சென்னை:

மிழக பாஜக வேட்பாளர் பட்டியல் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவால் நேற்று லீக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கடுப்பான தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக தலைவர் நானா அவாரா? வேட்பாளர் பெயரை அறிவிக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது என்று ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 17-ம் தேதி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோயம்புத்தூர் என பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளும் வெளியிடப்பட்டன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை எச்.ராஜா நேற்று வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக பாஜகவில், அதிகாரப்போட்டி மட்டுமின்றி ஜாதிய ரீதியிலான போட்டிகளும் தீவிர மடைந்து  வருகின்றன. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக எச்.ராஜா, எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம் போன்ற வர்கள்  கொடிபிடித்து வருகின்றனர். தமிழிசையை நீக்கிவிட்டு, தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், எச்.ராஜா நேற்று தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இது அதிகாரப்பூர்வமான பட்டியல் என்று கூறப்பட்டது. ஆனால், டில்லி பாஜக தலைமையோ, தமிழக பாஜக தலைமையோ அறிவிக்காத நிலையில் பட்டியலை அவர் வெளியிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனையறிந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, எச்.ராஜாவை கடுமையாக சாடினார். ராஜா வரம்புமீறி செயல்படுவதாகவும், கட்சிக்குத் தலைவர் நானா இல்லை அவரா என்று கூறியவர்… தன்னிச்சையா அறிவிக்குறதுக்கா மேலிடப் பார்வையாளர், தேர்தல் பொறுப்பாளர், கட்சித் தலைவர்னு இத்தனை பேரு இருக்கோம் என கொந்தளித்துள்ளார்.

எச்.ராஜா   மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழிசை இந்த விவகாரத்தை, தமிழக பாஜக பொறுப்புகளை கவனிக்கும்   முரளிதரராவ், பியூஷ் கோயல் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு வங்கிகள் இல்லாத நிலையில், தற்போது நடைபெற்று உள்கட்சி மோதல் காரணமாக, பாஜக விரைவில் சவக்குழிக்குள் சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை…