கட்டுரையாளர்: சந்திரபாரதி
download
2016 சட்டமன்ற தேர்தல் பல விதங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. திராவிடக் கட்சிகளின் கீழ் 49 ஆண்டுகளுக்கும் மேல் ஆளப்பட்டு வந்த தமிழ்நாடு எந்த வளர்ச்சியையும் காணாமல் முடங்கியுள்ளது என்ற குற்ற சாட்டு திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர்களிடமிருந்தும், திராவிடத்தைத் தங்கள் கட்சியின் பெயரில் வைத்திருக்கும் சில கட்சிகளாலும் பலமாக ஒலிக்கிறது. கூடவே, தமிழ் தேசியக் குரலும் ஒலிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கோடிக்கும் மேலாக முதன்முறை வாக்காளர்களும், நவீன தொழில் நுட்பத்தால் உடனுக்குடன் தகவல் பரிமாற்றமும் , சமூக ஊடகங்களில் அரசியல் புரிதலில் உந்துதலும் 2016 தேர்தலை உற்று நோக்கவும் சுவாரசியமாகவும் வைத்திருக்கிறது.
அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக தனது சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்ட சிறிய கட்சிகள் சிலவற்றுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறது. திமுக தனது நீண்ட நாள் கூட்டணி கட்சியான காங்கிரசுடனும் மற்றும் சில சிறுபான்மையினர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கலைஞரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதோடு, 501 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
1967 க்குப் பிறகு மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் ஆளும் அதிமுக அரசையும் திமுகவையும் பொது நன்மை கருதி எதிர்க்கும் முகமாக கூட்டணி அமைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் முதன் முறையாக “குறைந்த பட்ச செயல் திட்டம்” அறிவித்து, தேர்தலில் தொகுதிப் பங்கீடும் வென்றால் கூட்டணி ஆட்சி என்று பிரகடனப்படுத்தி வாக்காளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
திமுக, அதிமுக என்று கடந்த காலங்களில் தேர்தல் கூட்டணி வைத்திருந்த பாமக “மாற்றம், முன்னேற்றம்” எனும் கோஷத்துடன் அன்புமணி ராமதாஸை முன்னிறுத்தி தேர்தலை தனித்து சந்திக்கின்றனர். தமிழகத்தில் இன்னமும் பலமாக கால் ஊன்றாத பாஜக சில சிறு கட்சிகளோடு தமிழக வளர்ச்சிக்குத் தாங்களே மாற்று எனக் களம் காண்கிறார்கள்.
திராவிட ஆட்சிகள் மதுவிலக்குக் கொள்கையைத் தளர்த்தி மதுவை அனுமதித்து இரண்டு தலைமுறைகளுக்கும் மேல் சீரழித்து விட்டனர் என்பதும், சமூக சீர்கேட்டுக்கு வித்திட்டு வளர்த்தனர் என்ற குற்றசாட்டில் சாரமுள்ளதாகவே பொதுமக்களும் கருதுகின்றனர். மதுவை அறிமுகப்படுத்திய திமுக, தான் மதுவிலக்கை மீண்டும் கொண்டு வந்ததாகவும், எம்ஜிஆரின் தலைமையிலான அதிமுக மீண்டும் அறிமுகப்படுத்திய மதுவிலக்கு தளர்வை, வளர்த்தெடுத்து அரசின் இலாபம் சம்பாதிக்கும் வியாபாரமாக மாற்றியது ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக என்ற குற்றசாட்டை வைக்கின்றனர்.
மதுவிலக்கை வலியுறுத்தி எதிர் கட்சிகள் குரல் எழுப்பிப் போராட்டங்கள் நடத்திய போதும், சசி பெருமாள் எனும் மதுவிலக்கு போராளி உயிர் துறந்த போதும், சட்டசபையில் கேள்விகள் எழுப்பிய போதும், மதுவிலக்கை அமல் படுத்த முடியாது என்ற உறுதியான, பிடிவாதமான நிலைப்பட்டிலிருந்த அதிமுக, பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியின் காரணமாக, பிடிவாதம் தளர்ந்து, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என அதன் பொது செயலாளர் தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார்.
மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருப்பதில் சாதனை புரிந்து தமிழகத்தை ஒளிர வைத்திருப்பதாக அதிமுக பிரசாரம் செய்வதை விமர்சிக்கின்றனர் எதிர் கட்சிகள். அதிமுக ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூட எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை, ஏற்கனவே கட்டமைப்பில் இருந்த மின் உற்பத்தி நிலையங்களின் பணிகள் முடிந்து துவக்கி வைத்ததும், மின்சாரத்தை அதிக விலையில் தனியாரிடமிருந்து பெற்று வினியோகித்ததும் மட்டுமே இந்த அரசின் சாதனை என்ற குற்றசாட்டும், மின்சாரம் வாங்கியதில் பெரும் ஊழலும் நடை பெற்றுள்ளது என்ற பகிரங்கக் குற்றசாட்டு எதிர் கட்சிகளால் வைக்கப்படுகிறது.
எந்த வளர்ச்சி திட்டத்தையும் அமல்படுத்தாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், இலவசங்களையும், பகட்டான அறிக்கைகளை மட்டுமே அதிமுக கடந்த ஐந்தாண்டு காலங்களில் வெளியிட்டுள்ளது என்ற பரப்புரை எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது.
ஆக, இந்த தேர்தலைப் பொருத்தவரையில், மதுவிலக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் வகுக்காதது, இலவசங்களை மட்டுமே அளித்து மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது, ஆரோக்கியமான அரசியலன்றி வெறுப்பு அரசியல் பாதையில் பயணிப்பது போன்றவைகளிலிருந்து அதிமுக- திமுக ஆகிய திராவிட கட்சிகளிடமிருந்து மாற்றமளிப்போம் என புதிதாக அணி அமைத்தவர்கள் முழங்கி வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே ஊடக விவாதங்களும் அரசியல் நோக்கர்களின் கட்டுரைகளும் அமைந்துள்ளன.
இவற்றை சற்றே ஊன்றிப் பார்க்கும் போது, இந்த விவாதங்களில் பங்கேற்க பிரதான கட்சிகளோடு கூட மாற்றுக் கூட்டணியினரும் பங்கேற்க வைக்கப்பட்டாலும், விவாதம் இரு பிரதான கட்சிகளுக்கிடையே மட்டுமே நடக்க ஏதுவாக நெறியாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்தி செல்வது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு எந்த ஊடகமும் விதிவிலக்கல்ல.
விவாதங்களில் சம்பிரதாயக் கேள்விகள் மாற்றம் விரும்பும் அணியினரிடம் வைக்கப்பட்டு அவர்களது கருத்தைக் கூறி முடிப்பதற்குள், இவையெல்லாம் இன்றையப் பிரச்சனையல்ல காலம் காலமாக இருந்துள்ளது, இரு கட்சிகளிடமும் முந்தைய காலங்களில் நீங்கள் கூட்டணி வைத்திருந்த போது நீங்கள் ஏன் எழுப்பவில்லை என அவர்கள் வாயை அடைத்து விட்டு, பிறகு இரண்டு பிரதான கட்சிகளின் லாவணியை ஊக்குவித்து விட்டு நெறியாளர் அமைதியாகி விடுகிறார்.
இந்த கூச்சலுக்கிடையே மாற்றம் வேண்டி அணி அமைத்தவர்கள் குரல்வளை நெறிக்கப்பட்டு விடுகிறது. சில நேரங்களில் மாற்றுக் கருத்தைச் சொல்பவர் குரல் எடுபடும் போது இரு பிரதானக் கட்சிகளில் ஏதாவது ஒன்று தனி நபர் தூஷணையில் ஈடுபட்டு விவாதத்தை திசை  திருப்பி விடுகின்றனர், இதனை சில நெறியாளர்கள் புன்னகையோடு வேடிக்கைப் பார்க்கின்றனர். இவர்களுக்குத் துணையாக சர்வத்திற்கும் நிபுணத்துவம் பெற்ற சமூக/ அரசியல் ஆர்வலர்கள் சிலர் தங்களது கருத்தாக கடந்த கால நிகழ்ச்சிகளையே அசை போட்டு நிகழ்காலத்தையும் எதிர் கால திட்டங்களையும் மக்கள் அறியவொண்ணா வண்ணம் திட்டமிட்டு ஆளும்/ ஆண்ட கட்சிகளுக்கு ஆதரவான குரல்களாக எல்லா தொலைக் காட்சிகளிலும் ஒலிக்கின்றனர்.
இவர்களில் பலருக்கு மக்கள் தொடர்பு என்பது அந்தந்த தொலைக்காட்சி நிர்வாகிகளும், பேசுவதற்கு மேடை வாய்ப்பை அளிக்கும் நெறியாளர்கள் அன்றி பொது மக்கள் இல்லை என்பதை எத்தனை பேர் அறிவார்கள். இந்த காகித புலிகள் தான் நெறியாளர்கள் தங்கள் நோக்கத்திற்கான கேள்விகளை முன்னெடுக்க உதவும் முன்னணிப் படையினர் என்பதை யாரறிவர்.
நேரலையில் பரப்புரைகளை ஒளிபரப்பும் போது கூட இதே நிலைப்பாடு தான் எடுத்தாளப்படுகிறது. அதே சமயத்தில் ஆளும் ஆண்ட கட்சிகளின் செய்திகளும் பரப்புரைகளும் மிகக் கவனமாகக் கையாளப்படுகின்றன. பேச்சுத்திறன் உள்ள தலைமைகளை மட்டுமே உயரத் தாங்கிப் பிடிக்கும் சில ஊடகங்கள், பேச்சாற்றல் குறைவை ஏகடியம் செய்யும்விதமாக காட்சிகளை ஒளிபரப்பியும், கட்டுரைகள் எழுதியும் வருகின்றன. ஒரு தலைமைக்கு அடையாளமாக பேச்சாற்றல் மட்டுமே அலகாய் இப்படிப்பட்ட ஊடகங்களாலும் சில நெறியாளார்களாலும் வைக்கப்படுவது என்பது எள்ளி நகைக்கத் தக்கது. இங்கு கொள்கைகளுக்கும் செயல் திறனுக்கும் அங்கீகாரமில்லை, நகாசு பூசிய நாவன்மைக்கே முக்கியத்துவம் என்பது போல நேரலை நிகழ்ச்சி அமைப்புகள் உள்ளன.
மொத்தத்தில், கட்சிகளுடைய மக்கள் நலத்திட்டங்கள் என்ன, அவற்றை அமல் செய்ய அவர்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன, சாத்தியக் கூறுகள் உண்டா, வாக்குறுதிகளில் நம்பிக்கைத் தன்மை உண்டா, ஏன் மாற்றம், எப்படியான மாற்றம், மாற்றம் தேவையா போன்ற ஆக்கபூர்வ விவாதங்கள் எந்த ஊடகத்திலும் நடப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் திருவிழாவில் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்கள் எல்லாம் அதிமுகவிற்கும் திமுகவிற்குமிடையே நடக்கும் எரிந்த கட்சி- எரியாத கட்சி எசப்பாட்டாகத்தானிருக்கிறது என்றால் மிகையில்லை. சில ஊடகங்கள் பொது வெளியில் நடத்தும் பட்டிமன்றங்களும் குறிப்பிட்ட கட்சிகளின் பிரசார மேடைகளாகவே காட்சியளிக்கின்றன. தலைப்புகளும் இந்திய பாரளுமன்ற தேர்தல் முறைகளுக்கு ஒவ்வாத வகையிலேயே இருக்கின்றன.
உதரணத்திற்கு, இலவசங்கள் அறிவிக்கக் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல். ஆனால், தலைப்போ, “ மக்களின் வாக்கு வளர்ச்சி திட்டங்களுக்கா, இலவசம் எனும் பேதமைக்கா”  என்ற வண்ணமேயுள்ளது. இலவசங்களை வாரி வாரி வழங்கியவர்கள் அதனை மக்கள் நலத் திட்டங்களாக வகைப்படுத்தும் மேடையாக இந்த பட்டிமன்றங்கள் பயன்படுவதைத் தவிர பொது மக்களுக்கு கொள்கைத் தெளிவை ஏற்படுத்தும் வகையிலில்லை என்பது கண்கூடு. இந்த பட்டி மன்றத்தின் நோக்கம் தொலைக்காட்சிக்கு ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்கிறது. இதனைத் தான் தினம் தினம் தொலைக்காட்சி அரங்கத்திலும் பேசுகிறார்களே. நகைக்கப் பேசுபவர்களையும், எதுகை மோனையுடன் பேசி கைதட்டு பெறக் கூடியவர்களையும் மேடை ஏற்றுவதைத் தவிர வேறு புதுமையில்லை.
நடக்கும் சட்டமன்ற தேர்தலை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையேயான போட்டி தேர்தலாக மட்டுமே சித்திரிப்பது இந்த ஊடகங்கள் தான். மாற்றத்தை முன் வைக்கும் அணிகளுக்கு நியாயமான போதிய தொலைக்காட்சி நேரமோ, விவாதங்களை சரியான கோணங்களில் நகர்த்திச் சென்று மாற்று கருத்துக்களை வலுவாக வைக்க உரிய வாய்ப்புகளோ அதிமுக- திமுக கூச்சலில் மங்கிப் போகும் வண்ணம் மறுக்கப்படுவதும் தினம் தினம் தினம் நடக்கிறது.
தில்லியில் தோன்றிய மக்கள் புரட்சியான “ஆம் ஆத்மி” பாரம்பர்ய கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்ததில் ஊடகங்களின் பங்கு பெரியது. ஆம் ஆத்மி கட்சியென்பதே ஊடகங்களால் உருவானது என்று பெரிய கட்சிகளால் விமர்சனங்கள் கூட வைக்கப்பட்டது. மாற்றத்தை மக்கள் விரும்பியது போல் ஊடகங்களும் வேண்டியதால் மாற்றம் சாத்தியமானது. தமிழ்நாட்டில் ஊடகங்களின் நடவடிக்கைகள் காணும் போது, மக்கள் விரும்பும் மாற்றம் முழுமையான மக்கள் புரட்சியாக அலையாக மாறாமல் திராவிடக் கட்சிகளின் கைகளிலேயே தமிழகம் சிக்கியிருக்க ஊடகங்களும் விரும்புகின்றனவோ எனும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.
சர்ச்சைக்குறிய பேச்சுகளை ஒளிபரப்பினால் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கைக் கூடும் என்ற எண்ணமாயிருக்கலாம். இதில் வியாபாரம் தான் பிரதானம், ஊடக தர்மமோ, பொது மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கொண்டு செல்வதில் ஆர்வமில்லை. இதே பாணியே பரப்புரையை ஒளிபரப்புவதிலும் காணப்படுகிறது. ஊடகங்கள் ஆளும் அல்லது ஆட்சிக்கு வரக் கூடிய கட்சிகள் எனக் கருதுபவர்களிடம் வியாபார ரீதியாக பலன் பெறுவதற்காககவோ, தங்களது ஊடக வீச்சைப் பாதுகாத்துக் கொள்ளவோ இவர்களை திரும்பி திரும்பி உயர்த்திப் பிடிக்கிறார்களோ என்ற எண்ணம் எழுவது தவிர்க்க முடியாமலிருக்கிறது. இதில் நெரிக்கப்படுவது ஊடக தர்மம் என்பதே நிதர்சனம்.
மக்களின் மனதைப் பிரதிபலிக்க வேண்டிய ஊடகங்கள், சில தலைமைகளைப் போல மக்களிடமிருந்து விலகியிருப்பது போல், மாற்றத்தை விரும்பாததைப் போலவே தெரிகிறது…