பாஜ இளைஞரணி தலைவர்

டெல்லி:
ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமாரின் நாக்கை அறுத்தால் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த பாஜ இளைஞரணி தலைவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமினில் விடுதலையானார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சிறையில் இருந்து வெளியே வந்த கண்ணையாகுமார் தொடர்ந்து பாஜ, பிரதமருக்கு எதிராக பேசி வருகிறார்.
இந்நிலையில் பாஜ இளைஞரணி (பிஜேஓய்எம்) பாடவுன் மாவட்ட தலைவர் குல்தீப் வார்ஷ்னே பேசுகையில்,‘‘ அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தேச விரோத கோஷங்களை எழுப்பி வருகிறார். கண்ணையாகுமாரின் நாக்கை துண்டிக்கும் நபருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும்’’ என்றார்.
இந்த அடாவடி பேச்சுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து அவரை கட்சி பதவியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பென்ட் செய்து பாஜ நடவடிக்கை எடுத்துள்ளது.
இது   தவிர டெல்லியில் பரபரப்பு போஸ்டகர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‘கண்ணையா குமாரை கொலை செய்வோருக்கு ரூ. 11 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என்று புருவஞ்சல் சேனா என்ற அமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்ணையாகுமாரின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்குமாறு டெல்லி போலீஸ் ஜேஎன்யு நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் கண்ணையாகுமாரின் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கருத்து எழுந்துள்ளது.