d
 
“மயக்கமா.. கலக்கமா..மனதிலே குழப்பமா…” என்ற பாடலை முணுமுணுத்தபடியே வந்தமர்ந்தார் நியூஸ்பாண்ட்.
“உமக்கு என்ன பாஸ் குழப்பம்…?” என்றோம்.
“எனக்கென்ன குழப்பம்…? கேப்டன்தான் பாவம் தீரா குழப்பத்தில் தவிக்கிறார்!”
“என்ன சொல்கிறீர்? அவர்தானே எல்லோரையும் குழப்பிவிடுகிறார்?”
சிரித்தபடியே, “வெளித்தோற்றத்துக்கு அப்படித்தெரிகிறது. ஆனால் உண்மையிலேயே குழம்பிக்கிடக்கிறார் மனிதர். அவருக்கு நெருக்கமானவர்களிடம் தனது குழப்பங்களை எல்லாம் சொல்லி தீர்வு கேட்கிறார்.. அவர்களோ.. தாங்க முடியாமல் ஓடுகிறார்கள்!  அப்படி ஓடி வந்தவர்கள் சிலரிடம்தான் பேசிவிட்டு வருகிறேன்!” என்றார் நியூஸ்பாண்ட்.
“சொல்லும்.. சொல்லும்..! கேப்டனுக்கு என்ன குழப்பமாம்?”
“மக்கள் நலக்கூட்டணி என்பதைப் பொறுத்தவரை கேப்டனுக்கு குழப்பமே இல்லை! அதாவது அவரது சாய்ஸில் அந்த கூட்டணி இல்லை!”
“ஏனாம்..?”
dd
“அந்த கூட்டணியில் சேர்ந்தால் ராஜாவாக.. அதாவது முதல்வர் வேட்பாளராக ஆகலாம். ஆனால் முதல்வராக முடியாது என்று நினைக்கிறார் கேப்டன்.!”
“சரி, பிறகு என்ன அவரது குழப்பம்?”
“பா.ஜ.க. கூட்டணியில் சேர்வதுதான் சரி என நினைக்கிறார்கள் பிரேமலதாவும், சுதீஷூம்.  அப்படி கூட்டணி அமைத்தால் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை சீட் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான். ஆனால், உடனடி பலன் கிடைக்கும். தவிர, மத்திய ஆட்சியும் கையில் இருக்கும் என்று நினைக்கிறார்கள்!”
“ஓ..!”
“ஆகவேதான்,  இவ்வளவு தொகுதி, தொகுதிக்கு இவ்வளவு என்றெல்லாம் பேசி ஓ.கேவும் வாங்கிவிட்டார்கள்.  சுதீஷூக்கு மத்தியில் கவுரவமான பதவி ப்ளஸ் ராஜ்யசபா பதவி என்பதும் அங்கே ஓகே ஆகிவிட்டதாம்!”
“அப்புறம் என்ன பிரச்சினை?”
“பொறுமை.. பொறுமை! மத்தியிலும் கேப்டன் துண்டு போட காரணம் இருக்கிறது. எதிர்காலத்திலும் அ.தி.மு.கவுடன் பாஜக நெருங்கிவிடக்கூடாது என்பதற்காத்தான் மத்திய பதவி எதிர்பார்க்கிறார்!”
“சரியான ஐடியாதானே..!”
“இதற்கு பாஜக தரப்பும் ஒப்புக்கொண்டுவிட்டதாம். ஆனால் தேர்தல் வரை இணக்கமாக இருப்பார்கள்.  கேட்டது கிடைக்கும். ஆனால்  தேர்தலுக்கு பிறகு கைவிட்டுவிட்டால்.. அதாவது மத்திய பதவி மற்றும் ராஜ்யசபா எம்.பி… இரண்டையும் மறுத்துவிட்டால் என்ன செய்வது என்பது கேப்டனின் குழப்பம்!”
“ஏன் இந்த குழப்பம்?”
”பாஜகவுக்கு, அ.தி.மு.க மீது.. அதாவது ஜெயலலிதா மீது சாஃப்ட் கார்னர் இருப்பது உலகறிந்த விசம்தானே! அப்படி இருக்கும்போது கேப்டனுக்கு குழப்பம் வராதா?”
”நியாயமான குழப்பம்தான்! சரி, தி.மு.க. உடன் கூட்டணி வைப்பதில் என்ன குழப்பமாம்?”
“தி.மு.கவிடன் 90 தொகுதிகளும் இரண்டு பங்கு “சி”களும், எதிர்பார்க்கிறாராம் கேப்டன். அதோடு துணை முதல்வர், முக்கிய அமைச்சர்கள் நான்கு பேர் என்றும் டிமான்ட் வைக்கிறாராம்!”
“இந்த தகவல்தான் ஏற்கெனவே உலவிக்கொண்டிருக்கிறதே..!”
“அவசரக்குடுக்கை.. கேளும்! ஆனால் தி.மு.க. தரப்பில் 60 மற்றும் அதன் இரு மடங்கு என்பதிலேயே இருக்கிறார்கள். சில அமைச்சர் பதவிகள் என்பதிலும் இறங்கி வந்துவிட்டார்கள்.   துணை முதல்வர், அமைச்சர் பதவிகள் என்பதைத்தான் அவர்கள் ரசிக்கவில்லை!”
“சரி.. ”
“இது கேப்டனுக்கும் ஓகேதான். ஆனால் பாஜக மீதான சந்தேகம் போலவே  போலவே திமுக மீதும்  சந்தேகம் இருக்கிறதாம் கேப்டனுக்கு!”
“என்ன அது?”
“அமைச்சர் பதவி தருவதாகக் கூறும் வாக்குறுதியை தேர்தலுக்கு பிறகு தி.மு.க  நிறைவேற்றுமா என்பதுதான் கேப்டனின் சந்தேகம்.  கடந்த தி.மு.க. ஆட்சி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவில் மைனாரிட்டி ஆட்சியாகத்தான் நடந்தது. ஆனால் கடைசி வரை அவர்களுக்கு மந்திரிசபையில் தி.மு.க. இடம் அளிக்கவில்லை.  இத்தனைக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது.
இப்படி “தனி ஆட்சி” என்பதில் உறுதியாக இருக்கும் தி.மு.க.,, “அமைச்சரவையில் பங்கு” என தனக்கு கொடுக்கும்  வாக்குறுதியை காப்பாற்றுமா” என்றும் கேப்டனுக்கு சந்தேகம்!”
“சரியான சந்தேகம்தான்..”
“இன்னும் கேளும்.  ஒருவேளை தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதாகவே வைத்துக்கொள்வோம். தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்றால் தே.மு.தி.கவை சீண்டவே சீண்டாது.
அதே நேரம் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தனது கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்களை  உருவிவிடுமோ என்ற சந்தேகமும் இருக்கிறது கேப்டனுக்கு!”
“ஆகா.. சரியான சந்தேகம்தான்!”
“இப்படி பா.ஜ.க., தி.மு.க.. யாருடன் கூட்டணி என்றாலும் சாதக பாதகங்கள் இருக்கத்தானே செய்கின்றன? அதனால்தான்  குழம்பித்தவிக்கிறார் கேப்டன் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!”
“ஹீம்… “புரியாம பேசுகிறார்… குழப்புகிறார்.. இழுத்தடிக்கிறார்.. பேரம் பேசுகிறார்..” என்று நாம் அசால்ட்டாக சொல்லிவிடுகிறோம். ஆனால் அவருக்குத்தான் பாவம் எவ்வளவு குழப்பம்!”
“புரிந்தால் சரி..!” என்ற நியூஸ்பாண்ட், “இந்த குழப்பத்துக்கெல்லாம் தீர்வு காணத்தான் ஃபாரின் செல்கிறாராம். உடல் செக்அப் என்பதுகூட இரண்டாம் பட்சம்தானாம்!”  – சொல்லிவிட்டு கிளம்பினார் நியூஸ்பாண்ட்.