a
“நாம் தமிழர்” கட்சியின் தேர்தல் வரைவுத்திட்டத்தை இன்று வெளியிடுகிறார், அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த வரைவுத்திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படும் பல விசயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. நாம் தமிழர் கட்சி வென்றாலும் இதையெல்லாம் சாத்தியப்படுத்தப்படுமா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது இந்தத் திட்டங்கள்.
குடிநீரை மனிதர்கள் காசுகொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். ”ஆடுமாடு கோழி கொக்கு காட்டு விலங்குகள் எல்லாம் எந்தக் கடைக்குச் சென்று தண்ணீரை வாங்கிக் குடிக்கும்?” என்ற கேள்வியை எழுப்பி  அனைவருக்கும் இலவச குடிநீர் என்று அறிவித்திருக்கிறார்களாம்.   பாட்டிலில் விற்கப்படுவதற்கு தடை என்பதும் இருக்கிறதாம்.
அதே போல ஆடு மாடு மேய்ப்பவர்கள், விவசாயிகள் அனைவரும் அரசு ஊழியர் ஆக்கப்படுவார்களாம்.
விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அரசே குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்யுமாம். அந்த நிலத்துக்கு சொந்தக்காரர் விருப்பப்பட்டால் தானும் அதில் உழைத்து அதற்குரிய ஊதியமும் பெறலாமாம்.
அந்தந்த விவசாயப் பொருள் உற்பத்தியாகும் இடத்திலேயே அது சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படுமாம்.  ஆகவே விவசாயமும் தொழில் முன்னேற்றமும் ஒருங்கே ஏற்படுமாம்.
கிராணைட், மணல் போன்ற இயற்கை சார்ந்த விசயங்கள் அனைத்தும் அரசின் முழு கட்டுப்பாட்டில் வருமாம்.
பெரும் தொழிற்சாலைகளை அரசே உருவாக்குமாம். அந்த அளவுக்கு நிதி இல்லை என்றால் உலகெங்கும் இருக்கும்  வசதி மிக்க தமிழ் தொழிலதிபர்களை அழைப்பார்களாம். அவர்களோடு அரசும் சேர்ந்து தொழிற்சாலைகளை உருவாக்குமாம்.
இப்படி நிறைய ஆச்சரியங்களைக் கொண்டிருக்கிறது நாம் தமிழர் இன்று வெளியிட இருக்கும்  தேர்தல் திட்டம்.
‘ ஒவ்வொரு துறைசார்ந்த வல்லுனர்களோடு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீமான் விவாதித்து இந்த வரைவுத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்” என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.   ஆனால் இதெல்லாம் சாத்தியமாகுமா சர்ச்சையாகுமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!