டில்லி:

ஜிஎஸ்டி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை  மத்திய பாஜக அரசு பறித்து விட்டது என்று அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாராளுமன்ற அவையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில்,  அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது இரு கட்சி களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடுமுழுவதும் விரைவில் லோக்சபா தேர்தல் நடை பெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக பாஜக கூட்டணி என்று தகவல்கள் பரவி வருகின்றன. இரு கட்சிகளிடையே திரைமறைவில் கூட்டணி குறித்து பேச்சு நடைபெற்று வருவதாகவும், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக எம்.பி.யும், துணை மக்களவை சபாநாயகருமான தம்பித்துரை, பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், தம்பிதுரையின் கருத்துகள், அதிமுகவின் அதிகாரபூர்வ கருத்துகள் அல்ல என்று அதிமுகவும்,  தமிழக பாஜக கூறி வருகிறது.

இருந்தாலும் தம்பித்துரையின் அட்டாக் தொடர்ந்து வருகிறது. மத்திய அரசின் 10 சதவிகித இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் கடுமையாக விமர்சித்த தம்பிதுரை,  சமீபத்தில், செய்தியாளர்களிடம் பேசும்போது,  தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்றும், தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள்  திராவிடக் கட்சிகளை தமிழ்நாட்டில் வரவிட மாட்டோம் என்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்றவர்,  இவர்களை நாங்கள் எப்படி வரவிடுவோம்?” என  எதிர்க்கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தம்பிதுரை,  பாஜகவை மேலும் கடுமையாக சாடினார்.

மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தி யாசமுமில்லை  என்றவர்,  மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கை போன்று உள்ளது விவசாயிகளுக்கு குறைந்தது 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும் என்றவர், தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018ம் ஆண்டு அறிவிக்கவில்லை  என்று கேள்வி எழுப்பினார்.

மத்தியஅரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக சிறு குறு தொழிலாளர் களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்று கேள்வி எழுப்பியவர், ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டது என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயர்ந்துள்ளது வரவேற்கக்கூடியது என்றாலும், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைப் பஞ்சம் நிலவுகிறது.

வேளாண் சார்ந்த பிரச்சினைகள் இந்த ஆட்சியில் தொடர்கின்றன. ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது என்னாயிற்று?

விளைபொருட்களுக்கு ஆதார விலை உயர்த்தப்பட்டாலும், வருமானம் இரட்டிப்பாக்கப்பட வில்லை. பிரதமரின் விவசாயிகள் திட்டம் என்பது நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொருந்துகிறது. நிலம் இல்லாத விவசாயிகளுக்கு உதவவில்லை.

என்னுடைய தொகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் அனைத்தும் முறையாகக் கட்டப்படவில்லை. (புகைப்படத்தைக் காட்டினார்) நகரில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இவை கட்டப்பட்டுள்ளன. மிக தொலைவில் உள்ள கழிப்பறைகளை பெண்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்?

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறார், பேசி வருகிறார். ஆனால், சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்குவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது?

மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் அனைத்தும் நசிந்து, அழிந்துவிட்டன. இதில் ஏதோ அரசியல் ஆதாயம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், எனக்கு அது புரியவில்லை.

ஜிஎஸ்டி வரியை காங்கிரஸும் பாஜகவும் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், மாநிலங்க ளுக்கு உதவாத திட்டமாகவே ஜிஎஸ்டி வரி இருக்கிறது. ஆந்திரப் பிரதேச எம்.பி.க்கள் நாள்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள். ஏனென்றால், அவர்களிடம் பணம் இல்லை. மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன.

தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு தர வேண்டிய நிதி ரூ.12 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே இந்த நிதியை நாங்கள் கோரினோம். ஆனால், மத்திய அரசு தராமல் இன்னும் தாமதிக்கிறது.

இதுதான் கூட்டாட்சியா. எந்த விதமான பணமும் இல்லாமல் எங்கள் மாநிலத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்.

தமிழகம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், அந்தத் திட்டமே தற்போது எங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. 15 நிதிக்குழுவில் மக்கள் தொகை அடிப்படையில் நிதிஒதுக்கீடு என்று கூறிவிட்டார்கள்”.

இவ்வாறு தம்பிதுரை பேசினார்.

தம்பித்துரையின் நேரடி குற்றச்சாட்டு மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தம்பித்துரை பேச்சின்போது தெலுங்கு தேச எம்.பி.க்கள் குறுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.