jjmk
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, தன் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கு குறித்த விசாரணையில் தானே நீதிமன்றம் சென்று ஆஜராகப்போவதாக, தி.மு.க . தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜனவரி 18ஆம் தேதியன்று காலை 10.30 மணி அளவில், சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு நானே நேரில் சென்று ஆஜராவதென முடிவு செய்துள்ளேன்
முதலமைச்சர் ஜெயலலிதா நான்காண்டு காலத்தில் சாதித்தது என்ன என்று “ஆனந்த விகடன்”, 25-11-2015 தேதிய இதழில், வெளியிட்ட கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை நான் அப்படியே எடுத்து அறிக்கையாக 21-11-2015 வெளியிட்டிருந்தேன். பாரம்பரியப் பெருமைமிக்க பழம்பெரும் இதழ் என்றும், நடுநிலை இதழ் என்றும் நாட்டினரால் மதிக்கப்படும் ஒன்றில் வெளி வந்த கட்டுரையை நான் எடுத்துக் காட்டியதற்காக, என் மீது அவதூறு வழக்கு ஒன்றை இந்த ஆட்சியினர் தொடுத்திருக்கின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சி அதிகாரம் கையிலே இருக்கிறது என்பதற்காக இவ்வாறு எதிர்க்கட்சியினரையும், ஆளுங்கட்சியை ஆதரிக்காத நடுநிலைப் பத்திரிகைகளையும் அச்சுறுத்துகின்ற வகையில் எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடுத்து வருகிறார்கள். அப்படி இதுவரை சுமார் இருநூறு அவதூறு வழக்குகளைத் தொடுத்துள்ளார்கள். தற்போது ஜெயலலிதா தொடுத்துள்ள வழக்கினைச் சட்ட ரீதியாக எதிர் கொள்ளப் போவதாக ஆனந்த விகடன் அறிவித்து விட்டது!
என்னைப் பொறுத்தவரை, ஜெயலலிதா என் மீது தொடுத்திருக்கும் எத்தனையோ அவதூறு வழக்குகளில் இதுவும் ஒன்று என்பதால், சட்ட நியாயத்தை நிலைநாட்டிட இந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். ஆனாலும் கழக வழக்கறிஞர்கள் என்னை சந்தித்து, இந்த வழக்கில் இடைக்காலத் தடையாணை பெறலாம் என்று யோசனை தெரிவித்த போது, அது தேவையில்லை என்றும் நானே நேரில் நீதி மன்றத்தில் ஆஜராவதாகவும் தெரிவித்திருக்கிறேன்.” – இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.