டில்லி:

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை நீட் அடிப்படையில் வரும் செப்டம்பர் 4ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஓராண்டிற்கு விலக்கு அளித்த மத்திய அரசின் உத்தரவு கேள்விகுறியாகியுள்ளது.

sc

மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், தமிழகத்திற்கு ஓராண்டிற்கு விலக்கு அளிக்கும் மத்திய அரசின் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். ஓராண்டு விலக்கு அளிக்கும் முடிவை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த முடிவு சட்ட ரீதியாக செல்லாது என்று அட்டார்னி ஜெனரல் அதிகாரிகளை சமாதானப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மூத்த வக்கீல் நளினி சிதம்பரம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நீட் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறவுள்ளது. அவசர சட்டம் தொடர்பாக தமிழக அரசு எவ்வித வாதத்தையும் முன்வைக்கவில்லை.

ஏற்கனவே மாணவர் சேர்க்கை தாமதமாகி வருகிறது. அதனால் கவுன்சிலிங் நடத்த செப்டம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீட் தொடர்பான மேல்முறையீடு அனைத்தையும ஆண்டவன் தான் பார்க்க வேண்டும்’’ என்றார்.

ஆகஸ்ட் 22ம் தேதி அன்று மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பான நிலையை தெரியபடுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசும் இணைந்து நீட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கும், மாநில கல்வி முறையில் பயின்றவர்களுக்கும் உரிய தீர்வு காண நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 13ம் தேதி, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டிற்கு விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில், ‘‘இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரையும், சுகாதார துறை அமைச்சர் நாடாவையும் சந்தித்துள்ளார். தமிழக அரசு நீட் தேர்வுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து ஓராண்டிற்கு விலக்கு கோரினால் அதை மத்திய அரசு பரிசீலிக்கும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட்டில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் கடந்த 14ம் தேதி தமிழக அரசு அவசர சட்ட மசோதாவை வடிவமைத்து மத்திய அரசிடம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.