உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாதவரை தன் குடும்ப உறுப்பினர்களை அடிப்பது கிரிமினல் குற்றம் இல்லை என்று ரஷ்யாவில் புது சட்டம் வரப் போகிறது.

தற்போதைய சட்டங்களின்படி, குடும்ப உறுப்பினர்களை அடித்தால் கடுமையான தண்டனை உண்டு.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று ரஷியப் பாராளுமன்ற கீழ்சபை, இது குறித்து புது சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது.

இதன்படி,  உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத வகையில் குடும்ப உறுப்பினர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பது, இனி கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது. சாதாரண குற்றமாகவே கருதப்படும். இதற்கு, தற்போது உள்ள கடுமையான தண்டனைகளுக்குப் பதிலாக அபராதம் அல்லது 15 நாள் சிறைவாசம் மட்டுமே விதிக்கப்படும்.

படம்: மாடல்
படம்: மாடல்

 

இந்தத் தீர்மானத்தை 3 உறுப்பினர்கள் எதிர்த்தனர். 380 உறுப்பினர்கள் ஆதரித்தனர். ஆகவே பெரும்பான்மையோடு தீர்மானம் நிறைவேறியது.

அடுத்ததாக இச் சட்டத் திருத்தம்,  சட்டம், மேலவை உறுப்பினர்களாலும் ஏற்கப்பட வேண்டும். பிறகு, ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புது சட்டத்தில் கையெழுத்திடுவார். அவர் ஏற்கெனவே இச் சட்டத் திருத்தத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தற்போது உள்ள சட்டத்தின் காரணமாக, குழந்தைகளை கண்டிக்க முடிவதில்லை. அது கடும் குற்றமாக கருதப்படுகிறது” என்று பலரும் சொல்லிவந்த நிலையில், அதை ஏற்று இந்த சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், “மனைவிமீது வன்முறையை பிரயோகிக்கும் கணவர்களுக்கு இச்சடத்திருத்தம் பாதுகாப்பு அளிக்கிறது” என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெறும் வன்முறை குற்றங்களில்  40 சதவீதம் குற்றங்கள் குடும்ப சூழலில் தான்  ஏற்படுகின்றன என்பதும்,   2013 ஆம் ஆண்டில், 9,000க்கும் அதிகமான பெண்கள் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.