ஸ்ரீநகர்

காஷ்மீர் செஷன்ஸ் நீதிபதி அப்துல் ரஷித் மாலிக் ஒரு ஜாமீன் மனுவில் வழங்கி உள்ள உத்தரவு கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சென்ஷன்ஸ் முதன்மை நீதிபதியாக பணியாற்றுபவர் அப்துல் ரஷித் மாலிக்.  இவர் ஒரு ஜாமீன் மனுவை விசாரித்து  வந்த போது  தம்மிடம் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி குறுக்கிட்டு ஜாமீன் வழங்க வேண்டாம் எனச் சிபாரிசு செய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

தனது தீர்ப்பில் அப்துல் ரஷித் மாலிக் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.   அந்த தீர்ப்பில்,  ”ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜாவேத் இக்பால் வாமி இன் செயலர் தாரிக் அகமது மொலா என்பவர்  என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இந்த ஜாமீன் மனு குறித்துப் பேசினார்.  அப்போது அவர் ஜாமீன் வழங்க வேண்டாம் என நீதிபதி கூறியதாகத் தெரிவித்தார்.

அந்த உரையாடலில் அவர், “எனக்கு நீதிபதி ஜாவேத் இருபால் வாமி தெரிவித்தபடி நீங்கள் ஷேக் சல்மானுக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் எனக் கூறி உள்ளார்.  அவரது முன் ஜாமீன் வழக்கு ஏதாவது நிலுவையில்  இருந்தாலும் இதே முடிவை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

எனவே நான் இந்த விஷயத்தில் எதுவும் முடிவெடுக்க முடியாமல் உள்ளேன்.  மேலும் நான் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இது குறித்து அளித்துள்ள மனுவில் இது ஒரு தனிமனிதன் சுதந்திரம் சம்பந்தப்பட்டதால் இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி தலையிட்டு நடவடிக்கை வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளேன். “ எனத் தெரிவித்துள்ளார்.