திருமழபாடி வைத்தயநாதசாமி கோயில் தரிசனம்

 

ko 1

அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி வைத்யநாதசாமி கோயிலுக்குச் சென்றோம். குடமுழுக்கின்போதும், நந்தித்திருமணத்தின்போதும் போக முயன்றும் முடியவில்லை. பின்னர்தான் வாய்ப்பு கிடைத்தது.  ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலத்தில் கொள்ளிடம் வடக்கு நோக்கிப் பாய்ந்தோடுகிறது. நாங்கள் சென்றபோது ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் நடந்துவிட்டு, கோபுரம் நோக்கி நடந்தோம்.  ஆற்றிலிருந்து கோபுரத்தைப் பார்க்க அழகாக இருந்தது.

மார்க்கண்டேய முனிவருக்காக இறைவன் மழு ஏந்தி நடனமாடிக் காட்சி தந்ததால் இத்தலத்தை மழுவாடி என்பர். நாளடைவில் இது மழபாடி  ஆனதாகக் கூறுகின்றனர்.

பங்குனி மாதத்தில் நடைபெறுகின்ற நந்திதேவர் திருமண விழா புகழ் பெற்றதாகும். திருவையாற்றில் நடைபெறுகின்ற சப்தஸ்தான விழாவின்போது நந்திதேவர் புறப்பட்டுச் செல்வார்.

ko 2

நந்தித் திருமணத்தொடர்பு, ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர், ஆற்றுக்கு எதிரே கம்பீரமான ராஜகோபுரம் என்பனவே இக்கோயிலைப் பற்றி நான் அறிந்தது. இக்கோயிலுக்கு முன்னரே நான் இரு முறை சென்றுள்ளபோதிலும் இப்போது செல்லும்போது ஏதோ புதிதாகச் செல்வது போல இருந்தது. பெரிய வெளிப்பிரகாரம். கடந்த முறை உள்ளே போகமுடியாதபடி இருந்தது. தற்போது சுத்தம் செய்யப்பட்டு சுற்றி வரும் அளவு உள்ளது.

கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து கோயிலின் உள்ளே சென்றதும் நூற்றுக்கால் மண்டபம் பார்த்தோம். அதன் வலப்புறத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டிருந்தன.

கோயிலின் வலப்புறம் சூரியன், சந்திரன், அகோரவீரபத்திரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரை பார்த்தோம். தொடர்ந்து மடப்பள்ளி விநாயகர்.

ko 3

முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே கருவறை சென்றோம். வைத்யநாதசுவாமியைக் கண்டோம். இறைவனின் முன்பாக இரு புறமும் துவாரபாலகர்களைக் கண்டோம். கருவறையில் நிலைவாயிலின் மேலே அகத்தியர் புருசாமிருகரிசி, வசிஷ்டர் சிற்பங்களைக் கண்டோம்.

பின்னர் பிரகாரத்தைச் சுற்றிவந்தோம். சிவசூரியன், காத்யாயணி, சப்தமாதர்கள், ஏழு கன்னியர்கள், 63 நாயன்மார்கள், தொகையடியார்கள், தல விநாயகர் ஆகியோரைக் கண்டோம். தொடர்ந்து ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தரைப் பார்த்தோம். இரு புறமும்

விநாயகரும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் இருந்தனர். வேதாரண்யம் கோயிலில் இக்கட்டட அமைப்பு உள்ள இடத்தில் சுழலும் தூண்களைப் பார்த்த நினைவு வந்தது.

ko 4

தொடர்ந்து காசி விசுவநாதர், விசாலாட்சி, கைலாசநாதர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, அய்யாறப்பர், சரஸ்வதி, சுந்தரர், பரவை நாச்சியார், சொக்கநாதர், மீனாட்சியை வணங்கினோம். திருச்சுற்றில் சுற்றிவரும்போது பனை மரத்தினைப் பார்த்தோம்.  கருவறையின் பின் புற கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மாவைக் கண்டோம். கருவறையின் இடது புறம் நால்வேத நந்தி எனப்படும்  நான்கு நந்திகளைக் கண்டோம். இந்த நந்திகளைப் பார்த்தபோது அமைப்பில் வித்தியாசமாக இருந்தபோதிலும் புள்ளமங்கை கோயிலில் விமானத்தை ஒட்டிப் பார்த்த நினைவுக்கு வந்தன. தொடர்ந்து சிவதுர்க்கை அண்ணாமலையார், ஜுரகேஸ்வரர் சன்னதிகளைப் பார்த்தோம். கஜசம்காரமூர்த்தி, கல்யாண பாலம்பிகை, காலபைரவர், பைரவர் சிற்பங்களையும் பார்த்தோம்.

இறைவனை வணங்கிவிட்டு, இறைவியின் சன்னதிக்குச் சென்றோம். இறைவியின் சன்னதி கோயிலின் இடது புறம் இருந்தது. அழகான நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். நின்ற நிலையில் இருந்த தேவியை வணங்கினோம்.

ko 6

அம்மன் சன்னதியின் விமானம் மிகவும் அழகாக வித்யாசமான முறையில் இருந்ததை கண்டு வியந்தோம். சப்தஸ்தானத்தலங்களில் காணப்படும் அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு ஒருவகையான மாறுபட்ட அடுக்குடன் விமானம் காணப்பட்டது.அம்மன் சன்னதிக்கு எதிரே கோயில் குளம் இருந்தது.

மறுபடியும் இறைவனை வணங்கிவிட்டு கோயிலை விட்டுக் கிளம்பினோம். நந்தி திருமணத்திற்கு வராத குறை எங்களை விட்டு அகன்றது. மன நிறைவுடன் வெளியே வந்தோம்.