kulaam nabi
சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தொகுதிப்பங்கீடு குறித்துபேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவருடன் காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் வந்தார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் 11.20 மணிக்கு கருணாநிதியை சந்தித்தனர். தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடன் இருந்தார். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., துரைமுருகன் உடன் இருக்கின்றனர்.12.20 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்தனர்.
வெளியே வந்த குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ’’சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து கருணாநிதியுடன் ஆலோசிக்கப்பட்டது. காங்கிரசுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இன்று அவ்வளவாக பேசவில்லை. தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் முதலில் பேசவேண்டியதுள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் உயர்மட்டத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்று இறுதி செய்யப்படும்’’என்று தெரிவித்தார்.