a
 
ங்கிலாந்தில் பிறந்த கிரிக்கெட்டை இரவு பகலாய் கூடுமிடங்களில் எல்லாம் கூடி நின்று ரசித்து- விவாதித்து- கொண்டாடி- அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரின் நிலைமை என்ன ஆகுமோ என்ற பதைபதப்புபோல்- இருக்கை நுனியில் அமர்ந்து கிரிக்கெட் ரசிக்கும் தமிழா… தற்போது நடந்து முடிந்துள்ள நம் தமிழகத்தில் பிறந்த விளையாட்டான கபடியை (புரோ கபடி லீக்) எத்தனை தமிழர்கள் கண்டு ரசித்தார்கள்? இதுவரை 3 முறை நடந்த புரோ கபடி லீக் போட்டிகளில் நம் தமிழகத்தை பிரதிநிதித்து ஏன் ஓர் அணி கூட இடம் பெறவில்லை?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டன. ஆனால், கபடியின் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து எந்த ஓர் அணியும் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனை. பழந்தமிழரின் ஆதி விளையாட்டான கபடி தற்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது.
பிறந்த மண்ணில்தான் கபடி விளையாட்டு குறைந்திருக்கிறதே தவிர , ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் எல்லாம் சிறப்பாய் நட்த்தப்படுகிறது.வங்கதேசத்தின் தேசிய விளையாட்டாக கபடிதான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது.13 உலக நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது என்பதுதான் உண்மை.
இந்தியாவுக்குத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தொடர்ந்து ஏழு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
தற்போது நடைபெற்று முடிந்த 3 புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக புகழ்பெற்ற தமிழக வீரர்கள் பலரும் விளையாடி உள்ளனர். அணியின் பயிற்சியாளர்களாகவும் தமிழர்கள் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டைப்போல் புரோ கபடிக்கும் வீர்ர்கள் ஏலம் விடப்படுகின்றனர். ஏலத்தொகை கிரிக்கெட்டைப்போல் கோடிகளில் இல்லை… வெறும் இலட்சங்களில் மட்டுமே இந்த வீர்ர்கள் ஏலம் போகின்றனர். . ஆனால் நம் தமிழக அணி வீர்ர்களை ஓர் அணியாக மாற்றி தமிழகத்தின் பெயரில் களம் காண வைக்க எவரும் முன் வரவில்லையே ஏன்?
நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளுக்குகூட நடிக வீர்ர்களை(?) ஏலத்தில் எடுக்கும் செல்வந்தர்களும், மிகப்பெரிய நிறுவனங்களும் கபடியை மட்டும் கண்டு கொள்ளாதது ஏன்?
தமிழர்களின் விளையாட்டு என்று சொல்லக்கூடிய கபடிப்போட்டியில் நம் மாநிலத்தின் பெயரில் ஓர் அணியைக்கூட ஏன் இதுவரை களமிறக்க முடியவில்லை.? நம் மாநிலத்தில் கபடி வீர்ர்களுக்கா பஞ்சம்? அடுத்தவர்களுக்காக ஆடும் நம்மவர்களை ஏன் நமக்காக விளையாட வைக்க முடியவில்லை? இதுவரை 3 புரோ கபடி லீக் போட்டிகள் முடிந்து விட்டன. இப்போட்டிகளில் எல்லாம் தமிழகத்தில் பிறந்த வீர்ர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ‘தமிழ்நாடு அணி’ என்ற பெயர் எப்போது இடம் பெறப்போகிறது…?
ஒரு காலத்தில் வீதிக்கு வீதி- ஊருக்கு ஊர் இரவு பகலாய் மின்னொளி ஆட்டத்தில் திருவிழாவாய் நடந்த கபடிப் போட்டிகள் காணாமல் போனது ஏன்? கபடி..கபடி என்று மூச்சு விடாமல் தம் கட்டி தொடை தட்டி கிட்டத்தட்ட ஒரு ஜல்லிக் கட்டுக் காளையைப்போல் சீறி வரும் கபடி வீரனை கண்டு ரசித்த கண்கள் காணாமல் போனது எங்கே?
உணர்ச்சியும் கொந்தளிப்பும் நிறைந்த அந்த ஆர்ப்பரிப்பு ஆட்டம் இன்று அடங்கிப் போனது ஏன்?கபடியையும் கபளீகரம் செய்து விட்டதா கிரிக்கெட்? எல்லாவற்றிலும் ரசனை மாறிய தமிழன், தன் தாய் மண்ணில் பிறந்த கபடியையும் தொலைத்து விட்டானா….? ஜல்லிக்கட்டைப்போல் கபடிக்கும் இது அந்திமகாலம்தானோ…?
-பழ.அசோக்குமார் (முகநூல் பதிவு)