samy
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை இன்றும் தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பி.வி.ஆச்சார்யா தன்னுடைய வாதங்களை நிறைவு செய்ததை அடுத்து மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் தனது சுருக்கமான வாதத்தில் ஊழல் தடுப்பு சட்டம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட சில தீர்ப்புகளில் உள்ள முக்கியமான பகுதிகளை படித்துக் காட்டினார்.
’’குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட பிறகே அவை தாக்கல் செய்யப்பட்டன.
கர்நாடகா ஐகோர்ட்டு, அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யாவை வாதாட அனுமதி அளிக்க வில்லை. அவருக்கு அளிக்கப்பட்டது ஒரு நாள் மட்டுமே. அவர் 1,000 பக்கங்களில் வாதங்களை தாக்கல் செய்தார். இப்படி அவசரப்படுத்தியதால் கணக்குகளில் பல பிழைகள் ஏற்பட்டன.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முதல்வர் பதவியில் உள்ள ஒருவர் மேல்முறையீடு செய்கிறார். அவரிடமே உள்துறை இலாகாவும் உள்ளது. அந்த மாநிலத்தின் போலீஸ் அரசுத்தரப்பாக ஆஜரானது. இது நீதியை பிறழச் செய்யும் செயலாகும்.
ஐகோர்ட்டு தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள் பற்றி பி.வி.ஆச்சார்யா முன்வைத்த வாதங்களில் உள்ள கருத்துகளுடன் முழுமையாக உடன்படுகிறேன். ஏற்கனவே இந்த வழக்கில் எனது வாதங்களில் உள்ள முக்கியமான அம்சங்களை தனியாக எழுத்து வடிவில் கோர்ட்டுக்கு தாக்கல் செய்திருக்கிறேன். அனைத்தையும் பரிசீலனை செய்து ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து இந்த வழக்கில் நீதி கிடைக்க வகைசெய்ய வேண்டும்’’என்று கூறினார்.