ku

சென்னை:

தி.மு.க.வை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இமைந்த குஷ்பு இன்று நடைபெற்ற வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

பிரபல. நடிகை குஷ்பு திடீரென தி.மு.க.வில் சேர்ந்தார். அப்போது கட்சித் தலைவரான கருணாநதியின் வாரிசுகளான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி அணிகள் என பல கோஷ்டிகள் செயல்பட்டன. தவிர கருணாநிதி அணி என ஒன்றும் சீனியர்களை உள்ளடக்கியதாக இருந்தது.

தி.மு.க.வில் குஷ்பு சேர்ந்த போதிருந்தே கருணாநிதி அணியைச் சேர்ந்தவராகவே பார்க்கப்பட்டார்.

தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்ட போது அழகிரி அணியினர் சிறு அளவில் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கினர். அப்போதே குஷ்பு பகிரங்கமாக ஸ்டாலினை எதிர்த்து பேட்டி அளித்தார்.
இதனால் கொந்தளித்துப் போன ஸ்டாலின் ஆதரவாளர்கள், நிகழ்ச்சி ஒன்றுக்காக திருச்சி வந்த குஷ்புவை தாக்கினர். சென்னையில் உள்ள குஷ்பு வீடும் தாக்குதலுக்கு உள்ளானது.

இதையடுத்து தி.மு.க.வில் தனது செயல்பாடுகளை குஷ்பு குறைத்துக்கொண்டார். . பிறகு திடீரென குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகுவதாக கருணாநிதியிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

இந்த நிலையில் திடுமென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சேர்ந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் திமுகவை விட்டு அவர் விலகியது குறித்து பலவித யூகச் செய்திகள் ஊடகங்களில் வந்தபோதும், குஷ்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, “நான் தி.மு.க.வில் இருந்து வெளியேறதற்கு காரணம் இருக்கிறது; அதை நான் வெளிப்படுத்த மாட்டேன்; எனக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் தெரிந்த அந்த விஷயத்தை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை” என்று திட்டவட்டமாக கூறினார்.

தி.மு.க.விலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த குஷ்பு, தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் கருணாநிதியும் கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் இருந்த கருணாநிதியை வணங்கிய குஷ்பு, அவரிடம் நலம் விசாரித்தார். இருவரும் மகிழ்வுடன் பேசிக்கொண்டார்கள்.

தி.மு.க.வில் இருந்து மனத்துயருடன் வெளியேறிய குஷ்பு அதன் பிறகு முதன் முறையாக அக் கட்சி தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.