noise1மிழகத்தில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன,” என தேர்தலில் தோல்வியுற்ற அன்றைய முதல்வர் மு.பக்தவத்சலம் கூறியபோது பரவலான கண்டனங்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமில்லையே, ஒரு முதல்வருக்குரிய கண்ணியமில்லையே என்று 1967ல் ஏடுகள் எழுதின.
இப்போதோ கள்ளவாக்குக்களாலேயே ஜெயித்தார்கள், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள், தேர்தல் கமிஷனை விலைக்கு வாங்கிவிட்டார்கள் அல்லது மிரட்டிவிட்டார்கள் என்ற ரீதியில்தான் பதவியிலிருந்து அகற்றப்படும் தலைவர்கள் கூறுகின்றனர். யாரும் முகம் சுளிப்பதில்லை. சரிதான், இவர்கள் வேறு எப்படிப் பேசுவார்கள் எனக் கடந்து செல்கிறோம். ஆங்கிலத்தில் சொல்வதானால் இதுவே new normal, எனவே எவரும் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.
ஆனால் வைகோவின் அண்மைய சீற்றங்களுக்குப் பிறகு சற்றே ஆங்காங்கே பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது – சிந்தனை. வரைமுறையற்றுப் போகிறதோ பொதுவெளி உரையாடல்கள் என்ற கவலை பலருக்கும் வந்திருக்கிறது.
மறைந்த தீவிர திராவிட இயக்க ஆதரவாளர், பிராமண எதிர்ப்பாளர் எம் எஸ் எஸ் பாண்டியன் ஒரு முறை மேடைப்பேச்சின் தரம் குறைந்ததற்கு எல்லோரும் திமுகவை, பொதுவாக திராவிட இயக்கத்தைக் குறை சொல்கின்றனர், இது அடாது, அணுகுண்டு அய்யாவு போன்ற காங்கிரஸ் பேச்சாளர்கள் பலர் படு கேவலமாக, ஆபாசமாகப் பேசியிருக்கின்றனர் தெரியுமா எனக் கேட்டு  நீண்டதொரு கட்டுரை எழுதினார்.
இருந்திருக்கிறார்கள். இல்லையெனக்கூற முடியாது. காமராசரே திமுகவினை கூத்தாடிகள் கட்சி என்று வர்ணித்தார்தானே. ஆனால் எல்லாம் ஒருவித கட்டுக்குள் இருந்தது.
திருநெல்வேலி செல்லபாண்டியன், கண்டிப்புக்குப் பெயர்போன சட்டப்பேரவைத் தலைவர், தஞ்சையில் ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது, ஒரு பேச்சாளர் கன்னாபின்னாவென்று திமுகவினரை தாக்கிக்கொண்டிருந்தார்.
இவர் வேகமாக எழுந்து அவரை அங்கிருந்து தள்ளிவிட்டு, “நான் சபாநாயகர் ஒரு கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதே தவறு….ஏதோ கேட்டுக்கொண்டார்களே என வந்தால் நீங்க இன்ன இஷ்டத்துக்குப் பேசுறீங்க…என் பதவிக்கு ஒரு ப்ரெஸ்டிஜ் இருக்குதுய்யா கெடுத்துறாதீங்க” என்று கடுப்படித்துவிட்டு, இவர் தன் பேச்சை எவரும் அறிமுகப்படுத்தாமலேயே துவங்கிவிட்டார். அரை மணிநேரம் என்னவோ நாடு, தேசபக்தி, கடமை என்றெல்லாம் பேசிவிட்டுப் போனார். தவறியும் ஒரு வார்த்தை எதிர்க்கட்சியினரை விமர்சிக்கவில்லை.
தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தோற்றுபோனார் ! பின்னாலே பேரவைத்தலைவரான தமிழர்களின் தந்தை சிபா அனைத்து மரபுகளையும் தாண்டி தன்னை திமுக காரனாக காட்டிக்கொண்டார். மு.க முதல்வராக பல உதவிகள் செய்து அமைச்சராகவும் ஆனார்.
பின்னால் வானளாவிய அதிகாரம் படைத்த பி ஹெச் பாண்டியன், நெடுஞ்சாண்கிடையாக காலில் விழும் சேடப்பட்டி, முதல்வர் வந்தால் பாதி இருக்கையிலிருந்து எழுவது, அவர் அவையில் இருக்கும்போது தவறிப்போயும் சாய்ந்துகொள்ளாதிருப்பது என பெருமை மிகு பாரம்பரியம் தொடர்கிறது.
ராசாராம், தமிழ்க்குடிமகன், காளிமுத்து போன்றோர் கண்ணியமாகவே நடந்துகொள்வர்.
நான் இங்கே சொல்லவருவது காங்கிரஸ்காரர்களெல்லாம் யோக்கியர்கள் என்றல்ல. ரமணிபாய் என்றொருவர் இருந்தார். சட்டமன்றத்திற்குக் கூட ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எகிற ஆரம்பித்தால் நெளியவேண்டியதுதான்.
ஒருவகையில் நன்னிலம் நடராசன், தீப்பொறியார், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா இவர்களுக்கெல்லாம் முன்னோடி. ஆனால் அவர்கள் அளவு வரம்பு மீறமாட்டார்.
என்னைப் பொறுத்தவரை பொதுவெளி மேடை நாகரிகம் சீரழியத்தொடங்கியது பெரியாரிலிருந்துதான். பார்ப்பனரை, கடவுளரை, காமராஜ் முதல்வராவதற்குமுன் காங்கிரஸ்காரர்களை, சகட்டுமேனிக்குப் போட்டுத் தாக்குவார். அவரது அஸ்வமேத யாக வர்ணனையெல்லாம் கிளுகிளுப்புத்தான். அதற்காகவே அவரது கூட்டங்களுக்குச் செல்லும் இளைஞர்கள் உண்டு,
அவர் அப்படி தடாலடியாகப் பேசியதற்கு சில நியாயமான காரணங்கள் இருந்திருக்கலாம். பிராமணர்கள், கடவுள்கள் மீதான பிரமை தகர்க்கப்படவேண்டும். உங்களால் என்ன செய்துவிடமுடியும் என்று கேட்கும் துணிச்சல் மக்களிடையே வரவேண்டும் என்பதால் அவர் அப்படிப் பேசியிருப்பார். தவிரவும் பரந்து பட்ட மக்களிடம் தீவிர சமூக மாற்ற சிந்தனைகள் சென்றடைய சற்று கொச்சையாகப் பேசலாம் என்றும் அவர் கருதியிருக்கக்கூடும். ஆனால் அவர் தவறானதொரு முன்னுதாரணத்தைக் காட்டிவிட்டார்.
நாடகங்கள் மூலமாகவும் பின்னர் திரைப்படங்கள் வழியேயும் பிரபலமான அவரது வாரிசுகள் நாகரிகம் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. திராவிட நாடு எங்கிருக்கிறது என்று அண்ணா சட்டமன்றத்திலேயே அனந்த நாயகிக்கு அளித்ததாக சொல்லப்பட்ட விளக்கம், சிரிமாவோ நேரு சந்திப்பு குறித்த அவரது ’ஊகம்,’ நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல அவர் படிதாண்டா பத்தினியுமல்ல என ஒரு நடிகை குறித்து கூறியது, கம்பரசம் என நீளும் அவர்கள் பொதுவெளி மொழி.
(அனந்த நாயகியே லேசுப்பட்ட நபரில்லை, அவர் கோபப்பட்டால் இரு செவிகளிலிருந்தும் புகைதான்!!)
ஆனால் பொதுவாக இளைஞர்களை கிறங்க அடித்தே திமுகவிற்கு ஆள் சேர்த்தனர் என்று கூட சொல்லுவார்கள். ஆனால் முதல்வரான பிறகு அண்ணா கண்ணியம் காத்தார் என உறுதியாகச் சொல்லலாம்,.
மற்றவற்றைப் போல் இதிலும் குழிதோண்டிப் புதைக்கும் மாபெரும் பணியினைத் துவக்கிவைத்தவர் நம் கலைஞர்தான். எதிரிகளை ஆள் வைத்து அடிப்பதும் மேடைகளில் ஆபாசமாக அர்ச்சிப்பதும் அவரது தலைமையில் தழைத்தோங்கியது.
எம்ஜிஆரை ஒட்டுப்புல் டீக்கடை நாயர் என்றெல்லாம் பேசியும் ஒன்றும் நடக்கவில்லை. வெறுத்துப்போய் அவ்வித பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டார்.
நாணயம் மிக்கவராக, நாநயம் மட்டுமல்ல என்று அட்டகாசமாகத் துவங்கிய புரட்சியார் பின்னர் கருணாநிதியை விஷச் செடி, தீய சக்திகளின் மொத்த ஒருவம் என்று மேடைக்கு மேடை பேசினார்.
அவரைக் குஷிப்படுத்த அவர் மேடையிலிருக்கும்போது தொண்டரடிப்பொடிகள் மிகக் காட்டமாகப் பேசுவார்கள்.
”கத்தி வெச்சுக்குங்க,” என முதல்வராக இருந்த போது எம் ஜி ஆர் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியது உசுப்பேற்றலின் இன்னொரு கட்டம்.
துகிலுறி நேரத்தில், மேடையில் கருணாநிதி அமர்ந்திருப்பார் லத்தீப் பாய் துரைமுருகன் எல்லோரும் ஜெயலலிதா இழக்க என்னவிருக்கிறது என்ற ரீதியில் கொச்சையாகப் பேசுவார்கள், முதல்வர் கூட்ட அழைப்பிதழால் வாயை மூடிக்கொண்டு சிரிப்பார்.
அ இஅதிமுக பிளவின் போது வீரப்பன் அணியினர் நடத்தும் கூட்டங்களில், இப்போது தலைவிக்கு சேவகம் புரிந்துகொண்டிருக்கும் டாக்டர் சமரசம் பால்கனிப் பாவை எனப் பாடல்களைப் பாடி உற்சாகத்தைக் கூட்டுவார். ஜெயலலிதா பற்றி கேட்கவே வேண்டாம், சென்னாரெட்டி என் கையைப் பிடித்து இழுத்தார், ஜானகி அம்மாள் மோரில் விஷம் கல்ந்து கொடுத்து எம் ஜி ஆரைக் கொன்றார், நால்வர் அணி உதிர்ந்த ரோமம், எம் என் எருமை மாடு இப்படி முடிவில்லாமல்,
இப்போதோ துப்பல் நிபுணரைத் தலைவராக வரித்துக்கொண்டிருக்கும் தென் தமிழ்நாட்டுக் கோமான் தன் விசுவாசத்தைக் காண்பிக்க மற்றவர்கள் வெட்கித் தலைகுனியுமளவு பேசுகிறார்.
தோழர் வழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன் குறிப்பிடுவதுபோல், “என் பெண்ணை அழைத்துப்போ எனச் சொல்ல நான் என்ன மேளக்காரனா,” என்று காடுவெட்டி குரு பகிரங்கமாகப் பேச, பண்பாடு பற்றி நீட்டி முழக்கும் மருத்துவர் முறுவலிக்கிறார்.
பெரியாரின் பேரனே அருவருப்பான மொழியினை அவ்வப்போது பயன்படுத்துகிறார்.
இந்த சீரழிவு இத்துடன் நிற்கும் எனத் தோன்றவில்லை. இவ்வளவு மோசமாகப் பேசிய பிறகும் மக்கள் நலக்கூட்டணியினர் வைகோவை தங்கள் ஒருங்கிணைப்பாளராகத்தானே வைத்திருக்கின்றனர்.
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு என்றால் அந்த தனித்துவம் இதுதானா?