சாதிக்காக சண்டையிடும் காலம் போய்,சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தை சேர்ந்த 22 வயது தாழ்த்தப்பட்ட இளைஞர் சங்கர், பழனியைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச்சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் உடுமலை பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இந்த காதல் தம்பதியை, பைக்கில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் சங்கர் மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்தும், இதுபோன்று தமிழகத்தில் நடைபெறும் கவுரவக்கொலைகள் குறித்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
“சாதிகள் இல்லையடி பாப்பா” என பாரதியார் பாடினாலும், சாதிகளை ஒழித்திட தந்தை பெரியார் போராடினாலும், தமிழகத்தில் சாதிக்காக சண்டையிடும் காலம் போய், கொலை செய்யும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை தமிழகத்தில் தற்போது நிலவிவருகிறது. தருமபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ் ஆகியோரின் கொலையை தொடர்ந்து உடுமலை சங்கர் தற்போது கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் கவுரவக்கொலைகள் நடைபெறவில்லை என்றும், அதற்காக தனிச்சட்டங்கள் இயற்ற தேவையில்லை என்றும், சட்டமன்றத்திலே பதிலளித்த அதிமுக அரசுதான் இந்த கொலைக்கு தார்மீக பொறுப்பேற்கவேண்டும். தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருந்தால், பட்டப்பகலிலே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த, மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில், நடுரோட்டில் இப்படிப்பட்ட கொலைச் சம்பவம் நடந்தேறி இருக்குமா? காவல் துறையினரின் கண்ணெதிரே இச்சம்பவம் நடைபெற்றதாகவும், உடனடியாக கொலையாளிகளை பிடிக்க காவல்துறை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். எனவே காவல்துறையினர் இந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாவண்ணம் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.
தமிழக மக்கள் சாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சகோதரர்களாக அன்புகாட்டி வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒருசில சாதி அமைப்புகளும், அவர்களுக்கு பின்புலமாக இயங்கும் அரசியல் கட்சிகளும்தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளன. எனவே தமிழக அரசு இதுபோன்றவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும். தமிழகத்தில் சாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தேமுதிக சாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக தொண்டாற்றுவதில் உறுதியாக உள்ளது. எனவே தமிழக மக்களாகிய நாம் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் இருப்போம் என்கின்ற உறுதியை ஏற்றுக்கொள்வோம்.’’