ராஜமாணிக்கம்பிள்ளை படத்தின் முன்னே ஏ. சுப்பிரமணியன்
ராஜமாணிக்கம்பிள்ளை படத்தின் முன்னே ஏ. சுப்பிரமணியன்

 
சில சமயங்களில் எதிர்பாராமல், அதிசய மனிதர்களை சந்திக்க நேரிடும். அதிசய மனிதர் என்றால்,  இரண்டு தலைகள் அல்லது மூன்று கண்கள்  உடையவர்கள்  என்று நினைத்து விடாதீர்கள். அதிசயமான செய்திகளை மனதிற்குள் தேக்கி வைத்திருப்பவர்களைத்தான் அப்படிச் சொல்கிறேன்.
அப்படி ஒரு நபர்.. ஓய்வு பெற்ற பேராசிரியர் ஏ. சுப்பிரமணியன். இவரைப்பற்றி  நம்மிடம் கூறிய நண்பர், “எம்.ஜி.ஆரை காப்பாற்றியவர்.. கருணாநிதிக்கு நெருக்கமானவர்..” என்று இண்ட்ரோ கொடுக்க, உடனடியாக சுப்பிரமணியனை சந்திக்க புறப்பட்டேன்.
வடபழனி சிக்னல் நூறடி சாலை அருகில் இருக்கும் சுப்பிரமணியன் வீட்டு முன்  நமது கார் நிற்க… ஓடிவந்து வரவேற்றார்  சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க இளைஞர் சுப்பிரமணியன்.  ஆமாம்.. அவரது சுறுசுறுப்பு, மலர்ந்த முகம், கம்பீர குரல் எல்லாமே இளைஞராகத்தான் அவரைக் காட்டியது.
மாடியில் இருக்கும் தனது அறைக்கு  அழைத்துச் சென்று  சுடச்சுட தஞ்சாவூர் டிகிரி காபி கொடுத்தவர்,  காபி மணம் கமழ பேச ஆரம்பித்தார்: “என் பூர்வீகம் தஞ்சாவூர்.  என் தாத்தா கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை என்றால் அந்தக் காலத்தில் தெரியாதவர்களே கிடையாது.  திருவனந்தபுரம் சமஸ்தான வித்வானாக இருந்தவர்” என்ற சுப்பிரமணியனிடம், “கருணாநிதிக்கு நீங்க ரொம்ப நெருக்கமாமே.. அப்படி இருந்தும் எம்.ஜி.ஆரையே காப்பாற்றினீர்களாமே!” என்றேன்.
“நான் காப்பாற்றினேன் என்று சொல்லக்கூடாது. எல்லாம் இறைவன் சித்தம்..” என்று தன்னடக்கத்தோடு அவர் சொன்னாலும், சஸ்பென்ஸ் எகிறிக்கொண்டே போகிறதே என்கிற தவிப்பு எனக்கு. ஆகவே அவரே பேசட்டும் என்று விட்டுவிட்டேன்.
பேராசிரியர் சுப்ரமணியம் தொடர்ந்தார்:
“தி.மு.க. தலைவர் கலைஞர் எனக்கு உறவுக்காரர்தான்.  முதல்வராக முதன் முதல் பதவியேற்ற பிறகு கும்பகோணம் வந்த அவர், என் தாத்தா ராஜமாணிக்கம் பிள்ளையிடம்  ஆசீர்வாதம் வாங்கினார். ஆனால் எனக்கும் கலைஞருக்கும் அப்போது நேரடி பழக்கம் இல்லை.
எமர்ஜென்சி காலத்தில் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அவரை நேரில் சந்தித்த சிலரில் நானும் ஒருவன். அப்போதுதான் அவரை நேரடியாக பார்க்கிறேன். அந்த சந்திப்புக்குப் பிறகு அவ்வப்போது பார்ப்பது உண்டு.
எமர்ஜென்சி முடிந்து, தேர்தல் நடந்து  தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார்.
அந்த சமயத்தில், கலைஞருக்கு ஒரு சந்தேகம்.  மாநில உளவுத்துறை, தன் வீட்டு டெலிபோன் பேச்சுக்களை ரகசியமாக பதிவு செய்வதாக அவர் நினைத்தார்.   ஆகவே தன் வீட்டிலிருந்து முக்கிய போன்கள் செய்வது பாதுகாப்பில்லை என்று தீர்மானித்தார்.  போன் பேசுவதற்காகவே,  என் வீட்டுக்கு வருவார்.  முக்கியான நபர்களை  இங்கிருந்தபடியே போனில் தொடர்புகொண்டு பேசுவார்.
 
தனது வீட்டில் கலைஞருன் சுப்பிரமணியன்
தனது வீட்டில் கலைஞருன் சுப்பிரமணியன்

பெரும்பாலும் மாலை நேரத்தில் காரில் என் வீட்டுக்கு வரும் கலைஞர், போன் பேசிவிட்டு, சிற்றுண்டி சாப்பிட்டு கிளம்புவார்.
இப்படி கலைஞர், வாரத்துக்கு மூன்று நான்கு முறை வீட்டுக்கு வருவார். அதே போல, மறைந்த முரசொலி மாறனும் அவ்வப்போது வீட்டுக்கு வந்து போன் பேசிவிட்டுச் செல்வார்.
அந்த சமயத்தில் நான் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் நண்பர்கள் சிலர், “எதிர்க்கட்சிக்காரர்களான  கலைஞர், மாறன் ஆகியோர் உன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது உனக்கு நல்லதல்ல. கல்லூரி பேராசிரியாராக..  அரசு ஊழியராக இருக்கும் நீ எச்சரிக்கையாக இரு” என்றார்கள்.
ராமண்ணா
ராமண்ணா

ஆனால் நான் அவர்களது எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை.
ஆனால், கொஞ்ச நாட்களிலேயே மாநில உளவுத்துறைக்கு மூக்கில் வேர்த்துவிட்டது.  “கலைஞர் அடிக்கடி இந்த வீட்டுக்கு வருகிறாரே” என்று யோசித்தவர்கள், என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள்.
பிறகு விரிவாக மேலிடத்துக்கு நோட் போட்டு அனுப்பிவிட்டார்கள். இந்த குறிப்பு முதல்வர் எம்.ஜி.ஆரிடம் செல்ல, உளவுத்துறை மூத்த அதிகாரியை அழைத்திருக்கிறார். “அந்த சுப்பிரமணியன் எனக்கு மிகவும் வேண்டியவர். அவருக்கு ஏதும் தொந்திரவு தர வேண்டாம்” என்று  உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த  தகவலை எனக்குச் சொன்னவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான, ராமசாமி உடையார்.  உளவுத்துறை அதிகாரிக்கு எம்.ஜி.ஆர் உத்தரவிட்டபோது  அருகேதான் இருந்திருக்கிறார் ராமசாமி உடையார். அவர் எனக்கு நல்ல பழக்கம் ஆதலால் என்னிடம் இந்த விவரத்தைச் சொன்னார். அதோடு, “எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆரை நீ நேரடியாக சந்தித்தே கிடையாது. பிறகு எப்படி உன்னை மிகவும் வேண்டியவர் என்று எம்.ஜி.ஆர். சொல்கிறார்” என்று கேட்டார்.
நான் அந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். கேட்ட உடையாருக்கு அத்தனை ஆச்சரியம். ஏன்.. இப்போது கேட்கப்போகும் உங்களுக்கும் மிகவும் ஆச்சிரியமாகத்தான் இருக்கும்”என்று மீண்டும் ட்விஸ்ட் வைத்து நிறுத்தினார் பேராசிரயர் சுப்பிரமணியன்.
“அட.. சீக்கிரம் சொல்லுங்க சார்.. “ என்று அவசரப்படுத்தினேன் நான். “பொறுமை.. பொறுமை!  இதை நான் தியாகராஜ சுவாமிகள் காலத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்” என்று பீடிகை போட்டு அவர் சொன்னது ஏதோ சினிமா கதை போல இருந்தது.
இதோ.. அவரது வார்த்தைகளிலேயே கேளுங்கள்…:
“தியாகபிரம்மம் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகளை அனைவரும் அறிவோம். பற்பல கீர்த்தனைகளை அருளியவர்.  திருவையாறில் வாழ்ந்த இவர், தனது ஆயுள் முழுதும், இறைவனை போற்றும் கீர்த்தனைகளை பாடியபடி, உஞ்சவிருத்தி (யாசகம்/  பிச்சை) செய்து வாழ்ந்துவந்தார்.
இவரே இயற்றி இசை அமைத்து பாடும் கீர்த்தனைகளை  கேட்பதற்கு மக்கள் தவம் இருந்தார்கள். இவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் திரண்டு, இவரது இசையில் லயிப்பார்கள்.
இவரது பெருமையை அறிந்த அப்போதைய தஞ்சை அரசர் சரபோஜி மகாராஜாவுக்கு ஒரு ஆசை எழுந்தது.  தியாராஜசுவாமிகளை, தனது அவைக்கு அழைத்துவரச் செய்து, “என்னைப் புகழ்ந்து பாடுங்கள்! உங்களுக்கு பொன்னும் பொருளும் தருகிறேன்! வாழ்வதற்கு வசதியான பங்களாவும், விவாசாய நிலங்களும் அளிக்கிறேன்! உங்கள் வறுமை தீர்ந்துபோகும்! வளமாக வாழலாம்!” என்றார்.
தியாகராஜசுவாமிகளோ, “இறைவனை பாடும் வாயினால், வேறு எவரையும் பாட மாட்டேன்” என்று மறுத்தார்.
அரசரின் சார்பாக அமைச்சர் உட்பட அதிகாரிகள் பலரும் தியாகராஜரை வற்புறுத்தியும்  தியாகராஜர் மனதில் மாறுதல் ஏற்படவே இல்லை.  இறைவனை பற்றி மட்டுமே பாடுவது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
சரபோஜி மகாராஜாவும் அவரது மந்திரி பிரதானிகளும் தன்னை வற்புறுத்தி பாடச் சொன்னது தியாகராஜருக்கு அதிகார வர்க்கத்தின் மீது  வருத்தத்தை ஏற்படுத்தியது.   இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான், “நிதி சால சுகமா..”என்ற கல்யாணி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை பாடினார் தியாகராஜ சுவாமிகள். இதற்கு  “பணம் எனக்கு சுகம் தருமா”என்று அர்த்தம்.
அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் மீது தியாகராஜசுவாமிகள் வெறுப்பு கொண்டார். அந்த வெறுப்பு அவர் மறைந்த பிறகும் தொடர்கிறதோ என்வோ..   அவர் சித்தி அடைந்ததும், திருவையாறில் காவேரி நதிக்கரையில் சமாதி செய்யப்பட்டது அல்லவா..  . அங்கு  வருடா வருடம் நடைபெறும் பஞ்சரத்தின கீர்த்தனை விழாவில் கலந்துகொள்ள வரும் அரசியல் பிரமுகர்கள் சிறிது காலத்திலேயே பதவியை இழப்பார்கள் அல்லது உயிரையே இழப்பார்கள்..” என்று சொல்லி, சுப்பிரமணியன் நிறுத்த…
“அது எப்படி  சொல்கிறீர்கள்..” என்று  கேட்க முனைய…  சுப்பிரமணியனே தொடர்ந்தார்: “திருவாயாறில் வருடா வருடம்,  தியாகராஜ சுவாமிகளுக்கு கர்நாடக இசைக் கலைஞர்கள்  பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர் அல்லவா. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்து பதவி அல்லது உயிரை இழந்த சில வி.ஐ.பிகளைச் சொல்கிறேன்.
தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம், திருவாயாறு விழாவுக்கு வந்தார். அதன் பிறகு  நடந்த சட்டமன்ற தேர்தலில் அவரும் அவரது கட்சியான காங்கிரசும் படு தோல்வி அடைந்து, இன்றுவரை எழும்ப முடியவில்லை.
அடுத்து, அப்போதைய மத்திய அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த பிரம்மானந்த ரெட்டி வந்து கலந்துகொண்டார்.  அவரது பதவி பறிபோனது. அதன் பிறகு ஆந்திர முதல்வர் அஞ்சையா வந்து கலந்துகொண்டார். அவரது பதவியும் போனது…  “ என்றார் சுப்பிரமணியன்.
ஏதோ திகில் கதையை கேட்டது மாதிரி இருந்தது எனக்கு. அதே நேரம், முக்கியமான கேள்வியும் எழுந்தது.  “இதெல்லாம் சரி சார். இதற்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன தொடர்பு?” என்றேன்.
“பொறுமை பொறுமை..” என்று கூறிய சுப்பிரமணியன் தொடர்ந்தார்:
“1981ம் ஆண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் “வர இருக்கும் திருவாயாறு பஞ்சரத்தின  கீர்த்தனை நிகழ்ச்சியை துவக்கி வைக்க தமிழக முதல்வர் எம்ஜிஆர் செல்கிறார்” என்று ஒரு  செய்தி வந்தது. இதைப் படித்ததும்தான், ஏற்கெனவே அந்த நிகழ்ச்சிக்கு சென்று பதவி இழந்தவர்கள், உயிர் இழந்தவர்கள் பற்றி எல்லாம் என் நினைவுக்கு வந்தது.
அந்த காலகட்டத்தில் என் வீட்டுக்கு கலைஞர் வந்துகொண்டிருந்தாலும், எம்.ஜி.ஆரின் அரசுக்கு.. அல்லது எம்.ஜி.ஆருக்கு ஆபத்து என்பதை என் மனம் ஏற்கவில்லை.  திருவையாறு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் செல்லக்கூடாது. அதை எப்படி அவருக்குத் தெரிவிப்பது என்று குழம்பினேன்.
திடுமென ஒரு ஐடியா தோன்றியது. அப்போது தினகரன் நாளிதழை நடத்தி வந்தவர் கே.பி. கந்தசாமி. பக்கா தி.மு.க. காரர்.
தினகரன் நாளிதழுக்கு போன் போட்டு, “ஆசிரியருக்கு கடிதம் பகுதிக்கு ஒரு போனிலேயே சொல்லலாமா” என்று கேட்டேன்.  “சொல்லலாம்..” என்றார்கள்.
உடனே, தியாகராஜசுவாமிகள் சமாதிக்கு அருகில் நடக்கும் பஞ்சரத்தின கீர்த்தனை விழாவுக்கு சென்று பதவி இழந்தவர்கள் பட்டியலை கூறி, இந்த நிகழ்ச்சிக்கு தற்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுப்பினேன்.
அப்போதுதான் பெரிய குளம் தொகுதியில் அ.தி.மு.க.  பெரும் வெற்றி பெற்றிருந்தது. இதைக் குறிப்பிடும்படியாக.  “ பெரிய “குளத்தில்” எம்.ஜி.ஆரை தோற்கடிக்க முடியவில்லை என்பதால் திருவை “ஆற்றில்” இறக்கி வெல்ல நினைக்கிறார்களோ..” என்றும் அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த கடிதமும் பிரசுரம் ஆனது.
மறுநாள், தியாகராஜர் கீர்த்தனை விழா கமிட்டியில் இருந்த ஏ.கே.சி. நடராஜன், வளையப்பட்டியார் ஆகியோர் எம்.ஜி.ஆரை சந்திக்க ராமாவரம் தோட்டத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஏற்கெனே எம்.ஜி.ஆர் வருவதாக சொல்லிவிட்டாலும், உறுதி செய்ய வேண்டி அவர்கள் சென்றார்கள்.
அவர்களை அன்போடு அழைத்த எம்.ஜி.ஆர்., “மன்னி்க்கணும்.. நான் இன்னும் கொஞ்சகாலம் பதவியில் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே திருவையாறு தியாகராஜர் கீர்த்தனை விழாவில் நான் கலந்துகொள்ள முடியது” என்று  தெரிவித்துவிட்டார்.
அதுபோல, அந்த வருடம் மட்டுமல்ல.. அதன் பிறகும்கூட தியாகராஜர் கீர்த்தனை விழாவில் எம்.ஜி. ஆர் கலந்துகொள்ள வில்லை” என்று நிறுத்தின்ர் சுப்பிரமணியன்.
பிறகு அவரே, “இந்த சம்பவத்தை மனதில் வைத்துத்தான், என்னை தனக்கு வேண்டிவயராக எம்.ஜி.ஆர். சொன்னார். எனக்கு தொந்தரவு தரக்கூடாது என்று உளவுத்துறைக்கும் கட்டளை இட்டார்” என்று சொல்லி சிரித்தார் சுப்பிரமணியன்.
மேலும் அவரே, “எப்போதோ செய்த ஒரு விசயத்தை நினைவில் வைத்து எனக்கு ஏதும் இடர் வந்துவிடக்கூடாது என நினைத்த எம்.ஜிஆர். எவ்வளவு உயர்ந்தவர். அது மட்டுமல்ல.. இந்த விசயம் தெரிந்தும், கலைஞர் என்னிடம், “ம்.. எம்.ஜி.ஆரை காப்பாற்றிவிட்டீரே..” என்று சிரித்தாரே தவிர வருத்தப்படவில்லை. அவரும் உள்ளத்தால் உயர்ந்தவர்தான்!” சுப்பிரமணியன் சொல்லி முடிக்க.. ஒரு சுவாரஸ்யமான சினிமா பார்த்த திருப்தியுடன் கிளம்பினேன் நான்.