veeramani
1-4-2016 வெள்ளியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருச்சி – பெரியார் உலகம் சிறுகனூரில் நடைபெற்ற மாநாடுகளின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டும் – நன்றியும் 2016 மார்ச்சு 19, 20 சனி, ஞாயிறுகளில் திருச்சி பெரியார் உலகம் சிறுகனூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு (ஜாதி – தீண்டாமை ஒழிப்பு மாநாடு) சமூகநீதி மாநாடு ஆகியவற்றின் ஈடு இணையற்ற சிறப்புமிகு வெற்றிக்கு பெரிதும் பாடுபட்ட, நிதி வசூல், பிரச்சாரம், சகல வசதிகளுடனும் மாநாட்டுப் பந்தல் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் சிறப்பாகப் பாடுபட்டு முத்திரை பொறித்த கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், கழக ஆதரவாளர்கள் அனைவருக்கும் திராவிடர் கழக தலைமை செயற்குழு மனம் நிறைந்த பாராட்டுகளையும், உளம் கனிந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
திருச்சி – சிறுகனூரில் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு வரவேற்பு திருச்சி சிறுகனூரில் கடந்த 19, 20 தேதிகளில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இரு மாநாட்டுத் தீர்மானங்களையும்வரவேற்று, அவற்றைச் செயல்படுத்துவதில் முழு மூச்சாக ஈடுபடுவது என்று இச்செயற்குழு முடிவு செய்கிறது.
தந்தை பெரியார் அவர்களால் இறுதியாக அறிவிக்கப் பட்ட, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் மனித உரிமைப் போராட்டத்தில், தந்தை பெரியார் காலத்திலும், அவர்களின் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமையிலும், அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையிலும் திராவிடர் கழகம் பிரச்சாரம், போராட்டம் ஆகிய செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டும், நீதிபதிகள் தலைமையில் ஆணையங்கள் அமைக்கப்பட்டும், அவற்றின் பரிந்துரைகள் அடிப்படையில் சைவக் கோயில்களிலும், வைணவக் கோயில்களிலும் 69 சதவீத அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு 208 பேர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இருவர் மரணம் அடைந்த நிலையில் 206 பேர்கள் தேர்வில் வெற்றி பெற்று, தீட்சை பெற்று கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட இருந்த காலகட்டத்தில், அதனை எதிர்த்து மதுரை சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.
அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால், மனுதாரர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படுவதற்குத் தடை விதிக்காத நிலையில், (16.12.2015) ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சியும், தீட்சையும் பெற்றுத் தயாராக உள்ள 206 பேர்களையும் தமிழகக் கோயில்களில் நியமனம் செய்வதற்குப் பதிலாக தமிழக அரசு அமைதி காத்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தமிழகக் கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ள 206 பேர்களையும் நியமனம் செய்யுமாறு தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு, திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் கடிதம் எழுதப்பட்டது. (21.12.2015). ஆனால், முதல் அமைச்சரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை.
இந்த நிலையில் 19.3.2016 சனியன்று திருச்சியையடுத்த சிறுகனூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படியும், திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தபடியும் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 18 அன்று (18.4.2016) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.
சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி தலைமையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தின் முன்பும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், வாய்ப்புள்ள இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.
ஆதரவு அளித்தும், பங்கு கொண்டும் இந்த மனித உரிமைப் போராட்டத்தை வெற்றியாக்கித் தருமாறு அனைத்துத் தரப்பு தமிழர்களையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.