விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்..” நூலை த.நா.கோபாலன் விமர்சிக்கிறார்.
 
12729351_1024379040969342_2882615215426262599_n
“சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியைப் பார்த்துமுடித்தவுடன் இருக்கையைவிட்டு எழுந்திருக்கத் தோன்றவில்லை. எல்லோரும் சென்ற பிறகு தனியாக அரங்கில் அமர்ந்து….   பார்த்த, உள்வாங்கிய, அனைத்தையும் அசைபோடவேண்டும்!  சிந்திக்கமுடியாவிட்டால் கூட தனியே வெறுமையை எதிர்கொள்ளவேண்டும், மாபெரும் கலைப் படைப்புக்கள் அத்தகைய உணர்வுகளையே தூண்டும்!”  என்பார் ஓர் விமர்சகர்.
அண்மையில் மறைந்த தமிழினியின் தன் வரலாறான “ ஒரு கூர்வாளின் நிழலில்..” புத்தகமும், அப்படிப்பட்ட ஒரு நிலைக்கே நம்மைத் தள்ளுகிறது. . நம்மையறியாமல் வழிந்தோடும் கண்ணீரைத் துடைக்கக்கூட மனதில்லாமல், சோகத்தில் அப்படியே உறைந்துபோய்விடுவோம்.
எமது மக்கள் அழிக்கப்பட்டபின் யாருக்காக இந்தத் தேசம், யாருக்காக இந்த விடுதலை?
பேரழிவில் முடியும் அனைத்து புரட்சிகர போராட்டங்களுக்கும் இந்தக் கேள்வி பொருந்தும்.
ஏறத்தாழ மூன்று தசாப்தம், எத்தனை உயிரிழப்பு, வாழ்வாதரங்கள் பாழடைவு, சொத்துக்கள் சேதம்…எல்லாம் எதற்கு? முள்ளிவாய்க்காலில் முடியவா, முன்னிருந்த உரிமைகளையும் இழந்து அடிமைகளாக நடத்தப்படவா, தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே அச்சப்படவா…..
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியம் சிவகாமி. கிளிநொச்சி மாவட்டம் பரந்தனைச் சேர்ந்தவர். இறக்கும்போது அவருக்கு 43 வயது.
மிக வறிய சூழலில், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர், மற்ற பலரைப் போல், காட்டுத்தனமான இலங்கை இராணுவ தாக்குதல்களாலும் அவர்கள் உதவிக்குச் சென்ற இந்திய “அமைதி காக்கும் படை”யின் அத்து மீறல்களாலும் மனம் நொந்து  புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்தவர்.
திறம்படப் பணியாற்றி மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளராகிறார்.
2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக விடுவிக்கப்படுகிறார்.
குடும்பத்தினரின் வற்புறுத்தலில் திருமணம் செய்துகொள்பவர் கணையப் புற்றுநோய்க்கு அடுத்த ஆண்டே பலியாகிவிடுகிறார்.
தமிழினியின் சுய சரிதை அமைப்பைச் சாராத, ஆனால் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானித்து வந்த நோக்கர்களின் அனைத்து கணிப்புக்களையும் உறுதிப்படுத்துகிறது.
அதாவது புதிதாக ஏதுமில்லை. நாமெல்லாம் அறிந்ததை,  சந்தேகப்பட்டதை சரி என்கிறது கூர்வாள். சம்பவங்களே புதிது, செய்தி என்னவோ பழையதுதான்.
ஆனாலும் இலங்கைத் தமிழர் வரலாற்றில் இதனை ஒரு மைல்கல் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் தமிழினி இயக்கத்தவராலும், வெளியிலிருந்தவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
2002 கட்டத்தில் நடந்த உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர். சரணடையும்வரை நெருடல்களுக்கிடையிலும் பிரபாகரன் தலைமையை ஏற்று, இடப்பட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றியவர்.

தமிழினி:  இயக்கத்தில் இருந்த போதும் பிறகும்
தமிழினி: இயக்கத்தில் இருந்த போதும் பிறகும்

 
இந்த நூலில் கூட எவரையும் சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளிவிடவில்லை. விமர்சனம் நயக்கத்தக்க முறையில், வெகு நாகரிகமாகவே முன்வைக்கப்படுகிறது. எந்த இடத்திலும் எவர்மீதும் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவே இல்லை.
பிரபாகரன் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ கேள்வி கேட்பதோ ”தெய்வகுற்றம் இழைப்பதற்குச் சமமானதாக கருதப்பட்டது இப்போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாத்த்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது,” என்றும்,
இராணுவ வெற்றிகளால் உலகையே பிரமிக்கவைத்த அதே பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது ராஜதந்திர ரீதியில் அரசியல் தீர்வு காணமுடியாமல் திணறினார்,  மக்களுக்காக தனது பிடிவாத குணத்திலிருந்து வெளியே வரவேண்டியவராக அவர் இருந்தார், ஆனால் அதற்கான துணிச்சலில்லை அவரிடம் என்றும்
ஆணித்தரமாகக் கூறுகிறார் தமிழினி.
எந்த மக்களுக்காகப் போராடுவதாக அவர் கூறினாரோ அந்த மக்களைப் பாதுகாப்பதா அல்லது கோடானுகோடிப் பணத்தை செலவு செய்து மிகவும் பிரயத்தனங்களின் மத்தியில் கொண்டு வந்து சேர்த்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா என்று குழம்பிப்போன தளபதி, இறுதியில் ஆயுதங்களுக்கே முக்கியத்துவமளித்து, பேச்சுவார்த்தைகளை தேவையில்லாமல் முறியடித்து, இறுதிப்போரைத் துவங்கி, அழிந்தும்போனார் என்பதே தமிழினியின் கணிப்பு.
 
பிரபாகரன்
பிரபாகரன்

 
எல்லாம் அண்ணுக்குத் தெரியும், எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருப்பார், அவர் நம்மை என்றும் கைவிடமாட்டார் என்று பொதுமக்களும் சரி, இயக்க வீரர்களும் சரி உறுதியாக நம்பியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பிரபாகரனே கையை விரித்து, “என்னிடம் எதுவுமில்லை யாருக்கும் தெரிவதில்லை இது,” என விரக்தியாகக் கூறியதாக, சக தளபதி ஒருவர் தமிழினியிடம் தெரிவிக்கிறார்.
அதன் பின்னும் யுத்தம் நீண்டு, முள்ளிவாய்க்காலில் முடிகிறதென்றால் எந்த அளவு மனம் நொந்திருப்பார் அந்தப் பெண்?
தமிழக அரசியல்வாதிகளை அவர் ஏன் நம்பினார் என்றும் தலையிலடித்துக்கொள்கிறார் தமிழினி.
”ஈழத்தமிழர் ஆதரவுக்கோஷம் வாக்குப்பெட்டிகளை நிரப்பவே பயன்படும் என்பதைக்கூட மறந்து அலைகடலில் ஒரு துரும்பேனும் அகப்படாதா என்ற அங்கலாய்ப்புடன் இறுதிப்போரின் தோல்விகளுக்குள் பிரபாகரன் தனித்துவிடப்பட்டிருந்தார்,” என்று குறிப்பிடுகிறார்.
பிரபாகரனை முதல் முதலில் சந்திக்கும்போது அவருக்கேற்படும் பிரமிப்பு, குதூகலம், அவர் சாதாரண படையணியரிடம் கூட சகஜமாகப் பழகியது அனைத்தையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்.
அதே வேளை மாத்தையா சுட்டுக்கொல்லப்பட்டது, முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கப்பட்டது, எல்லாமே அவருக்கு வேதனையைக் கொடுத்திருக்கிறது.
பின்னாளில் அவர் மெல்ல  மெல்ல மரித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு உதவியாக இருப்பது ஒரு முஸ்லீம் சிறுமி. அவளது சமூகத்திற்கிழைக்கப்பட்ட அநீதிகள் நினைவுக்கு வருகிறது.
எப்படி இதெல்லாம் நடந்தது என நொந்துபோய் எழுதிய கவிதை இப்படி முடியும்:
நீரடித்து 
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?”
அதெல்லாம் மிகப்பின்னால். போராட்டத்தின்போதோ தலைவரின் முடிவுகளை விமர்சிக்கும் வழக்கமே இல்லாது போக, இவரும் தனது சந்தேகங்கள் அனைத்தையும் விழுங்கிக்கொள்கிறார். ஆத்திரத்தை அடக்கிக்கொள்கிறார்.
இயக்கத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தால் கடுங்குற்றமாகக் கருதப்பட்டது. அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை அவர் கண்ணுறும்போது எப்படியெல்லாம் வேதனை பட்டிருப்பார்? தாலிபான், ஐசிஸ்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.
இம்மாதிரி எத்தனை சம்பவங்கள்? அப்பெண்ணால் எவ்வளவு தாங்கமுடியும்? ”நமக்குமட்டுமேண்டி இப்டி,” என சக போராளி ஒருவர் கலங்குவதை தமிழினி நினைவுகூறும்போது, நாமும் சேர்ந்தழுகிறோம்.
இறுதிக்கட்டங்களில் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி தான் தோன்றித்தனமாக நடந்துகொண்டு, மூத்த தளபதிகளை அவமதித்து, கட்டாய ஆள் சேர்க்கைக்கு உத்திரவிடும்போது மேலும் நொறுங்குகிறார் தமிழினி.
வயிற்று பசிக்கு ஒரு பிடி உணவில்லை, காலுன்றி நிற்க நிலமில்லை என்று நிர்க்கதியாய்ப் போனபின், வேறு வழியின்றி, இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு நகர்பவர்களை, காலில் சுட்டு நிறுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்படும்போது விதிர்த்து நிற்கிறார். இனி இது சரிப்படாது மக்களுக்கான இயக்கமல்ல இது என்று அப்போதுதான் வேதனையுடன் உணர்கிறார்.
நந்திக்கடல்வழியே பிரபாகரனும் வேறு சிலரும் தப்பிவிட்டதையும் பின்னர்தான் அறிகிறார். ஆனால் அதற்குள்ளேயே அவருக்கு எல்லாம் சலித்துப்போகிறது. சயனைட் குப்பியை வீசி எறிந்துவிட்டு, சராசரிப் பெண்ணாக, நகரும் மக்கள் கடலில் சங்கமாகிறார்.
அதன் பின்னே அவராகவே ராணுவத்திடம் சரணடைகிறார். யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. எந்த ஒரு சலுகையினையும் பெறவில்லை. அவரது குடும்பத்தினர் இன்னமும் வறுமையில்தான் வாடுகின்றனர்.
அவரது வழக்கை நடத்த  பிரசித்திபெற்ற தமிழ் சட்டத்தரணிகள் லட்சக்கணக்கில் ஃபீஸ் கோரும்போது, மனசாட்சியுள்ள ஒரு மன்னார் தமிழ் வழக்கறிஞரும், கொழும்பைச் சேர்ந்த ஒரு சிங்கள வழக்கறிஞரும் இணைந்து வாதாடி அவருக்கு விடுதலை பெற்றுத் தருகின்றனர்.
 
த.நா. கோபாலன்
த.நா. கோபாலன்

 
சிறையிலோ புனர்வாழ்வு இல்லத்திலோ அவருக்கு பெரிதாக அவலங்கள் இல்லை. நிச்சயம் சித்திரவதை ஏதுமில்லை. பிறகு பாதுகாப்பாக அவரது தாயிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
கருணா படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, தப்பியோடிய பெண்களுக்கு இலங்கை இராணுவத்தினர் முதலுதவி அளித்து வீட்டுக்கு அனுப்பிவைத்ததுதான் நமக்கு நினைவு வருகிறது.
தமிழினிக்கும் எல்லாம் விளங்கிய நேரத்தில், அவர் மீண்டும் வாழத் துடித்த நேரத்தில். கணையப் புற்று நோய் எனத் தெரியவருகிறது.
அவசர அவசரமாக நூலை எழுதத் துவங்குகிறார். நோயின் பயங்கரம் குறுக்கிட்டிராவிடில், மேலும் பல தகவல்களை அவர் விட்டுச் சென்றிருப்பார் என்கிறார் அவரை இழந்து வாடும் கணவர் ஜெயக்குமரன்.
மூளையின் மடிப்புகளில்
கேள்விப் பாம்புகள்
நெளிந்து நெளிந்து
பதில்களைத் தேடிப்
பசியோடு துடிக்கின்றன
அப் பசி ஆறாமலேயே தமிழினி எனும் சிவகாமியின் வாழ்க்கை அஸ்தமிக்கிறது. ஆனால் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடைகாணாமல், இலங்கை தமிழ்ச் சமூகம் முன்னேறிவிடமுடியாது.