பக்தவச்சலமும் ஜெயலலிதாவும்

தற்போது நடை பெறவுள்ள சட்டமன்ற தேர்தல், 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலோடு பலராலும் ஒப்பீட்டுப் பார்க்கப்படுகிறது. வெகு ஜன காணொளி ஊடகங்களிலும் இதே போன்ற கருத்துக்களை சில அரசியல் நோக்கர்கள் முன் வைக்கின்றனர். உண்மை நிலை என்ன? இரு கால கட்டங்களிலும் இருந்த கள நிலவரம் என்ன, ஒப்பீட்டுக்குறியதா என்ற கேள்விகளும் எழுகின்றன.

இராஜாஜி, காமராஜருக்குப் பின் பதவியேற்ற திரு. பக்தவசலம் அவர்கள் காமராஜரைப் போல வெகு ஜன ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. இதே கால கட்டத்தில் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்திருந்த திராவிடக் கட்சியான திமுக தனது பலத்தை அதிகரித்து வந்தது. அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி சரிவை சந்தித்து கொண்டிருந்த நேரமது. வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா சுதந்திரமடைந்த பின் பிறந்து 35 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களின் கொந்தளிப்பிற்கும் அதிருப்திக்கும் விலைவாசி ஏற்றம் வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை போன்ற அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் மிக முக்கிய காரணிகளாக இருந்தன. தமிழ் நாட்டைப் பொருத்த மட்டில் , திரு பக்தவசலம் மந்திரி சபையின் மீது ஊழல் குற்றசாட்டுகளும், உணவுப் பொருட்கள் பற்றாக்குறையும் எழுந்தன. குறிப்பாக, உணவுப் பொருட்கள் காங்கிரஸ் ஆதரவு பெரு வியாபாரிகளால் பதுக்கப்பட்டு செயற்கையான பஞ்சம் போன்ற நிலை உருவானதாகக் குற்ற சாட்டு எழுந்தது. திரு. பக்தவசலம் ஆட்சியின் நிர்வாகக் குறைபாடுகளும் பெரிதாக வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. திரு. பக்தவசலம் ஆட்சியில் பதுக்கலும், திறமையற்ற நிர்வாகமும் காங்கிரசின் மீது தமிழக மக்களுக்கு பெரிதும் அதிருப்தி வளர காரணமாயிருந்ததாக அரசியல் வரலாற்றாசிரியர்கள் பதிவிடுகிறார்கள். அவர்களில் ஒருவர் அந்த கால கட்டத்தை செம்மையாக இவ்வாறு விவரிக்கிறார், “ ஒருமுகத்தன்மையற்ற வெறுப்பும், திக்குமின்றி புரட்சியாளர்கள் எவருமின்றி புரட்சிக்கு மக்கள் தயாராக இருந்தனர்”

இதே நேரத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வளர்கிறது என்ற திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. வட மாநிலங்களின் வளர்ச்சிக்காக தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் சுரண்டப்படுவதாகப் பிரசாரங்கள் செய்யப்பட்டன. சம்ஸ்கிருதத்திற்கும், ஹிந்தி மொழிக்கும் கடும் எதிர்ப்பு வெடித்தது. மாநிலங்களுக்கிடையே பரஸ்பர பரிவர்த்தனை மொழியாக இருந்த ஆங்கிலம் மாற்றப்பட்டு ஹிந்தி திணிக்கப்படுமோ எனும் அச்சம் எழுத்ததே இதற்குக் காரணம். இதன் காரணமாக உதித்த தமிழ் தேசிய சிந்தனைகள் பல போராட்டங்களுக்கும் கலவரங்களுக்கும் வித்திட்டது. ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரும் என நேரு அளித்த வாக்குறுதி கூட போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தவில்லை. இந்த காலகட்டத்தில் திமுகவின் வசம் முக்கிய நகராட்சிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவினரின் பிரசாரத்தை எதிர் கொள்ள தமிழக காங்கிரஸ் பெரிய சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. சிரு சிறு கண்டன ஆர்பாட்டங்களும் மக்கள் அச்சமுரத் தேவையில்லை ஹிந்தி திணிக்கப்படாது என்ற பரப்புரை மட்டுமே செய்தனர். இது மக்களிடையே எடுபடவில்லை.

ஆனால், திமுகவோ, திருச்சிராப்பள்ளியில் மிகப் பெரிய ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டிற்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த மாநாட்டிற்குப் பெரும் தமிழ் தொழிலதிபர்களும் பண உதவி செய்தனர். “ஹிந்தி ஒழிக, குடியரசு வாழ்க” கோஷம் மக்களிடையே பெரிதும் ஆதரவைப் பெற்றது. அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு மாணவர்களும் பெருமளவில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரம் பெரும் போராட்டமாக வெடித்து தமிழகம் முழுவதும் பரவியது. பல உயிரிழப்புகளும் அதனைத் தொடர்ந்து தன்னிச்சையான மக்கள் எழுச்சியும் ஏற்பட்டது. கலவரங்களைத் திமுக தூண்டியது என திமுக மீது திரு. பக்தவசலம் வைத்த குற்றசாட்டுகளை வைத்தார். ஆனால் அதை நிருபிக்கும் விதமாக ஆதாரம் எதனையும் அளிக்காததால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான வெறுப்பு அதிகரித்தது. மொத்தத்தில் காங்கிரஸ் நிலைமையை சரியாக கணித்து எதிர் வினையாற்றவில்லை என்பது உண்மை. இந்த போராட்டம் பல மொழிப் போர் தியாகிகளை உருவாக்கியது திமுகவின் பலத்தை அதிகரித்தது என்றால் மிகையல்ல.

1967 ல் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்தியா பொருளாதாரச் சிக்கலில் இருந்தது. காங்கிரசுக்கு நாடு தழுவிய எதிர்ப்பும், பொருளாதாரத் தேக்க நிலையையும் கருத்தில் கொண்டு தேர்தலை தள்ளி வைக்கக் கூட ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமலிருக்க மூதறிஞரின் முயற்சியால் காங்கிரசுக்கு எதிரான கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் பிரதான கட்சியாக திமுக பங்கேற்றது. நின்ற 173 இடங்களில் 138 இடங்களை வென்று காங்கிரஸை வீழ்த்தி தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

இப்போது 2016 க்கு வருவோம்.

ஆட்சியில் இருக்கும் அதிமுக வின் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள்:

1. வெளிப்படைத் தன்மையற்ற ஆட்சி

2. அணுக முடியாத அரசுத் தலைமை

3. ஊழல் குற்றசாட்டில் தண்டனை பெற்று, மேல் முறையீடு செய்திருக்கும் முதல்வர்

4. சட்ட சபையில் எதிர் கட்சிகளுக்கு நியாயமான ஜனநாயக உரிமைகள் மறுப்பு

5. 110 விதியின் கீழ் அறிவிப்புகளால் மட்டுமே நடக்கும் ஆட்சி

6. வளர்ச்சித் திட்டங்களில் பெரும் தேக்கம், முந்தைய ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டப் பணிகள் போதிய காரணமின்றி காழ்ப்புணர்சியின் அடிப்படையில் நிறுத்தம்

7. அறிவிக்கப்படாத அவசர நிலை போல ஊடகங்கள் மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் மீது எதற்கெடுத்தாலும் மான நஷ்ட வழக்கு; அரசை விமர்சித்துப் பாடியதால் தேச துரோகக் குற்றசாட்டு போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள்

8. நீண்ட கால திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தாத நிலை

9. சமீபத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தைக் பொறுப்பற்ற முறையில் கையாண்ட விதத்தில் வைக்கப்படும் விமர்சனங்கள்

10. அமைச்சர்கள், அதிகாரிகள் மீது தொடர்ந்து வைக்கப்படும் ஊழல் குற்றசாட்டுகள்

11. காரண காரியங்கள் விளக்கப்படாத அதிரடி அமைச்சவரை மாற்றங்கள். நீக்கப் பட்ட அமைச்சர்களே திரும்பவும் பதவிக்கு வரும் அவலம்

12. அரசு அதிகாரிகள் சுயமாக செயல்பட அனுமதிக்காமல் அலுவல்களில் தலையிடும் கட்சி அதிகார மையங்கள்

13. தலைமைச் செயலரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட எந்த விளைவுகளுக்கும் பொறுப்பேற்காத முதல்வரின் ஆலோசகர்கள்

14. ஆட்சி அதிகாரத்தில் மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உள்ள அலட்சியப் போக்கு

15. சட்டம் ஒழுங்கில் சுணக்கம், காவல் நிலையங்களில் புகார் பதிவதில் சிரமங்கள், பொய் வழக்குகள், புலன் விசாரணையில் திணறும் காவல்துறை

16. கண்டிக்கப்படாத, தண்டிக்கப்படாத தொடரும் சமூக குற்றங்கள்

17. அடிக்கல் நாட்டுவது/ காணொளி மூலம் திட்டத் துவக்கங்கள் மட்டுமே நடைபெறுகின்றன திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில்லை

18. செயல்படாத அமைச்சர்கள், அமைச்சரவை

19. மது விலக்கில் மக்கள் கருத்துக்கு எதிரான “அமல் படுத்த மாட்டோம்” என்னும் பிடிவாதமான நிலைப்பாடு

20. ஐந்தாண்டுகளில் ராக்கெட் வேகத்தில் ஏறியிருக்கும் விலைவாசி

21. இலவசம், விலையில்லா பொருட்கள் என வழங்கி மக்களை சோம்பேறியாக்கியது (திமுக மீதும் இந்த குற்றசாட்டு உண்டு)

22. இன்னும் பல பல சுழற்றியடிக்கும் குற்றசாட்டுகள்

திரு.பக்தவசலம் ஆட்சியில் இருந்தது போலவே திரு.ஜெயலலிதா ஆட்சி மீதும் ஊழல் குற்றசாட்டுகளும், நிர்வாகக் குறைபாடுகள் , நிர்வாகத் திறமையின்மை, அதிகாரிகள் மட்டத்தில் ஊழல், பொது மக்களால் தாங்க இயலாத விலைவாசி உயர்வு போன்றவை ஒப்பீட்டுப் பார்க்கத்தக்கவையே.

அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளில், பால், அரிசி, பருப்பு, மின்சாரம், போக்குவரத்து, அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றின் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், தனிமனித வருமானம் அதே விகிதாசாரத்தில் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த ஐந்தாண்டுகளில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் பெரிய தொழில் திட்டங்கள் எதுவும் அரசுத் துறையில் ஏற்படுத்தப்படவில்லை. வெகு நாட்களுக்கு முன்பே நடத்தப்பட வேண்டிய முதலீட்டாளரை ஈர்க்கும் மாநாட்டை தனி மனித வழிபாட்டாலும், அலட்சியப் போக்காலும் ஆட்சியின் இறுதி காலத்தில் நடத்தி சில இலட்சம் கோடி முதலீட்டை கொண்டு வந்ததாக விளம்பரம் செய்தது மட்டுமே இந்த ஆட்சியின் சாதனையாக இருந்திருக்கிறது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கையாண்ட விதத்தில் அரசு தனது கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருந்து மக்களைப் பெருந்துன்பத்திற்காளாக்கியது என்ற எண்ணம் உள்ளது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் சென்னை, திருவள்ளூர் மக்கள் கொதிப்படைய வைத்துள்ளது. அது மட்டுமின்றி வெள்ள நிவாரணப் பணிகளில் குழப்பம், வெள்ளப் பகுதிகளை நேரில் பார்க்க கூட வராத முதலமைச்சர், நிவாரணப் பணிகளில் அதிமுக தொண்டர்களின் அத்துமீறல்கள் என சரமாரியான குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அதிமுக தரப்பிலோ, தமிழக முதல்வர் தரப்பில்லோ இது வரை ஏற்கக் கூடிய சமாதானம் எதுவும் சொல்லப்படவில்லை என்பது அணுக முடியாத முதல்வர் என்ற பிம்பத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

மது விலக்கு குறித்து மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், ஆளும் கட்சி தவிர்த்து, ஒரணியில் மது விலக்கு அமல் படுத்த ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். மதுவிலக்கை வலியுறுத்திப் போராடிய தியாகி சசி பெருமாள் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். இத் துயர சம்பவத்திற்கு முதல்வர் வருத்தம் கூட தெரிவிக்காதது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆளும் அதிமுக அரசு, மது விலக்குக் கொள்கையில் பிடிவாதமாக விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை சட்ட மன்றத்திலேயே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். பெரும்பான்மையான கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் மது விலக்கிற்கு பிரதான இடத்தை அளித்துள்ளார்கள். வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல் நடவடிக்கையே மது விலக்கை அமல் படுத்துவது தான் என அறிவித்துள்ளார்கள். இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கள நிலவரம் ஆட்சியின் மீது அதிருப்தி என்ற கோணத்தில் 1967 ம் 2016ம் தராசில் குறைந்த பட்சமாக சமமாக இருக்கிறது. மக்கள் எழுச்சி என்பதில் சற்றே வித்தியாசமான சூழலே நிலவுகிறது. வெளிப்படையான தன்னிச்சையாய் ஹிந்தி எதிர்ப்புக்கு வெளிப்பட்டதைப் போன்ற எழுச்சி மது விலக்கு எதிர்ப்புக்கு இல்லை என்பது நிதர்சனம். அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் மது விலக்குப் பிரச்சனையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

எதிர்கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக தவிர்த்து மற்ற கட்சிகள் தனித் தனி அணியாகவே தான் இருக்கிறார்கள். அதிமுக, பாமக தனியாகவும், திமுக காங்கிரசுடனும் கூட்டணி அமைத்து களம் காண்பதில் ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் சிதற வாய்ப்புள்ளது. 1967 ல் காங்கிரசின் மீதான குற்றசாட்டுக்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லும் திறன் அப்போதைய திமுக தலைவர்களிடம் இருந்தது. காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்திருந்த மக்கள் திமுக பரப்புரையை ஏற்றுக் கொண்டார்கள். 1967 ல் அப்பழுக்கின்றி திமுக காட்சியளித்தது, அதே போல் 2016 ல் ஊழல் குற்றசாட்டுகள் இல்லாத கூட்டணிகள் உள்ளன. தனி மனித விமர்சனங்களைத் தவிர்த்து அதிமுக ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்தும் பரப்புரையை மேற்கொண்டால் மட்டுமே மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி வாக்குகளாக அறுவடை செய்ய எதிர் கட்சிகளால் முடியும்.

மீண்டும் அரசியல் சரித்திர எழுத்தாளர் வார்த்தையில் சொல்வதானால் “புரட்சியாளர்கள் எவருமின்றி புரட்சிக்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்”, வழி நடத்தி வெற்றி காணவேண்டியது ஊழலற்ற அரசியல் தலைமை தான்.

2016 1967 ஆகுமா, மே 19 தெரியும்….!

— சந்திரா பாரதி