“ பாரீசில் சாரு “ என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை படித்துப்பாருங்கள்.. பயங்கரமாகத்தான் இருக்கிறது..!

சாரு என்ற அயோக்கியனைப்பற்றி என்வாழ்நாளில்  ஒருபோதும் எழுதக்கூடாது என்றே எண்ணுவேன். அது ஒரு வெட்கக் கேடான விடையமாகவே எனக்கு எப்போதும் இருக்கும்.

அவன் எழுதும் பலவற்றை பார்க்க நேரிடும் போது மிக அதிகமான கோபம் தோன்றிவிடும். அவை மிக அதிகமான பொய்களால் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை அறியாத யாரோ சிலருக்காக எந்த வெட்கமும் இல்லாது எவ்வித குற்ற உணர்வும் இல்லாது அவன் அவற்றை எழுதியிருப்பான். அவன் எதற்காக எ\ழுதுகிறான் என்று எப்போதோ அவனுக்கு அருகில் இருந்தவர்கள் சிலர் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கும் அது வெட்கமாய் இருக்கும்.

அந்த அயோக்கியனால் இலக்கியம் என்ற மிகப்பெரிய சுத்துமாத்தினால் மிக இலகுவாக ஏமாற்றப்பட்டவர்களாக அவர்கள் இருந்தவர்கள். அப்படியானவர்களில் நானும் எனது பாரீஸ் நண்பர்கள் சிலரும் அடக்கம். அந்த ஏமாற்றத்துடனும் வெட்கத்துடனும்தான் அவன் குறித்து எழுதவே வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதை கட்டாயம் எழுத வேண்டும் என எண்ணி எழுதவில்லை. இப்படியே விட்டால் பிற்காலத்தில் சிலவற்றை சம்பவங்களை மறந்து போவேன் என்ற காரணத்தால் நேரம் வரும் வேளைகளில் பதிந்து வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். அவ்வளவுதான்

இதனை எழுது என்று கரைச்சல் தந்த நண்பர்களுக்கு நன்றிகள்.

கதை 1

கதையின் தொடக்கத்தில் நான் முடிவை எழுதுகிறேன்.

பாரீசில் அவன் எங்களுடன் சில காலங்கள் இருந்துவிட்டு அன்று தமிழ்நாடு திரும்புகிறான்.

பாரிசில் இருந்த காலங்களில் அதிகமான நாட்களை அதிகமான நாட்கள் என்ன அவ்வளவு காலமும் எனது வீட்டிலேயே தங்கி நின்றான். அவன் வந்த ஆரம்ப காலங்களில் ஒரு இலக்கிய சேவகனுக்கு எழுத்தாளனுக்கு அப்படியிருக்கின்ற எமது நண்பனுக்கு தோழனுக்கு என்று நாம் என்னவெல்லாம் செய்வோமோ அவற்றையெல்லாம் மனசாரச் செய்தோம். ஆள்மாறி ஆள் மாறி அவனைத் தாங்கினோம். நண்பன் சோபா,  சுகன், ஸ்ராலின்  தேவதாஸ் என்று பாரீஸில் அவனைத் தாங்கிப் பிடிக்காத நண்பர்கள் இல்லை. போகும் வரும் இடங்களில் படம் எடுக்க வேண்டும் என்று நண்பன் சுகன் ஒரு கமராவைக்கூட  யாரோ ஒருவரிடம் கடன் வாங்கி அவன் கையில் கொடுத்தான். சில வேளைகளில் அருகில் நாம் இல்லாது இருந்தால் தனியே அந்தரிக்கப்படாது என்று அவனது கையில் நானும் சோபாவும் 200பிராங்கும் கொடுத்தோம். அதிகமான இடங்களை மறைந்த தோழர் புஸ்பராசாவின் காரிலும் எனது காரிலும் அவனை ஏற்றித் திரிந்து காண்பித்தோம். அற்புதமான பாரீஸ் நகரின் அத்தனை அழகையும் அவ|னுக்கு இவ்வாறுதான் காட்டினோம் என்றே நினைக்கிறேன்.

அன்று அவன் தமிழ்நாடு திரும்பும் நாள். முதல் நாள் நண்பர் அரவிந் அப்பாத்துரை வீட்டில் நிகழ்ந்த பார்ட்டியில் பங்கு கொள்கிறோம்.  அதிகாலை வரை அப்பாத்துரையின் வீட்டிலிருந்து அவனை கிளப்பிக் கொண்டுவர முடியவில்லை. கடந்த சில தினங்களாக அவன் தந்த துன்பம் எம்மை சந்தேகம் கொள்ள வைத்தது. அவனை எப்படியாவது  அனுப்பித்தொலைக்க வேண்டும் என்பதே எல்லோரது நோக்கமும். நண்பர் அரவிந் அப்பாத்துரையும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவரும் தனது தந்தை சுகவீனமாக இருக்கிறார் அவருக்கு கொடுத்து விடும்படி அன்றிரவு 2000பிராங் பணத்தையும் அன்று அவனிடம் கொடுத்திருந்தார்.

அதிகாலை எனது வீட்டிற்கு வந்து படுத்தவன் எழுந்திருக்கவேயில்லை ஒரு கிழமையாக செய்த சொப்பிங் பொருட்கள் ஹோல் எங்கும் பரவியிருக்கிறது. எதையும் சூட்கேசுக்குள் அடுக்கவில்லை. மதியம் விமான நிலையத்தில் நிற்க வேண்டும். நான் உடனேயே சோபாவுக்கு போன் பண்ணினேன். என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே நீ வா என்றேன். அரை மணி நேரத்தில் சோபா வந்தான். தன்னை ஒரு மணி நேரத்திற்குள் 1000 பக்கங்களை  எழுதச் சொல்லுங்கள் எழுதித் தருகிறேன் என்னால் இவற்றை அடுக்க முடியாது என்றான் சாரு. நாம் மனதிற்குள் சிரித்தோம். இங்கேயே நின்று விடுவானோ என்று எமக்கு மேலதிகமாகப் பயம் பிடித்தது. இல்லை சாரு எப்படியும் பைகளை அடுக்க வேண்டும் என வற்புறுத்தி சோபா சொல்லி அடுக்கினான். நான் பிறேம் ரமேசுக்கும் மாலதி தாபிதாவுக்கும் கொஞ்ச பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன். வாங்கும் போது இவன் மீது வந்த சந்தேகத்தில் எதையெல்லாம் அவர்களுக்கு வாங்கினேனோ அதையெல்லாத்தையும் இவனுக்கும் வாங்கினேன். எல்லாவற்றையும் அடுக்கி எடுத்துக் கொண்டுவிமான நிலையம் புறப்பட்டோம்.

சுகன் தான் கடன் வாங்கிய கமரா எங்கே என்றான் அதனை எனது வீட்டில் வைத்துவிட்டதாகச் சொன்னான். விமான நிலையத்தில் சூட்கேசுகளைக் கொடுத்ததும் ஓவர் லக்கேஜ் என்றார்கள். உடனேயே நாங்கள் பைகளில் வெயிட்டின் அளவைக் குறைப்பதற்காக பைகளைப்பிரித்து பொருட்களைக் குறைத்தோம். சந்தையில் வாங்கிய பச்சைமிளகாய் உட்பட அதற்குள் இருந்தது.  அப்படியான பல பொருட்களை எடுக்க வேண்டிவந்தது. அதற்குள் ஒளித்து மறைத்த சுகனது கமராவையும் எடுத்துவிட்டு அனுப்பினோம்.

இமிக்கிறேசன் அதிகாரிகளைக் கடந்து அவன் கையைக் காட்டிச் சென்றதும் இந்தமுறை ஆள்மாறி வந்திட்டுது அடுத்தமுறை எப்படியாவது ஸீரோ டிகிரி எழுதியவனைக் கூப்பிட வேண்டும் என்றான் சோபாசக்தி.

தமிழ்நாடு சென்று பிரேம் றமேசினது பொருட்களையோ அல்லது அரவிந் அப்பாத்துரையின் பணத்தையோ அவன் கொடுக்கவேயில்லை.

அவன் தொடர்ந்தும் எங்களைப்பற்றி தவறாகவே எண்ணிவைத்திருக்கிறான்.

(தொடரும்)

என்னது தொடருமாமாமாமா….

 

(குறிப்பு:  இந்த கட்டுரை குறித்து சாரு நிவேதிதாவின் எண்ணில் தொடர்புகொண்டோம். நாட் ரீச்சபிள்.  விரைவில் தொடர்புகொண்டு அவரது கருத்தையும் பிரசுரிக்கிறோம்.)