கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 1ம் தேதியும், புதுவையில் ஜூன் 6ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் முதல் வாரம் பள்ளிகள் துவங்கும் என்பதால், பள்ளி திறக்கும் நாளை பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், புதுவை மாநிலத்தில் (யூனியன் பிரதேசம்) ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
download (1)
மேலும் பள்ளி திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜூன் 1-ம் தேதி அனைத்து தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும். பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே அரசு நலத்திட்டங்களான விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட வேண்டும். விலையில்லா பேருந்து பயண அட்டைகள் தேவைப்படும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயண அட்டைகள் பெற்றுத் தருவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, சுத்த மான குடிநீர் பயன்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பிகள், மின்கசிவுகள், பழுதடைந்த கட்டிடங்கள், புல் புதர்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.