ஆமதாபாத்:

குஜராத்தில் முதல்வராக இருந்த தான் செய்த திட்டங்களை முன்வைக்காமல் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் மீது குற்றம்சாட்டும் செயலில் பிரதமர் மோடி ஈடுபட தொடங்கியுள்ளார்.

ராஜ்காட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இரு கட்சிகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். அப்போது அவர் பேசுகையில், “நான் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டதால் காங்கிரசுக்கு என்னை பிடிக்கவில்லை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனதற்காக ஒரு கட்சி இப்படி கீழ்தரமாக நடந்துக் கொள்ள முடியுமா?.

நான் ‘டீ’தான் விற்றேன், ஆனால் நாட்டை விற்கவில்லை,”என்றார். ஏழைகளையும், என்னுடைய ஏழ்மையான பின்னணியையும் காங்கிரஸ் கேலி செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறேன்’’ என்றார் பிரதமர் மோடி.

மேலும் அவர் ஆம்ஆத்மி குறித்து பேசுகையில், ‘‘ஒரு கட்சி புதிதாக டில்லியில் வந்துள்ளது. அந்த கட்சி அவதூறுகளை அள்ளி வீசிவிட்டு ஓடிவிடுகிறது. காங்கிரஸ் கட்சி பழமையான கட்சி என்பதால் இத்தகைய அரசியலை அவர்கள் கையில் எடுக்காமல் இருந்தனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக காங்கிரஸ் கட்சியும் இத்தகைய குறுக்கு வழியை கையாண்டு அவதூறு பேச்சுக்களையும், பொய்களை கூறி வருகிறது.

மகாத்மா காந்தியின் ஒழுக்கமான வாழ்க்கை, சிந்தனைகளை பின்பற்றி கடினமாக உழைந்த இந்த மண்ணின் மைந்தரான சர்தார் வல்லபாய் படேல் மீதும் இது போன்ற அவதூறுகளை பரப்பினர். அவர் குஜராத்தி என்பதால் இவ்வாறு செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் தேசிய அரசியலில் ஈடுபடாமல் த டுக்கப்பட்டார்’’ என்றார்.