புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வீட்டை விட்டு வெளியே வரும்போது மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இதுதொடர்பாக, மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதால் மும்பையில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதை கடைப்பிடிக்கத் தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்லும் மக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல், தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டைவிட்டு வெளியே வரும் பொதுமக்கள் இனி கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், உத்தர பிரதேசம், சண்டிகர், நாகலாந்து, ஒடிசாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.