images
“கலப்பட பாலுக்கு காரணம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே தவிர பால் முகவர்கள் அல்ல. ஆகவே கலப்பட பால் உற்பத்தியாளர்கள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளில் யூரியா, வாஷிங் சோடா, டிடர்ஜெண்ட் ஆயில், பிணங்களை பதப்படுத்த பயன்படுத்தும் பார்மாலின், வார்னிஷ், சோயா பவுடர், ஜவ்வரிசி உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயணப் பொருட்கள் மற்றும் தண்ணீர், குளுக்கோஸ் கலப்படம்  செய்யப்படுகிறது. உற்பத்தியாகும் பாலில்  68 சதவீதம் கலப்படம் நடைபெறுவது”  என்று   2012ம் ஆண்டு  அக்டோபர் மாதம்,  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கலப்பட பால் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிடும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
நியாயமாக, கலப்படப் பாலை உற்பத்தி செய்பவர்களைத்தான் தண்டிக்க வேண்டும்.   பால் பாக்கெட்டில் உள்ளே இருப்பது தரமான பாலா? அல்லது கலப்படப் பாலா என்பதை தெரியாமல் விற்பனை செய்யும் பால் முகவர்கள் மற்றும்  வியாபாரிகளுக்கு ஆயுள் தண்டனை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ஆகவே, “அந்தந்த மாநில அரசுகள் ஒரு குழு அமைத்து அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் வாரத்திற்கு ஒரு முறை அதிரடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.  ஆய்வின் போது பாலில் கலப்படம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள், அதிகாரிகள் மீதும் ஜாமினில் வெளிவர முடியாத கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.  சம்பந்தப்பட்ட அந்த தொழிற்சாலையை மூடி சீல் வைக்க வேண்டும்” என்று கடந்த 2012 முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வந்து வருகிறோம்.
ஆனால்  இதுவரை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ பாலில் கலப்படம் பற்றி  கண்டு கொள்ளவே இல்லை.  உணவு பொருட்களின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மெளனம் சாதிக்கிறார்கள்.
மருத்துவம், குடிநீர் இவற்றுக்கு  அடுத்து உயிர் காக்கும் உன்னதப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம் செய்வது மக்களின் உயிரோடு விளையாடுவதாகும். இனியேனும் மத்திய மாநில அரசுகள் பால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். அதைவிடுத்து  அப்பாவியான பால் முகவர்கள் மீது பழி போடக்கூடாது” இவ்வாறு தனது அறிக்கையில் பொன்னூசாமி கூறியுள்ளார்.