டிசம்பர் 12.. மறந்தே போச்சு ..

நடிகை சௌகார் ஜானகி குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் பதிவு இதோ

என் ஆருயிர் நண்பனின் மனம் கவர்ந்த நடிகை சௌகார் ஜானகி..

வழக்கமான நடிகைகளின் வாழ்க்கை முறைக்கு மாறாக. திருமணமான பிறகு நடிக்க வந்த வித்தியாசமான ஆளுமை.

1940களின் இறுதியில் அறிமுகமாகி ஐம்பதுகளில் பல படங்களில் நடித்தாலும்
அறுபதுகளின் துவக்கத்தில் தான் சௌகார் ஜானகிக்கு மிகவும் ஏறுமுகம்.

அகிலனின் பாவை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியான அந்த கௌரி பாத்திரமும் சரி படிக்காத மேதை ரங்கனின் மனைவி லட்சுமி பாத்திரமும் சரி.. குடும்ப கதைகளில் அடக்க ஒடுக்கமான பாத்திரங்களுக்கு சௌகார் எவ்வளவு பொருத்தமானவர் என்பதற்கு அக்மார்க் சாட்சி.

ஆனால் அதே சௌகார், நடிகர்திலகத்தின் புதிய பறவை படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். ஒன்று மாடர்ன் கேர்ள் கம் அடங்காபிடாரி மனைவி சித்ரா வேடம். இன்னொன்று அதே சித்ரா போல் நடித்து உண்மையை வெளியே கொண்டுவரும் துப்பறியும் போலீசாருக்கு உதவும் வேடம்.

இரண்டிலுமே பின்னி பெடல் எடுத்து இருப்பார் .. பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ பாடலுக்கு சவுகார் மேடையிலேயே பாடியபடி ஆடாமலேயே ஆடியபடி காட்டிய அந்த நளினங்கள்..

பணம் படைத்தவன் படத்தில் எம்ஜிஆருடன், கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா?..என்ற காலத்தால் அழியாத பாடலிலும் மேல்நாட்டு நாகரிகத்தில் மிதக்கும் பெண்ணாக அவர் வெளிப்படுத்திய பாங்கும், அதே மேல்நாட்டு நாகரிகத்தாலேயே கடைசியில் பலியாகிற விதமும் ஆரம்பத்தில் வெறுப்பை உமிழ்ந்த ரசிகர்களையே கண் கலங்க வைத்துவிடும்.

பார் மகளே பார், பாக்கியலட்சுமி பெற்றால்தான் பிள்ளையா, எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள், காவியத்தலைவி..என எம் ஜி ஆர் சிவாஜி ஜெமினி தலைமுறைகளோடு எத்தனையோ காவியத்துவம் வாய்ந்த படங்கள்.

அடுத்த தலைமுறை நடிகர்களான கமல் ரஜினி பயணத்திலும் சவுகார் தனி முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.

ரஜினியின் தில்லுமுல்லு படத்தில் சினிமாப் பைத்தியமாய் திகழும் கோடீஸ்வரி மீனாட்சி துரைசாமி கேரக்டரில் தேங்காய் சீனிவாசனை தன் பங்குக்குப் பாடாய்ப் படுத்திய அந்த காமெடி, சௌகாரின் திரை வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம்..

சின்ன கேரக்டரில் வந்தாலும் அதனை மறக்க முடியாத அளவுக்குச் செய்து விடுவதில் சௌகார் ஜானகி படு கில்லாடி.

கே பாலச்சந்தரின் புதுப்புது அர்த்தங்கள், கமல் நடித்த வெற்றி விழா. இரண்டுமே கோவாவைக் கதைக்களமாகக் கொண்டு அங்குப் படம்பிடிக்கப்பட்டவை.

புதுப்புது அர்த்தங்களில் பூர்ணம் விஸ்வநாதன் மனைவியாக டயனோரா டிவி விளம்பரத்தை ரசிகர்கள் மறக்கமுடியாமல் இருக்குமளவிற்குச் செய்திருப்பார். அதேபோல வெற்றி விழாவில் கோவா வில்லன் சமுத்திரம் என்ற பாத்திரத்துக்குப் பயப்படும் அந்த மறக்கமுடியாத ஹீரோயினின் பாட்டி.. நச்செனச் செய்திருப்பார் சௌகார்..

இன்று 88 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் அவர் வாழ்வாங்கு வாழட்டும்….