kollam123
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் புட்டிங்கல் அம்மன் கோவிலில் வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 106 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரம், கொல்லம் நகர அரசு ஆஸ்பத்திரிகளிலும், கொல்லம் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
‘‘கோவில் நிர்வாகம் சார்பில் போட்டிபோட்டுக் கொண்டு, வாணவேடிக்கை நிகழ்த்த அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை’’ என்று மாவட்ட கலெக்டர் ஷினாமோல் கூறியுள்ளார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போட்டி வாணவேடிக்கை நடத்தப்பட்டு உள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து, கேரள போலீசார் கோவில் நிர்வாகிகள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி), மற்றும் 308 (கொலைக்கு உடந்தையாக இருத்தல்) ஆகிய 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெடிப்பொருள் ஒப்பந்தக்காரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை மாநில குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த கோரச் சம்பவம் தொடர்பாக மாநில அரசின் சார்பில் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து உள்ளதாக கேரள மாநில டி.ஜி.பி. இன்று தெரிவித்துள்ளார்.