கோலாலம்பூர்: பாமாயில் தயாரிக்க உதவும் எண்ணைய் பனை தாவரத்தைப் பயிரிடும் நிலப்பரப்பை விரிவாக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க, மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலப்பரப்பு விரிவாக்கம், காடுகளின் அழிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்பதாக உலகளவில் எழுந்துள்ள குற்றச்சாட்டை கைவிடக்கோரியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்த 2019ம் ஆண்டில் மட்டும், 6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தில், எண்ணெய் பனை பயிரிடும் நடவடிக்கை நிறுத்தப்படவுள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய பாமாயில் உற்பத்தி நாடான மலேசியாவிலுள்ள உற்பத்தியாளர்கள், பாமாயில் உற்பத்திக்கான எண்ணெய் பனை பயிரிடுதலை விரிவாக்குவதால், வெப்பமண்டல மழைக்காடுகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி, அதனால், பல அபூர்வ உயிரினங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது என்பதாக நிலவும் எதிர்மறை கருத்துக்களை தீவிரமாக எதிர்த்து அகற்ற முடிவுசெய்துள்ளனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் கடந்த பல பத்தாண்டுகளாகவே உள்ளன.

கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் கமிஷன், ஒரு சட்டம் கொண்டுவந்து, அதன்படி, யூனியனின் உயிர்எரிபொருட்கள் இலக்கு பட்டியலிலிருந்து, பாமாயில் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இது, உலகின் முதன்நிலை பாமாயில் உற்பத்தியாளர்களான மலேசியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் உற்பத்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனையொட்டியே, மலேசிய அரசின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஐரோப்பிய யூனியனால், பாமாயில் முற்றிலும் தடைசெய்யப்படும் ஆபத்து தவிர்க்கப்படும். மேலும், பாமாயிலை தடைசெய்வதால் ஏற்படக்கூடிய மோசமான எதிர்மறை விளைவுகள் குறித்தும் அந்நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

– மதுரை மாயாண்டி