KARUNNITHI
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதற்கு, ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சரையோ, துறைகளின் அமைச்சர்களையோ சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் பல நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது. மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்த காரணத்தால் சென்னை துறைமுகத்தின் கையாளும் திறன் படிப்படியாகக் குறைந்து, மூடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வந்தது.
சென்னைத் துறைமுகம் பற்றி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, “மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேவைப்பட்டால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதையில் சிறிய மாற்றம் அல்லது புதிய பாதை அமைக்கக் கூட நாங்கள் தயாராக உள்ளோம்.
இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், மிகவும் பழமை வாய்ந்த சென்னைத் துறைமுகம் வருங்காலத்தில் காட்சிப் பொருளாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்று மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் செயலாக்கம் பெற வேண்டுமென்ற முக்கியத்துவத்தை உணர்ந்து கூறியிருக்கிறார். “தினமலர்” நாளேடு கூட 13-3-2016 அன்று விரிவாக வெளியிட்ட செய்தியில், “ஆரம்பத்தில் நன்கு இலாபத்தில் இயங்கி வந்த சென்னைத் துறைமுகம், மாநில அ.தி.மு.க. அரசின் ஒத்துழைப்பு கடந்த சில ஆண்டுகளாக இல்லாததால் பெரும் நட்டத்தில் இயங்குகிறது. துறைமுகத்தின் முக்கிய பிரச்சினையே போக்குவரத்து நெருக்கடி தான். இதைச் சரி செய்ய தி.மு. கழக ஆட்சியில் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு அத்திட்டத்தை முடக்கி வைத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு வரை சென்னைத் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் இலாபம் சம்பாதித்தது. அதன் பிறகு துறைமுகம் நட்டத்தில் இயங்க ஆரம்பித்தது” என்றெல்லாம் “தினமலர்” நாளேடே எழுதியிருப்பதில் இருந்தே சென்னைத் துறைமுகத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். சென்னை மாநகரத்தின் முக்கியமான அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமான மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் குறித்து மத்திய அமைச்சரும், சில நாளேடுகளும் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு அதிமுக அரசு இதுவரை பதிலேதும் அளிக்க வில்லை.
இந்த நிலையில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர், திரு பியுஷ் கோயல் அவர்கள் நேற்றையதினம் (26-3-2016) டெல்லியில் பேசும்போது, “நான் பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய மின் திட்டங்கள் தொடர்பாக அங்குள்ள முதலமைச்சர், மற்ற அமைச்சர்களுடன் பேசிவருகிறேன்.
கடந்த 18 மாதங்களில் இப்படி 28 மாநிலத்தின் மின்துறை அமைச்சர்களை மட்டுமல்ல, முதல்வர்களுடன் கூட சந்தித்துப் பேச முடிந்தது. இதில் 29வது மாநிலம் தமிழ்நாடு; தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம் தான். ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை என்னால் இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒருமுறை மின் துறை அமைச்சரிடம் பேசினேன். அதற்கு அவர், “நான் அம்மாவிடம் பேசுகிறேன்” என்றார். ஆனால் அதன்பின் பல மாதங்கள் பதில் வரவில்லை. நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சி எம்.பி.க்கள் தாங்களாகவே ஒருவரும் வாய் திறப்பதே இல்லை. அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால், அதற்கு சென்னையில் இருந்து அறிக்கை தயாரித்து வர வேண்டும். கடந்த 18 முதல் 22 மாதங்களில் தமிழக முதல்வருடனும் பேச முயற்சி செய்தேன். என்னால், ஒரே ஒரு முறை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அடுத்த முறை சென்னையில் சந்திக்க உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எனக்கு அவரிடமிருந்து வாய்ப்பு கிடைக்கவே இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலொழிய மின் துறையைப் பொறுத்தவரை அந்த மாநிலத்திற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. (Unless there is a change of Government in Tamil Nadu, I cannot make any significant impact)” என்று பேசி, ஊடகங்களில் எல்லாம் பரபரப்பாக அந்தச் செய்தி வந்துள்ளது.
அ.தி.மு.க. அரசு, மத்திய அரசோடு எந்த அளவுக்குத் தொடர்பு வைத்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. தமிழகத்திலே உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி அ.தி.மு.க. அரசின் சார்பில் அவ்வப்போது மத்திய அரசின் அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு பேசினால் தானே தமிழகத்திற்குத் தேவையானவற்றைச் செய்திட இயலும். தமிழக முதல் அமைச்சர் வேண்டுமானால், “பிரதமரோ, மத்திய நிதி அமைச்சரோ என் வீட்டிற்கு என்னைத் தேடி வந்து சந்தித்து விட்டுப்போகட்டும்” என்ற அளவிலே இருந்தால் தமிழ்நாட்டின் தேவைகள் எவ்வாறு நிறைவேறும்?
பத்திரிகையாளர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க முடிவதில்லை. மத்திய அமைச்சர்களும் அவரைப் பார்த்துப் பேச முடியவில்லை. வாக்களித்த பொது மக்களும், தங்கள் குறைகளை முதலமைச்சரிடம் நேரில் சொல்ல வாய்ப்பளிப்பதில்லை. ஏன்; மூத்த அதிகாரிகளே கூட முதல்வரை நேரில் கண்டு நிர்வாகப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு நேரம் குறிப்பதில்லை. அது மட்டு மல்லாமல் அ.தி.மு.க. அமைச்சர்களோ, சட்டப் பேரவை உறுப்பினர்களோ கூட, தேவை எழும்போது சகஜமாக முதல்வரைச் சந்திப்பதற்கான சூழ்நிலை இங்கே இல்லை. இப்படி முதலமைச்சர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டிருந்தால், நிர்வாகச் சக்கரம் எப்படி மக்களுக்குப் பயன்தரும் வகையில் சுழலும்? மாநிலத்தில் ஜனநாயகம் எப்படி உயிர்ப்போடு உலவிட முடியும்?
மத்திய அரசின் மின் துறை அமைச்சர் அவர்களே, தனக்கு முதலமைச்சரையோ அல்லது அமைச்சரையோ சந்தித்து விவாதிக்க வாய்ப்பு இல்லை என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசு பற்றி பேசியிருக்கிறார் என்கிறபோது, இதற்கு அ.தி.மு.க. அரசின் பதில் என்ன என்பதை உடனடியாக தமிழக முதலமைச்சர் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.