திரைக்கு வராத உண்மைகள்: 5

 

27121609.cms

விசு நடித்து டி பி. கஜேந்திரன் இயக்கிய ‘வீடு,மனைவி, மக்கள்’ படத்தில் உதவி இயக்குநராக நான் பணிபுரிந்தபோது, படத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஜவஹர். ரஜினிகாந்த் நடித்த, “எல்லம் உன் கைராசி” படத்திலும் பின்னாளில் ‘அண்ணாமலை”, :முத்து” படங்களிலும் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றியவர். நானும் அவரும் அறைத் தோழர்கள். நான்காண்டுகளுக்கு முன் திடீரென ஜவஹர் காலமாகிவிட்டார்.

நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். முன்பு ஒருமுறை அவர் சொன்ன சம்பவம் ஒன்று:

‘’ரஜினி நடித்த எல்லாம் உன் கைராசி’படத்தின் போது ஒரே ஒரு காட்சிக்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் டிரஸ் தயாரித்தோம். காட்சியும் படமாகி விட்டது.

ஆறுமாதம் கழித்து படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியபோது, கதையைக் கொஞ்சம் மாற்றும்படி ஆகிவிட்டது.

மாற்றப்பட்ட கதையின்படி கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி அந்த ஸ்பெஷல் டிரஸ்ஸுடன் ஃபைட், செய்ய வேண்டும். அதாவது முதல் காட்சியின் தொடர்ச்சி [கண்டினியூட்டி ] கிளைமாக்ஸ் காட்சியாகிவிட்டது.

சண்டைக் காட்சி என்பதால் ரஜினிக்கு டூப்பாக நடித்த ஸ்டண்ட் நடிகருக்கும் அதே மாதிரி டிரஸ் தயரித்தாக வேண்டும். ஆனால் நாங்கள் எவ்வள்வோ முயன்றும் அதே டிசைன் துணி எங்கும் கிடைக்கவில்லை. இதனால் ‘டூப்’ நடிகருக்கு டிரஸ் தைக்க முடியவில்லை. படப்பிடிப்புக்கு ரஜினியும் வந்துவிட்டார்,

அவரிடம் பிரச்சினையை எப்படிச் சொல்வது?

வேறு வழியில்லை என்ற நிலையில் அவரிடம் போய், பிரச்சினையைச் சொல்லிவிட்டேன். ‘’முடிந்தவரை முயற்சி பண்ணுங்க இல்லைன்னா பாத்துக்கலாம்’’ என்றார்.

‘’பார்த்துக்கலாம் என்றால்…?

‘’ஒருவேளை முதல் காட்சியையும் வேறு டிரஸ் போட்டு ரீ-ஷீட் செய்யச் சொல்வாரோ?

டைரக்டர் எம்.ஏ.திருமுகத்திடம போய் சோன்னேன். டைரக்டர் யோசித்தார். என்னதான் முடிவு?

“ரஜினிக்கு முதலில் அந்த டிரஸ்ஸைப் போட்டு அவர் ஷாட்டுகளை எல்லாம் முதலில் எடுத்து விடுவோம். அவர் போனதும் அந்த டிரஸ்ஸை டூப்புக்கு போட்டு டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுத்து விடுவோம்’’ என்றார், டைரக்டர்.

படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் ரஜினி சம்பந்தப்பட்ட ஷாட்களாகவே எடுத்துக் கொண்டிருந்தோம்.

டூப் நடிகர் தூரத்தில் சும்மா நின்று கொண்டிருந்தார். அதை ரஜினி கவனித்து விட்டார். டைரக்டரிடம்,’’ஏன் டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுக்காமலேயே இருக்கிறீர்கள்?’’என்று கேட்டார்.! விஷயத்தைச் சொன்னோம்.’’ நோ!நோ! டூப் நடிகரின் ஷாட்டுகளையும் கூடவே எடுத்துருங்க. அதுதான் நல்லது‘’ என்ற ரஜினி, தானே தனது டிரஸ்களைக் கழற்றி டூப் நடிகருக்கு அணிவித்தார்! டூப் நடிகரின் ஆக்‌ஷனைப் படம்பிடித்ததும் ரஜினி தானே அந்த நடிகரின் உடையைக் கழற்றி, தனக்கு அணிந்து கொண்டார்.

இப்படியே ஒரே டிரஸ்ஸை ரஜினியும் டூப் நடிகரும் மாறி, மாறி போட்டுக் கொண்டு நடித்தார்கள்.

இதற்காக ரஜினி கோபப்படவோ, ஏன்.. குறைந்த பட்சம் முகம் சுளிக்கவோ கூட இல்லை. அதுதான் அவரதுப் பெருந்தன்மை.

அதேபோல அன்றும் சரி, :அண்ணாமலை”யில் நடிக்கும் மிக உயர்ந்த நிலைக்கு அவர் சென்றுவிட்ட நிலையிலும் சரி, தனக்கென்று ஸ்பெஷலாக எந்த சாப்பாடும் கேட்க மாட்டார். கம்பெனியில் கொடுப்பதை சாப்பிடுவார். படப்பிடிப்புக்கு வந்தால் சில ஹீரோக்கள், “காட்சி என்ன?” என்றே கேட்க மாட்டார்கள். ஷாட்டுக்கு வந்த பிறகுதான் கேமிரா முன் நின்றுகொண்டு, “என்ன வசனம்?” என்று கேட்பார்கள்,

ஆனால் ரஜினி படப்பிடிப்புக்கு வந்ததும் முதலில் அசிஸ்ட்டண்ட் டைரக்டரைத்தான் கூப்பிடுவார். “என்ன காட்சி என்ன,வசனம்?” என்று விரிவாக கேட்பார்.

அவருக்கு ஏதேனும், ஐடியா தோன்றினால், “இப்படி வச்சுக்கிலாமா?” என்று கேட்ப்பார். “ஓ.கே” என்றால், சேர்த்துக்கொள்வார். அதே ரஜினியைத்தான், “அண்ணாமலை”, “முத்து” படங்காளிலும் பார்த்தேன். வந்தவுடன் காட்சி, வசனம் பற்றி கேட்பார்.

அ;ப்படி ஒரு காட்சிக்கு அவர் சொன்ன மாற்றம் எனக்குப் பிடிக்கவில்லை,. நான் பயப்படாமல், “நன்றாக இல்லை” என்று அவரிடமே சொல்லிவிட்டேன்.

பிறகு தயாரிப்பு நிர்வாகி நடராஜனிடம் சொன்னார். அவருக்கும் ரஜினி சொன்ன மாற்றத்தில் உடன்பாடு இல்லை. பிறகு டைரக்டரிடம் சொன்னார். அவரும் ‘’அது சரி வருமா?” என்று தாடையை ;சொரிந்தார்.

முடிவு?

ரஜினி தன் ஐடியாவை வாபஸ் வாங்கிக் கொண்டார். வேறொரு நடிகராக இருந்தால், தன் கருத்துக்கு மற்றவர்கள் ஜால்ரா போட வேண்டும் என்று விரும்புவார், தன் கருத்தை தன் மீது திணித்தே தீருவார்.

ரஜினியோ,’’ ஒத்து வரவில்லையோ? விட்டுடு!’’ என்பார். அதுதான் ரஜினியின் பாணி. வேறு சில ஹீரோக்களின் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறேன். “ஷாட் ரெடி” என்று நடிகரைப் போய் கூப்பிட்டால் அவர் அப்போதுதான் யாருடனாவது சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்பார். ‘இதோ வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு தன்னைப் பார்க்க வந்தவருடன் பேசிக் கொண்டே இருப்பார்.

பிறகு, ஆற, அமர வருவார். சில நடிகர்கள், அவர்கள் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது போய் கூப்பிட்டால் நம்மைக் கோபத்துடன் பார்ப்பார்கள். படப்பிடிப்பு ஒரு இடத்தில் நடக்கும், அவர்கள் வேறு ஒரு இடத்தில் போய் ஹாயாக உட்கார்ந்திருப்பார்கள்.

ரஜினியிடம் அந்த பிரச்சனையே கிடையாது.; படப்பிடிப்பில் ஷூட்டிங் நடப்பதைப் பார்த்துக் கொண்டே சற்றுத்தூரத்தில் உட்கார்ந்திருப்பார். யாருடனாவது பேசிக் கொண்டிருந்தாலும் அவர் கவனம் முழுவதும் யூனிட் மீதே இருக்கும். அசிஸ்ட்டண்ட் டைரக்டர் போய் “ஷாட் ரெடி” என்று வாய்திறப்பதற்குள்ளாகவே, ‘’என்ன ரெடியா?’’ என்று உடனே எழுந்து வந்து விடுவார். சில் சமயம் டைரக்டர் ‘’ஷாட்ரெடி! ஆர்ட்டிஸ்ட்டைப் போய் அழைத்துவா’’ என்பார். நாம் ரஜினியை அழைக்க அவரை நோக்கி ஒர் அடி எடுத்து வைக்கும் போதே, அதைக் குறிப்பால் உண்ர்ந்து ரஜினி, அவரே நாற்காலியை விட்டு எழுந்து விடுவார்.

அவரோடு பேசிக் கொண்டிருக்கும் மனிதர் யாராக இருந்தாலும் சரி, ஷாட்டை நடித்து முடித்துவிட்டுத்தான்   மீண்டும் போய் பேசத் தொடங்குவார்.

அதே போல காலையில் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வந்துவிடுவார். ஒரு அரைமணி நேரம் தாமதம் என்றால் உடனே போன் செய்து தகவல் சொல்லிவிடுவார். டைரக்கடரும் அவருக்காக காத்திராமல் வேறு நடிகர்களுக்குரிய “ஷாட்”களை படம் பிடிப்பார்.

டைரக்டர் அவரிடம் ஏதாவது சொல்ல வந்தால், உடனடியாக நாற்காலியிலிருந்து எழுந்து நின்று கொள்வார். உதவியாளர், டைரக்டருக்கு வேறு நாற்காலி கொண்டுவந்து போட்டு டைரக்டர் உட்காரந்த பிறகுதான் அவரும் உட்காருவார். பெரிய டைரக்டரிடம் மட்டுமல்ல.. புதிய இயக்குநர்களுக்கும் இந்த மரியாதையை அவர் வழங்க தவறியதே இல்லை.

1288113345_rajini-kamal-2

ஒரு டான்ஸ் காட்சியின் போது டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த டான்ஸ் மூவ்மெண்ட்டை ரஜினியால் செய்ய முடியவில்லை கஷ்ட்டப்பட்டார். மாஸ்டரிடம், “நான் கண்டக்டராக இருந்தவன் . ஏதோ கடவுள் கிருபையால் ஸ்டார் ஆயிட்டேன். கமல்ஹாசன் நன்றாக டான்ஸ் பண்ணக்கூடியவர் அவருக்கு இது போல மூவ்மெண்ட் கொடுத்தால் நியாயம்! எனக்கு கொடுத்து கஷ்டப் படுத்தறீங்களே’’ என்றார் சிரித்துக் கொண்டே.

மாஸ்டர் உடனே ‘இந்த ரிஸ்க் மூவ்மெண்ட் வேண்டாம். இன்னும் கொஞ்சம் ஈஸியான மூவ்மெண்ட் தருகிறேன்” என்றார்.

ரஜினி உடனே, “இல்லையில்லே.. நான் சும்மா சொன்னேன். எப்படியும் முயற்சி பண்ணி ஆடிடறேன்” என்று கூறிவிட்டு, அதே போல அந்த மூவ்மெண்ட்டை நன்றாக செய்தார்.

அவர் கண்டக்டராக இருந்த வாழ்க்கையை இன்னும் மறக்காமல் இருப்பதையும், அவருக்குப் போட்டி நடிகராகிய கமலஹாசனின் திறமையை மனதைர புகழ்ந்ததையும் கண்டு நான் வியந்துபோனேன்” என்றார் ஜவஹர்.

(தொடரும்)

ஆர்.சி.சம்பத் அலைபேசி எண்: 97907 52183