சாரேகேலா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு 17 வயதுப் பெண் ஆதரவின்றி நட்ட நடு சாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சாரேகேலாவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்தவரின் நண்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.  நட்பு நாளடைவில் காதலாக மாற, அந்த காதலனை நம்பி அந்தப் பெண் உறவுக்கும் சம்மதித்துள்ளார்.  அதனால் கர்ப்பமான அந்தப் பெண்ணை காதலர் கை விட்டு விட்டார்.

பிறகு சிறுமியின் குடும்பத்துக்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.   உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் இது தெரிந்தால் அவமானம் என கருதிய பெற்றோர் ஆறு மாத கர்ப்பிணியான அந்தப் பெண்ணை வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.   வாழ வழியின்றி தெருவிலும் சாலையிலும் அந்தச் சிறுமி பிச்சை எடுத்து பிழைத்து வந்திருக்கிறார்.

நிறை மாதமான அவர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு பிள்ளைப்பேறுக்காக சென்றுள்ளார்.   அங்கு இருந்த பணியாளர்கள் அவரை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.   தெருவிலேயே இருந்த அந்தச் சிறுமிக்கு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது.   குழந்தையின் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் ரோட்டில் மயக்கமாக கிடந்துள்ளார் அந்தச் சிறுமி.

அந்த வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர் அதைக் கண்டு மனம் வருந்தி உடனடியாக தாயையும் குழந்தையையும் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.