letter1
திமுக தலைவர் கலைஞர் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில்,
’’சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்ன பொய்களின் தொடர்ச்சியாக, விருத்தாசலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கம் போல தன்னால் முடிந்த அளவு பொய்களைச் சொல்லத் தவறவில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள “உதய்” திட்டத்தில் தமிழக அரசு பங்கு பெறாதது குறித்து ஒரு சில மத்திய அமைச்சர்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தமிழக அரசைக் குறை கூறி வருகின்றனர் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். மத்திய அரசின் “உதய்” திட்டத்தில் தமிழக அரசு பங்கு பெறாதது பற்றி மத்திய அமைச்சர் கூறிய குறைகளைத்தான் நான் எடுத்துக்காட்டி, இதற்கு முதல் அமைச்சரின் பதில் என்ன என்று கேட்டிருந்தேனே தவிர, “உதய்” திட்டத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ எனது கருத்து எதையும் நான் கூறவே இல்லை. அப்படிக் கூறாத நிலையில், ஜெயலலிதா ஏன் நிழல் யுத்தம் நடத்தியிருக்கிறார்?
மத்திய அமைச்சர் ஜவடேகர் தனது பேட்டியில் கூறும்போது, “தமிழக மின் வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் திருட்டு அதிகரித்து வருகிறது. அப்படி இருந்தும் தமிழகத்தில் மின்சாரத் துறையை நட்டத்திலிருந்து மீட்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் மத்திய அரசின் “உதய்” எனும் திட்டத்தைச் செயல் படுத்த மாநில அரசு முன்வரவில்லை. இத்திட்டத் தைப் பின்பற்றும் மற்ற மாநிலங்கள் நல்ல பலனைப் பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களில் செயல்படுத்தியதன் மூலம் 1.80 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. நியாயமான நுகர்வோர் பயன் பெறுவதைத் தமிழக அரசு விரும்பவில்லை” என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பதை, நான் எடுத்துக்காட்டி, இதற்கு முதல் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென்றுதான் எழுதியிருந்தேன். எனது அறிக்கையில் “உதய்” திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் கூறவில்லை. மத்திய அமைச்சர்கள் அந்தத் திட்டத்தைப் பற்றி தமிழக அரசு மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டிற்கு என்ன விளக்கம் என்றுதான் நான் கேட்டிருக்கிறேன
இந்தத் திட்டம் பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ள ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பேட்டியளித்தவுடன் அப்போதே பதில் கூறியிருக்கலாமே? அப்படிப் பதில் கூறியிருந்தால் பிரச்சினையே எழுந்திருக்காதே! அப்போது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு, தற்போது விருத்தாசலத்தில் போய் என் மீது பாய்வானேன்? பேசுவதற்கு வேறு பொருள் இல்லை என்பதால், ஜெயலலிதா, நான் சொல்லாததைச் சொன்னதாகக் கற்பனை செய்து கொண்டு பதில் கூறியிருக்கிறார்.
மேலும் நேற்றையதினம் (13.4.2016) திருச்சிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர், பியுஷ் கோயலிடம் ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி கேட்டபோது, “மாநில அரசின் பிடிவாத குணத்தால் என்னால் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லை. இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள அய்யப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இணைச் செயலாளர் தலைமையிலான குழுவை அனுப்பியிருந்தேன். மாநில அரசு கேட்ட கேள்விகளுக்கு அவர்களும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்கள். “உதய்” திட்டம் தொடர்பாக ஜெயலலிதா அளித்துள்ள விளக்கம் ஆதார மற்றது; தவறானது” என்று மத்திய அமைச்சர் தெளிவாக்கியிருக்கிறார். மத்திய அமைச்சரும், தமிழக முதலமைச்சரும் மாறி மாறி இந்தத் திட்டம் பற்றி கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்களே, இதன் உண்மை நிலை என்ன என்று மக்களுக்குத் தெளிவாக்க வேண்டாமா என்றுதான் நான் கூறியிருந்தேன்.
பா.ஜ.க. வின் தேசியத் தலைவர் அமித்ஷா திருச்சியில் செய்தியாளர்களிடம் 13.4.2016 அன்று பேசும் போது, “மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு பல சாதனைத் திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தது. ஆனால் மாநில அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், ஏழைகள் காப்பீடு திட்டம் போன்றவை மாநில அரசு ஒத்துழைக்காததால் அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை. இந்தியாவிலேயே தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக உள்ளது. ஊழல் மிகுந்த ஆட்சி தமிழகத்தில்தான் நடைபெறுகிறது” என்று தமிழக அரசு மீது அமித்ஷா குற்றஞ்சாட்டி யிருக்கிறாரே, அதற்காவது முதலமைச்சர் ஜெயலலிதா உரிய பதிலைக் கூற வேண்டாமா?
மத்திய அமைச்சர்கள் தங்களால் முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க இயலவில்லை என்று ஒருவர் அல்ல, இரண்டு மூன்று பேர் தொடர்ந்து கூறியதற்கு, வெங்கைய நாயுடு சந்தித்தார் என்று ஜெயலலிதா பூசி மெழுகியதோடு, மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவை அவ்வப்போது சந்தித்தார்கள் என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அறிக்கை கொடுத்துவிட்டார் என்றும் கூறி, அதுதான் பதில் என்று விருத்தாசலத்தில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சர்களை விழாக்களிலும், வேறு சில நிகழ்ச்சிகளிலும் சந்தித்த விவரங்களையெல்லாம் அறிக்கையாகக் கொடுத்தி ருக்கிறாரே தவிர, தமிழகத்தின் தேவைகளுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சர்களை எவ்வெப்போது சந்தித்தார் என்ற விவரங்களை ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலே தெரிவிக்கவில்லை என்பதை ஜெயலலிதா வசதியாக மறைத்துவிட்டார்.
மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் இன்னும் அறிக்கை அனுப்பவில்லை என்று கருணாநிதி கூறியிருப்பதும் பொய்யான குற்றச்சாட்டு என்று ஜெயலலிதா பேசியி ருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டையும் ஜெயலலிதா மீது நான் கூறவே இல்லை. நான் கூறியதெல்லாம், “மத்திய அமைச்சர் மேலும் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக அதைச் சுற்றியுள்ள தமிழகம் உள்பட 7 மாநிலங்களின் அறிக்கை கேட்கப்பட்டது. இதில் 6 மாநிலங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் இதுவரை எந்தவிதமான அறிக்கையும், பதிலும் அளிக்கவில்லை. நான் நூற்றுக்கும் மேற்பட்ட முறை தமிழக முதல்வரைச் சந்திக்க முயன்றும், சந்திக்க முடியவில்லை” என்றெல்லாம் மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது சாதாரணமான குற்றச்சாட்டு அல்ல; தமிழக அரசின் மீதும், முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டு” என்றுதானே தவிர நானாக இந்தக் குற்றச்சாட்டைக் கூறவே இல்லை என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா அவருடைய அலுவலகத்தில் பழைய நாளேடுகள் இருந்தால் எடுத்துப் பார்த்து, அந்தக் குற்றச்சாட்டைக் கூறியது யார் என்பதை இனியாவது புரிந்து கொள்வது நல்லது. ஜெயலலிதா இப்படி மத்திய அமைச்சர்களைச் சந்திக்க மறுத்தது இருக்கட்டும்; தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் “பறந்து சென்று” பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, இந்த ஐந்தாண்டுகளில் மாவட்டங்களுக்கு நேரில் சென்று எத்தனை முறை மக்களைச் சந்தித்துப் பேசினார்?
எல்.ஈ.டி. பல்புகள் பற்றி நான் குழப்பிக் கொண்டு கேள்விகளைக் கேட்டிருப்பதாக ஜெயலலிதா விருத்தாசலத்தில் பேசியிருக்கிறார். எல்.ஈ.டி. பல்புகளைப் பற்றி நான் குழப்பிக் கொள்ளவில்லை. மத்திய அமைச்சர் கூறும்போது, “மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 100 ரூபாய் விலையில் எல்.இ.டி. பல்புகளை வழங்குகிறது. அப்படி இருந்தும் தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக வெளி மார்க்கெட்டில் எல்.இ.டி. பல்புகளைத் தமிழக அரசு வாங்கி வருகிறது. இதிலிருந்து தமிழக அரசு அதிக விலைக்கு விற்பவர்களுக்கு சாதகமாகச் செயல்பட்டு வருகிறது என்பது நிரூபணமாகியுள்ளது” என்றும் ஆதாரப் பூர்வமாக தமிழக அரசின் மீது ஊழல் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதற்கு என்ன விளக்கத்தைத் தமிழக அரசு கூறுகிறது என்றுதான் எனது அறிக்கையிலே கேட்டிருக்கிறேன். முதலமைச்சர் ஜெயலலிதா, எல்.இ.டி. பல்புகள் பற்றி ஆங்கில நாளேடுகளிலும், ஜூனியர் விகடன் இதழிலும் என்னென்ன எழுதப்பட்டிருக்கின்றன என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல், அவற்றில் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்று நான் எடுத்து எழுதியிருந்ததையும் ஒழுங்காகப் படித்து தெரிந்து கொள்ளாமல், அந்தத் திட்டம் பற்றி எனக்குப் புரியவில்லை என்று, எல்லாம் தனக்குத் தெரியும் என்ற அகந்தையோடு பேசியிருக்கிறார், ஜெயலலிதா. அதே பாணியில் பதில் சொல்வது எளிது. அது என்னுடைய வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்புடையதல்ல.
மக்களிடமிருந்து வாக்குகளை வாங்குவதற்காகத் தேர்தல் முடியும் வரை ஜெயலலிதா “உங்களால் நான், உங்களுக்காக நான்” என்று உருகுவார்; தேர்தல் முடிந்து வெற்றி பெற்று அரியாசனத்தில் வீற்றிருந்த வரை, “எனது அரசு, நான் ஆணையிட்டேன்” என்று “இனி எல்லாம் நான், நான், நானேதான்” என்ற சர்வாதிகார பாணியில் ஆணவத்தின் நுனிக் கொம்பேறி சதிராடியதைத் தமிழக மக்கள் மறந்து விட வில்லை. “ஒரு தாய்க்குத் தன் பிள்ளைக்குத் தேவையானது தெரியும். எனவே உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது இந்தத் தாய்க்குத் தெரியும்” என்று விருத்தாசலம் பொதுக் கூட்டத்தில் தாய்(?) வேடம் போட்டிருக்கிறார்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று தமிழ கத்துத் தாய்மார்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்திய போது, அவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவியதும், கைது செய்ததும் தான், ஒரு தாய் தனது பிள்ளைகளை நடத்தும் விதமா? மின் வெட்டு – மின் பற்றாக்குறையால் தேர்வுகளுக்குத் தயாராகும் மகளிர் முறையாகப் படிக்க முடியாமல் அவர்களுடைய படிப்பைப் பாழாக்கியது தான், ஒரு தாய் தன் பெண் குழந்தைகளின் தேவையறிந்து செய்யும் உதவியா?
நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், அவற்றைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், 20 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கனுப்பியதன் காரணமாக ஆயிரக்கணக்கான தாய் மார்களும் பெண் குழந்தைகளும் ஆற்றாது அழுத கண்ணீர்தான், ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தே வழங்கிய பரிசுப் பொருளா?
ஒரு தாயின் ஆட்சியில்தான், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2335 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்; பெண்களுக்கெதிராக இருபதாயிரத்திற்கும் அதிகமான குற்றங்கள் நடந்திருக்கின்றன; என்பவை தான் தாயின் தகைமைக்குச் சான்றுகளா? ஒரு தாயின் கீழ்ப் பணியாற்றி வந்த தலித் பெண் போலீஸ் அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டாரே, ஏன்?
செயற்கைப் பேரிடராய் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இலட்சம் தாய்மார்கள் தங்க ளுடைய உறையுளையும் உடைமைகளையும் இழந்து அகதிகளாகி ஆற்றவியலா அல்லல்களுக்காளாகி அலைக்கழிக்கப்பட்டார்களே; அது இந்தத் தாய்க்குத் தெரிந்தேதான் நடந்ததா? வெறும் வாய்ச் சொல்லால் “தாய்” என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்வதால், தாய்மைப் பண்புகள் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளுமா?
“எனக்கென்று தனியே ஏது குடும்பம்?” என்றும் ஜெயலலிதா கேட்கிறார். ஒருவருக்குக் குடும்பம் என்று ஒன்று இருப்பது குற்றமில்லை; எனினும் ஜெயலலிதா தனியாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்? உடன்பிறவாச் சகோதரி, அந்தச் சகோதரியின் ஏராளமான சொந்தங்கள் எல்லோரும் போயஸ் கார்டன் மாளிகையில்தானே வசிக்கிறார்கள்? அங்கிருந்து கொண்டுதானே பல முனைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்! ஒரு குடும்பம் அல்ல; பல குடும்பங்களை உடன் வைத்துக்கொண்டு, குடும்பம் எனக்கு ஏது என்றால்; குதர்க்கம் என்றல்லவா மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள்!
மதுவிலக்கு பற்றி, அதன் வரலாற்று ரீதியான ஆதாரங்களின் அடிப்படையில், தொடர்ச்சியான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நான் விளக்கமாகக் கூறிய பிறகும், ஜெயலலிதா அவைகளைப் படிக்காமலேயோ, அல்லது படித்ததை மறைத்து விட்டோ, திரும்பத் திரும்ப ஒவ்வொரு கூட்டத்திலும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பதைப் போல, மதுவிலக்கை தி.மு. கழக அரசுதான் ரத்து செய்தது என்று சாதித்து வருகிறார். தமிழக அரசுக்கு அப்போதிருந்த நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மதுவிலக்கை கழக அரசு ஒத்திதான் வைத்தது; அதுவும் ஒரு சில ஆண்டு களுக்குத்தான்! 1974ஆம் ஆண்டு, தி.மு. கழக ஆட்சியிலேயே மது விலக்கு மீண்டும் என்னா லேயே கொண்டு வரப் பட்டுவிட்டது. இப்போது நடைபெற்று வரும் மதுக் கடைகள் முதன் முதலாக அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான். ஆனால் இந்த உண்மையை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு, முதலமைச்சர் பதவியிலே இருப்பவர் ஊருக்கு ஊர் சென்று சொன்ன பொய்களையே மீண்டும் சொல்லி மக்களை ஏமாற்ற நினைப்பது சரிதானா? பொய்களைச் சொல்வதில், ஜெயலலிதாவுக்கு இருக்கும் தகுதியை யாராலும் விஞ்ச முடியாது!
தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது, மலர்ச்சி தோன்றியிருக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசி வருகிறார். இந்த ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது வளர்ச்சியல்ல; இதுவரை ஏற்படாத தளர்ச்சி! மலர்ச்சியல்ல; பல முனைகளிலும் மக்கள் கிளர்ச்சியே!’’என்று தெரிவித்துள்ளார்.